search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "church"

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
    • கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது

    'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் மார்ச் 5-ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்ஷன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

    சர்ச்சைக்கு உள்ளான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

    கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். அங்கு அண்மை காலமாக குறிப்பிடத்தக்க கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆகையால் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    • இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர்.
    • பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார்.

    எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப்பிறப்பு, கீழ் குடிப்பிறப்பு எனும் மறைமுக யுத்தம் சமூக வெளிகளில் மட்டுமன்றி திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில திருச்சபைகளில் இது வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறைமுகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.

    இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர். அதனால் தான் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், பெண்களின் சமூக அங்கீகாரம் மேம்படவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு வழங்கவும் அவர் போராடினார். அவருடைய போராட்டம் உயர்ந்தோர் என தங்களைக் கருதிக்கொள்வோரை பாராட்டுவதாய் இருக்கவில்லை. அல்லது தாழ்ந்தோராய் தள்ளிவிடப்பட்டோரை உதாசீனம் செய்வதாய் இருக்கவில்லை. `பாரபட்சம் பார்க்கவேண்டாம்' என அறைகூவல் விடுப்பதாய் இருந்தது.

    அதனால் தான் அவர், `பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார், தீட்டு என ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தொட்டு சுகமாக்கினார், சமூகத்தால் விலக்கப்பட்ட வரி தண்டுவோரை தனது நெருங்கிய சீடராக மாற்றினார்'. அதேநேரம் நான் மறை நூல் வல்லுநர், நான் குருவானர், நான் உயர்ந்த பரிசேயன் என்றெல்லாம் மமதை கொண்டு திரிந்தவர்களைக் கடுமையாக சாடினார்.

    யார் உயர்குடி பிறப்பு? விவிலியம் இதற்கு ஒரு அருமையான புதிய விளக்கத்தை தருகிறது.

    "கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது" என்கிறது சாலமோனின் ஞானம் 8:3.

    அதாவது "கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு" என்கிறது பைபிள். அப்படியானால் இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு வாழ்வது கீழ்குடி பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.

    உயர்குடியும், தாழ்குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறி வாழலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியை தேர்வு செய்யலாம். இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு என்பது அவரைப்போற்றிப் பாடுவது அல்ல. அவர் தருகின்ற மேலான போதனைகளை செயல்படுத்தும்படி வாழ்வது.

    `உங்கள் கனிகளைக் கொண்டே மக்கள் உங்களை அடையாளம் காண்பார்கள்' என்றார் இயேசு. கனி கொடாத பழ மரங்களால் பயன் ஏதும் இல்லை. அவை எவ்வளவு தான் செழித்து வளர்ந்தாலும் மக்களின் பசியை தணிப்பதில்லை. நமது உள்ளத்தில் இறைவனின் போதனைகள் பதியமிடப்பட்டு, செயல்களில் மனித நேயம் வெளிப்படுவதே உண்மையான உயர் குடி வாழ்வு. மனித நேயப் பணிகளே கனிகள்.

    அப்படிப்பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மை இழக்கிறது.

    பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்கு பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலை செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா? என்பதே முக்கியம். அதை வைத்தே அளவிடப்படுவோம் என்பது அழகான ஒரு ஆன்மிகப் பாடம்.

    ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு "செடியில் நிலைத்திருக்கும் கிளைகள்" என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. கிளை தனியே நறுக்கப்பட்டால் அதற்குத் தேவையான நீரும் சத்துகளும் கிடைக்காது. அது வெயிலில் காய்ந்து விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்குத் தன்னை அர்ப்பணித்து விடும்.

    ஒன்றுபட்ட வாழ்வு என்பது உடலில் இணைந்திருக்கும் உறுப்புகளைப் போன்றது. எல்லா உறுப்புகளும் ஒன்றாய் இணைந்து செயல்படும் போது தான் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். ஒன்றோடொன்று ஒன்றிக்காமல் இருக்குமானால் அது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடும். ஒன்றுபட்டு வாழும்போது தான் உடல் பல செயல்களைச் செய்ய முடியும். அப்படித் தான் நாம் இறைவனோடு ஒன்றித்து வாழவேண்டும்.

    நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது 'முதல் பிறப்பு' முடிவு செய்வதில்லை, 'இரண்டாம் பிறப்பு' முடிவு செய்கிறது. இறைவனோடு இணைந்து வாழ முடிவெடுப்பதே இரண்டாம் பிறப்பு. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் நமது வாழ்க்கை முழுமையடைகிறது. அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.

    • அங்கு இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
    • இந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது.

    பழங்கால கட்டுமானங்கள் பல ஆண்டுக்கணக்கில் கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எப்படி கட்டி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதில் இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதனை பார்வையிடும் பலரும் எப்படித்தான் இப்படி கலை வேலைப்பாடுகளை செய்திருப்பார்களோ என்று வியப்பில் ஆழ்ந்து போவார்கள். எத்தனை ஆண்டுகளாக கட்டி இருப்பார்கள் என்று யூகிப்பார்கள்.

