என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
- கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
- 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார்.
முன்னதாக அங்கு முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தை அடைந்தார். அங்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உறுதி மொழி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கழகம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்.
தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம்.
அதற்காக, அயராது உழைப்போம். மீண்டும் கழக ஆட்சி அமைந்திட வெற்றிச் சங்கொலி முழங்குவோம். வீர சபதமேற்கிறோம். 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.
சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியை தொடர்ந்து 2-வது முறையாக, ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்திற்கு, பெருமையைத் தேடித் தந்தவர் அம்மா.
''எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையில் 2026-ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.
இந்த உறுதியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, ரமணா, பா.வளர்மதி, கோகுலஇந்திரா, வாலாஜா பாத் கணேசன், நடிகை கவுதமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்தியா, வி.எஸ்.பாபு, அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், முன்னாள் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் வக்கீல் ஆ.பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, டாக்டர் சுனில், வழக்கறிஞர் சதாசிவம், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, ஏ.எம்.காமராஜ், ஷேக் அலி, குமரி சந்தோஷ், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, வேல் ஆதித்தன், ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன், சைதை சொ.கடும்பாடி, ராணி அண்ணாநகர் கோவிந்தன், பி.டி.சி.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






