என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயலலிதா"
- AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
குறிப்பாக AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல்..." என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், "AI -ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா? சார்" என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு செல்லூர் ராஜு, "நண்பரே மன்னிக்கவும் தப்புதான்" என்று தெரிவித்துள்ளார்.
- ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
- வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.36 கோடியே 56 லட்சம் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அதனை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
இதையடுத்து, நோட்டீசை திரும்ப பெற்ற வருமான வரித்துறை, ரூ.13 கோடியே 69 லட்சம் வரி பாக்கியை செலுத்தும் படி புதிய நோட்டீசை அனுப்பியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.பிரதாப், 'வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார். எனவே, வரி பாக்கித் தொகையை செலுத்த முடியாது என தீபா கூற முடியாது' என்றார்.
ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்தியகுமார், 'ஜெயலலிதா வருமான வரிப்பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி என தெரிவித்த வருமான வரித்துறை, பின்னர் ரூ.36 கோடியாக குறைத்தது.
தற்போது, ரூ.13 கோடியே 69 லட்சம் என கூறுகிறது. உண்மையிலே எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்பதை வருமான வரித்துறை தெளிவாக கூறவில்லை' என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு? என்பது குறித்து வருமான வரித்துறை விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
- கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
- 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார்.
முன்னதாக அங்கு முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தை அடைந்தார். அங்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உறுதி மொழி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கழகம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்.
தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம்.
அதற்காக, அயராது உழைப்போம். மீண்டும் கழக ஆட்சி அமைந்திட வெற்றிச் சங்கொலி முழங்குவோம். வீர சபதமேற்கிறோம். 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.
சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியை தொடர்ந்து 2-வது முறையாக, ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்திற்கு, பெருமையைத் தேடித் தந்தவர் அம்மா.
''எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையில் 2026-ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.
இந்த உறுதியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, ரமணா, பா.வளர்மதி, கோகுலஇந்திரா, வாலாஜா பாத் கணேசன், நடிகை கவுதமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்தியா, வி.எஸ்.பாபு, அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், முன்னாள் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் வக்கீல் ஆ.பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, டாக்டர் சுனில், வழக்கறிஞர் சதாசிவம், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, ஏ.எம்.காமராஜ், ஷேக் அலி, குமரி சந்தோஷ், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, வேல் ஆதித்தன், ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன், சைதை சொ.கடும்பாடி, ராணி அண்ணாநகர் கோவிந்தன், பி.டி.சி.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றவர்.
- ஜெயலலிதா மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.
சென்னை:
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்று, மக்கள் இதயங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறேன்.
பெண்கள் முன்னேற்றம், தமிழக நலன், ஒன்றுபட்ட இந்தியா என்று பல வகைகளில் அவர் மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
- இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசியிருப்பார்.
- சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை.
ஈரோடு:
ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-
* அ.தி.மு.க.விற்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
* 45 வயதிற்குட்பட்டவர்கள் மட்டும் தான் பூத் கமிட்டியில் இருக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.
* தன்னை சுற்றி இருப்பவர்களை பலவீனமடைய செய்யும் போது அவர்களும் பலவீனமடைகிறார்கள்.
* நிர்வாகிகளை நீக்கி கொண்டிருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.
* அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசியிருப்பார்.
* சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை.
* அ.தி.மு.க.வின் பலம் தெரியாமல் கொடி பறக்கிறது என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
* நாமக்கல்லில் த.வெ.க. கொடி பறந்தபோது பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என்று இ.பி.எஸ். பேசினார்.
* ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தன் காலிலே சுயமாக நடக்க வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது என்றார்.
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா?
- கொடநாடு விவகாரத்தை வைத்து யார் தி.மு.க.வின் பி டீம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரோடு:
அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2009-ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஒதுக்கப்பட்டார்.
* அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைப்பட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும் என அ.தி.மு.க. நன்மைக்காக பேசினேன்.
* எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இருக்க முடியாது.
* ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.
* எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.
* கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.
* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா?
* கொடநாடு விவகாரத்தை வைத்து யார் தி.மு.க.வின் பி டீம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
* எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
* பாராளுமன்ற தேர்தலில் பணம் செல்வு செய்தால் போதும் என சீட் வழங்கியவர்.
* எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்த சசிகலாவை கொச்சையாக பேசினார்.
* ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
* நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பா.ஜ.க.விற்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
- முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள்.
- யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-ம் ஆண்டு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
4½ ஆண்டுகள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களைப் பெற்று வருகிறார். தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்களை ஏமாற்றினர். ரூ.1000 கொடுத்து விட்டு ரூ.5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கின்றனர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க யாராலும் இயலாது. தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்து விட்டு செங்கோட்டையன் எதிர் முகாமிற்கு சென்றுள்ளார்.
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக்கொண்டார். முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டி.டி.வி.தினகரன் போன்ற அவரது குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அந்த சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. விரைவில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதியப்படுவது உறுதி.
சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரண் அடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகின்றனர். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க.பற்றி தவறான கருத்துகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பரப்பி வருகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்று பேசினார்.
- ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
- வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், ரூ.36 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நோட்டீசுக்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீசு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ''ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது'' என்று உத்தரவிட்டார்.
- தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள்.
- பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க.
ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள். அப்போது, ஜெயலலிதாவையும் பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசினேன்.

அம்மையார் ஜெயலிலதா இருக்கும் போது புரட்சித்தலைவி என்றும் சிங்கப்பெண், லயன் லேடி என்று கூறுவார்கள். இன்றைக்கு அதே இடத்தில் என்னுடைய சகோதரியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிங்கப்பெண்ணாக இருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவராக இருக்கிறார் என்றால் அது பிரேமலதா தான். அதனால் தான் ஒப்பிட்டு பேசுகிறேன். பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க. நேற்றைய தினம் சிங்கத் தினம் (லயன் டே) என்பார்கள். அந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவையும், பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசியதாக கூறினார்.
- புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர் புரட்சித் தலைவர் அவர்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் புரட்சித் தலைவர். அவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வழிவகுத்தது.
இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் தொல் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் சமூக நீதிகாத்த வீராங்கணை புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல். வருகின்ற தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ தி.மு.க.வையோ அல்லது தி.மு.க. தலைவரையோ திருமாவளவன் அவர்கள் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்திய அம்மா அவர்களை சாதியின் பெயரால் விமர்சிப்பது நியாயமா என்பதை தொல் திருமாவளவன் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக தொல் திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை தொல் திருமாவளவன் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