    ஆனால் நூற்றாண்டுகளை கடந்தும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பழமை மாறாமல் அந்த கட்டுமானத்தை நிர்மாணிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டுக்கணக்கில் கட்டுமானம் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

    அந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது. அது தேவாலயமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. கட்டிடக் கலைஞர் ஆண்டனி கவுடி என்பவர் இந்த கட்டுமானத்திற்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். உலகமே வியந்து பார்க்கும் வகையிலான பிரமாண்டமாக, கலை வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடமாக அமைய வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதற்காக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

    கட்டுமான வரைபடம் தயாரிப்பதற்கு மட்டுமே சுமார் 10 ஆண்டுகாலம் செலவிட்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே கட்டுமான வரைபடம் அமைய, உற்சாகமாக பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் இப்போது போல் கட்டுமான தொழில்நுட்பட்பம் அந்த காலத்தில் இல்லை என்பதால் கட்டுமான பணி மெதுவாக நடந்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தபடி கட்டுமானத்தில் ஒரு பகுதி கூட நிறைவடையாத நிலையில் 1926-ம் ஆண்டு ஆண்டனி கவுடி உயிரிழந்துவிட்டார்.

    அதனால் கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரும் கட்டுமான பணியை பாதிப்புக்குள்ளாகிவிட்டது. போரின்போது கட்டுமான வரைபடத்தை சிதைத்துவிட்டார்கள். அதனால் ஆண்டனி கவுடி திட்டமிட்டபடி கட்டுமானத்தை எழுப்புவது சவாலாக மாறியது. அவர் ஏற்படுத்தி கொடுத்த அடித்தள கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கட்டுமானத்திற்கு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சுணக்கமும் தாமதத்தை அதிகப்படுத்திவிட்டது. இப்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் கட்டுமானத்தை எழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆண்டனி கவுடி தேவாலயத்தின் முகப்பு பகுதிகளை நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரித்துவிட்டார். தேவாலயத்திற்குள் நுழைவதற்கு 3 நுழைவு வாயில்கள் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். அவற்றுள் இரண்டு நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது நுழைவு வாயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேவாலய கட்டுமான பணி 2026-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமான பணி முடிவடையும்போது இது உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறும்.

    ஆண்டனி கவுடி, தேவாலயம் 18 பெரிய, சுழல் வடிவ கோபுரங்களை கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். 12 அப்போஸ்தலர்கள், 4 சுவிசேஷகர்கள், கன்னி மேரி மற்றும் இயேசு என ஒவ்வொரு கோபுரத்திலும் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படியே கட்டுமானம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    நான்கு சுவிசேஷ கோபுரங்களும் 135 மீட்டர் உயரம் (சுமார் 443 அடி) கொண்டிருக்கின்றன. 138-மீட்டர் (453-அடி) உயரம் கொண்ட கன்னி மேரியின் கோபுரத்தின் மேல் 12 ஸ்டார்கள் கொண்ட பெரிய நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த கோபுர கட்டுமானப்பணி 2021-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

    இயேசு கிறிஸ்துவை குறிக்கும் கோபுரம் 172.5 மீட்டர் (566 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1984-ம் ஆண்டில், இந்த கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. 2010-ம் ஆண்டு வழிபாட்டிற்காக பதினைந்தாம் போப் பெனடிக்ட்டால் புனிதப்படுத்தப்பட்டது. இந்த தேவாலயத்தையும், அதன் கட்டுமான பணியையும் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    • முழுமையாக இடிந்துவிழும் முன்பு கிறிஸ்தவ தேவாலாய சீரமைப்பை தொடங்க வேண்டும்.
    • பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள தனுஷ்கோடி இலங் கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. 1910-ம் ஆண்டு காலகட்டத் தில் மீன்பிடி தொழில் அதிக ளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய இலங்கை பகுதியில் வணிக கப்பல்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்த ஆங்கிலேயர் கள் திட்டமிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு பாம்பன் கால்வாய் பகுதியில் ரெயில் பாலம் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக் கப்பட்டது. இதன் பின்னர் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கி யது. இதன் காரணமாக தனுஷ்கோடி மிகப்பெரிய அளவிலான துறைமுக நக ரமாக மாறியது.

    50 ஆண்டுகள் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் கள் போக்குவரத்தில் அதிக ளவில் வியாபாரம் நடை பெற்று வந்தது. 1910-ம் ஆண்டு காலகட்டத்தில் தனுஷ் கடியில் கிறிஸ்தவ தேவாலாயம் கட்டப்பட்டது. 1964 ஆண்டு ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக தனுஷ்கோடி துறைமுக நகரம் சேதமடைந்தது.இதில், தேவாலாயம், ரெயில் நிலை யம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களும் தரை மட்டமானது.

