search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்ரடா பேமிலியா கதீட்ரல்"

    • அங்கு இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
    • இந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது.

    பழங்கால கட்டுமானங்கள் பல ஆண்டுக்கணக்கில் கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எப்படி கட்டி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதில் இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதனை பார்வையிடும் பலரும் எப்படித்தான் இப்படி கலை வேலைப்பாடுகளை செய்திருப்பார்களோ என்று வியப்பில் ஆழ்ந்து போவார்கள். எத்தனை ஆண்டுகளாக கட்டி இருப்பார்கள் என்று யூகிப்பார்கள்.

    ஆனால் நூற்றாண்டுகளை கடந்தும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பழமை மாறாமல் அந்த கட்டுமானத்தை நிர்மாணிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டுக்கணக்கில் கட்டுமானம் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

    அந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது. அது தேவாலயமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. கட்டிடக் கலைஞர் ஆண்டனி கவுடி என்பவர் இந்த கட்டுமானத்திற்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். உலகமே வியந்து பார்க்கும் வகையிலான பிரமாண்டமாக, கலை வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடமாக அமைய வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதற்காக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

    கட்டுமான வரைபடம் தயாரிப்பதற்கு மட்டுமே சுமார் 10 ஆண்டுகாலம் செலவிட்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே கட்டுமான வரைபடம் அமைய, உற்சாகமாக பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் இப்போது போல் கட்டுமான தொழில்நுட்பட்பம் அந்த காலத்தில் இல்லை என்பதால் கட்டுமான பணி மெதுவாக நடந்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தபடி கட்டுமானத்தில் ஒரு பகுதி கூட நிறைவடையாத நிலையில் 1926-ம் ஆண்டு ஆண்டனி கவுடி உயிரிழந்துவிட்டார்.

    அதனால் கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரும் கட்டுமான பணியை பாதிப்புக்குள்ளாகிவிட்டது. போரின்போது கட்டுமான வரைபடத்தை சிதைத்துவிட்டார்கள். அதனால் ஆண்டனி கவுடி திட்டமிட்டபடி கட்டுமானத்தை எழுப்புவது சவாலாக மாறியது. அவர் ஏற்படுத்தி கொடுத்த அடித்தள கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கட்டுமானத்திற்கு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சுணக்கமும் தாமதத்தை அதிகப்படுத்திவிட்டது. இப்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் கட்டுமானத்தை எழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆண்டனி கவுடி தேவாலயத்தின் முகப்பு பகுதிகளை நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரித்துவிட்டார். தேவாலயத்திற்குள் நுழைவதற்கு 3 நுழைவு வாயில்கள் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். அவற்றுள் இரண்டு நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது நுழைவு வாயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேவாலய கட்டுமான பணி 2026-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமான பணி முடிவடையும்போது இது உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறும்.

    ஆண்டனி கவுடி, தேவாலயம் 18 பெரிய, சுழல் வடிவ கோபுரங்களை கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். 12 அப்போஸ்தலர்கள், 4 சுவிசேஷகர்கள், கன்னி மேரி மற்றும் இயேசு என ஒவ்வொரு கோபுரத்திலும் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படியே கட்டுமானம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    நான்கு சுவிசேஷ கோபுரங்களும் 135 மீட்டர் உயரம் (சுமார் 443 அடி) கொண்டிருக்கின்றன. 138-மீட்டர் (453-அடி) உயரம் கொண்ட கன்னி மேரியின் கோபுரத்தின் மேல் 12 ஸ்டார்கள் கொண்ட பெரிய நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த கோபுர கட்டுமானப்பணி 2021-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

    இயேசு கிறிஸ்துவை குறிக்கும் கோபுரம் 172.5 மீட்டர் (566 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1984-ம் ஆண்டில், இந்த கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. 2010-ம் ஆண்டு வழிபாட்டிற்காக பதினைந்தாம் போப் பெனடிக்ட்டால் புனிதப்படுத்தப்பட்டது. இந்த தேவாலயத்தையும், அதன் கட்டுமான பணியையும் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ×