search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
    • நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

    பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.

    தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
    • தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


    எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.

    தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் ஆழித்தேரோட்ட விழாவை போன்று திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அதன்படி, இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாதத்தை காண்பித்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜையில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வலது பாதத்தையும் காட்டுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி திருவிழாவில் முதல்நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனையும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனை, தொடர்ந்து, இன்று காலை தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை, மகா அபிஷேகம் நடைபெற்று, தியாகராஜர் வலது பாத தரிசனம் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பார்கள்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து வலது பாதத்தை தரிசனம் செய்தனர்.

    • சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார்.
    • ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள தால் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் நேற்று இரவு தஞ்சைக்கு வந்தார். முன்னதாக அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரவு தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொள்வதற்காக ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்திற்கு சென்றார் . காரை விட்டு இறங்கியவுடன் நடைபயிற்சி, விளையாடும் மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கைத்தட்டி முதலமைச்சரை வரவேற்றனர். இந்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு அதே உற்சாகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்கள், பெண்களிடம் தஞ்சை பாராளுமன்ற தொகுதி

    தி.மு.க. வேட்பாளர் முரசொலிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது கூடியிருந்த சிறுமிகளிடம் நீங்கள் தினமும் இங்கு வந்து தான் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வீர்களா? எந்த வகையான விளையாட்டு பயிற்சியை மேற்கொள்வீர்கள்? என ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு நாங்கள் பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோம் என சிறுமிகள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர். அவர்களை முதலமைச்சர் வாழ்த்தினார். மேலும், சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார். மேலும், சிறிது நேரம் கைப்பந்து விளையாடினர்.

    தொடர்ந்து, மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்களிடம் தி.மு.க.வுக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது பயிற்சி மேற்கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். முதலமைச்சரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் வியாபாரிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர். அவர்கள் முதலமைச்சருக்கு வாழைப்பழம், எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்தனர். மேலும், வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். சிலர் மனுவும் அளித்தனர். அதற்கு முதலமைச்சர் உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இதையடுத்து மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டு ஒரு கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தங்கியுள்ள சங்கம் ஹோட்டலுக்கு சென்றார்.

    • ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
    • ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார்.

    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் நரேன். தற்போதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் நரேன் இன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

    மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார். அப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். அதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார்.
    • தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தஞ்சாவூா்:

    நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20 நாட்களுக்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தஞ்சையில் அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று இரவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் தங்குகிறார்.


    இதையடுத்து நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் முரசொலி, நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு இரவில் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
    • வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.

    • வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.

    எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம்.

    தஞ்சாவூா்:

    பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், புதிய குட்ஷெட் யார்டுகள் போன்ற ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார்.

    இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ.7 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டுகள் மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

    திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன.

    வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம். மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இத்தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தஞ்சாவூர்:

    நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் எம்.பி.க்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து செல்வராஜ் எம்.பி. தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது செல்வராஜ் எம்.பி. நல்ல நிலையில் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×