    தனுஷ்கோடியை சீர மைக்க முயன்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தனுஷ்கோடி யின் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ராமேசு வரம் வருகை தருகிறார்கள். அவர்கள் அனைவரும் முகுந்தராயர் சந்திரம் வரை சென்று அங்கிருந்த கடற் கரை வாகனங்களில் சென்று கடற்கரையின் பரந்து விரிந்த அழகை பார்த்து ரசித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தடையின்றி தனுஷ்கோடி வரை சென்று வந்தனர். இதன் காரணமாக ஆண்டுக்கு 2 கோடி பேர் வந்து செல்லும் சுற்றுலா இடமாக தனுஷ்கோடி மாறி யது.

    தனுஷ்கோடியை பழமை மாறமல் ரூ.5 கோடி மதிப் பீட்டில் தேவாலாயம் புதுப் பிபித்தல், சுற்றுலா பயணிக ளுக்கு தேவையான அடிப் படை கட்டமைப்பு களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தனுஷ்கோடி பகுதியை சீரமைக்க மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி களை மேற்கொண்டு வரு கின்றனர்.

    தேவாலாயம் தொடர்ந்து 80 சதவீதம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து சூறைக்காற்று வீசுவதால் முழுமையாக சேதமடைவதற்குள் பழமை மாறாமல் புதுபிக்க பணி களை விரைந்து தொடங்கிட வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
    • ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:

    நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

    ஆரோவில்:

    புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

    பொட்டானிக்கல் கார்டன்:

    புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

    அரிக்கமேடு:

    பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

    இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.

    • திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள் பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து மீஞ்சூர் பஜார் வீதியில் மீஞ்சூர் வட்டார அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் வினோத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ரோமன் கத்தோலிக், இ.சி.ஐ, சி.எஸ்.ஐ, சர்ச் ஆஃப் காட், ஏஜி, ஏசிஏ, சர்ச் ஆப் கிரைஸ்ட், பெந்தகொஸ்தே திருச்சபை உட்பட 50 திருச்சபைகள் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட மீஞ்சூர் பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் திமுக நகரச் செயலாளர் தமிழ்உதயன், துணைத் தலைவர் அலெக்சாண்டர்,அருட்தந்தை அருளப்பா, போதகர்கள் பால் உதயசூரியன் ஜான் ரமேஷ், நெகமியாஜெபராஜ், ஜான் வில்லியம்ஸ், ஜான் ராய், யாபேஸ், ராபர்ட், மாற்கு, ராஜேஷ், ஆகியோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும்.
    • கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியாவின் அம்காரா நகரில் லலிபெலா என்ற இடத்தில் அமைந்துள்ளது, இந்த புனித ஜார்ஜ் தேவாலயம். இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும்.

    இந்த ஆலயம் ஒருவித ஒன்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில், கெம்ரே மெஜ்கல் லலிபெலா அரசின் கீழ் இந்த தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம், கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதியில் சிலுவை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடியும்.

    • அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது.
    • 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையில் புனித பர்த்தலோமையார் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு பால் காய்ச்சுதல், மாலை 5 மணிக்கு கொடிமரம் மற்றும் புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

    இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது. விழாவையொட்டி 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    15-ந் தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல், 10 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகிறார்கள்.

    • சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
    • பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர்.
    • இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம் அமைந்துள்ள இடம் தான் மாத்திரவிளை என்று அழைக்கப்படும் அன்றைய பட்டங்காடு. மாதாவின் அன்பையும், அரவணைப்பையும் உணர்ந்த மக்கள் இவ்விடத்தை மாதா யாத்திரை செய்யும் விளை என்று அழைப்பார்கள். அது மருவியே நாளடைவில் மாத்திரவிளை என பெயர் பெற்றது.

    புனித தோமாவின் வருகை

    புனித தோமா இயேசுவின் சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் உயிர்ப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்து இறை போதனைகளிலும், சிற்பக்கலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இவரது வருகைக்கு பிறகு தான், இவரது போதனையால் நம்பிக்கை பெற்ற மக்கள் சிலர் சிலுவையை மையமாக வைத்து வழிபட தொடங்கினார்கள். கி.பி.1435-க்கு முன் இந்த தோமையார் வழி கிறிஸ்தவர்கள் திறந்த வெளி ஜெபக்கூடம் அமைத்து சுற்றிலும் தீப்பந்தங்கள், விளக்கு தூண்கள் அமைத்து வழி பட்டனர்.

    ஆலயம்

    கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர். கி.பி.16-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் குமரிக்கு வந்தார். சவேரியார் ஊர்-ஊராக சென்று கிறிஸ்தவத்தை போதித்தார். இதனால் உற்சாகமடைந்த மாத்திரவிளை வட்டாரப்பகுதி மக்களும் வழிபாட்டில் முன்னேற்றம் அடைகின்றனர். கி.பி.1555-ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக உருவாக்கி வழிபாடு நடத்தினார்கள்.

    16-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு சேரநாட்டில் தங்களது அரசை நிலைநாட்டுகிறது. இந்த கால கட்டத்தில் தான் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயம் தீக்கிரையாக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் உள் பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதா சொரூபம் எங்கும் காணப்படவில்லை. அந்த சமயம் எங்கும் கொள்ளை நோய் பரவியது. ஒரு நாள் காலை வேளையில் காணாமல் போன மாதா சொரூபம் ஆலய சுவர்களின் உள்ளே நடுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு மக்கள் திகைப்புற்றனர். அன்றைய நாளில் இருந்து கொள்ளை நோயின் வேகம் குறைய தொடங்கியது. எனவே மீண்டும் ஆலயப்பணி தொடங்கப்பட்டு கி.பி. 1615-ல் ஓட்டுக்கூரையிலான சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட கற்சுவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    வேத சாட்சி

    திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் சிறை அதிகாரியாக இருந்த நட்டாலம் நீலகண்டர், டச்சுப்படை தளபதி டிலனாயின் அறிவுரையால் தேவசகாயம் என்று பெயரில் கிறிஸ்தவரானார். அவர் மதம் மாற காரணமாக இருந்ததாக மாத்திரவிளை,மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய அருளப்பன், முத்தப்பன், ஞானப்பிரகாசம், மரிய செபஸ்தியான், சாமியப்பன், ராயன் என்பவர்கள் மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மண்ணின் மைந்தர்கள் அன்றே வேத சாட்சியாக உயிர் தியாகம் செய்து மாத்திரவிளை மண்ணுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    அவர்களின் நினைவாக டிலனாய் தான் வழிபட்டு கொண்டிருந்த மாதா சொரூபத்தை மக்களிடம் வழங்கினார். அந்த சொரூபத்தை தேரில் வைத்து மக்கள் வழிபட்டனர். 1752-ல் சிறிய கோபுரத்துடன் ஆலயத்தை மக்கள் உருவாக்கினார்கள். 1780-ம் ஆண்டிற்கு பின் இவ்வாலயம் ஒரு பணித்தளமாக உயர்ந்து காரங்காடு பங்கின்கீழ் செயல்பட தொடங்கியது. 1825-ம் ஆண்டு அழகிய கோபுரத்துடன் இணைந்த பெரிய ஆலயமானது.

    தனி பங்கு

    1886-ல் ஒரு பங்கு தளமாக உயர்ந்து, முளகுமூட்டின் கிளை பங்காக செயல்பட தொடங்கியது. பரலோக அன்னை என்ற பெயருடன் விளங்கிய இவ்வாலயத்தை 1906-ல் கொல்லம் மறை மாவட்ட ஆயர் பென்சிகர் தனி பங்காக உயர்த்தினார். முதல் பங்குத்தந்தை வின்சென்ட் பெர்னாண்டஸ். ஆலயத்தில் உள்ள புனித ஆரோபண அன்னை சொரூபம் பன்னிரு விண்மீன் முடிசூட ரோமிலிருந்து கொண்டு வரப்பட்டது. இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் பெனடிக்ட் அலெக்சாண்டர் காலத்தில் ஆயர் ஆரோக்கியசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 30-ந்தேதி ஆயர் ஆரோக்கியசாமி அர்ச்சித்தார்.

    புனித ஆரோபண அன்னையின் விழா திருக்கொடியேற்ற நிகழ்ச்சியானது ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடைபெறும். 15-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. அதன் இறுதியில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள். இந்த பங்கின் கீழ் 37 அன்பியங்கள், 1,500 குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
    • சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது.

    வாடிகன்:

    இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை எதிர்ப்பதாக கூறி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் அந்த வாலிபர் தனது உடலில் கைவிரல் நகத்தால் கீறி ஆவேசத்துடன் சத்தம் போட்டார். தனது முதுகு பகுதியில் உக்ரைனில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பெயிண்டால் எழுதி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் இத்தாலி போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது. வாலிபரின் நிர்வாண போராட்டத்தை சுற்றுலா பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    நாகை அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

     இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியே–ற்றத்துடன் தொடங்கியது. 

    முன்னதாக கொடி ஊர்வலம் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

    தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து முடி சூடுவிழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.
     
    இந்நிகழ்ச்சியில் கருங்கண்ணி பங்குத்தந்தை சபரிமுத்து, வேளாங்கண்ணி பேராலய உதவிப் பங்குத்தந்தை டேவிட் தனராஜ், மற்றும் நிகழ்ச்சிகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் பிரான்சிஸ், துணைதலைவர், விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

    ×