search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sivashankar"

    • வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.

    எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • அரசுப் பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்தார்.
    • கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத் தந்துள்ளது என்றார்.

    சென்னை:

    பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

    இந்நிலையில், எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தி.மு.க. ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை.

    கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத் தந்துள்ளது.

    கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277.13 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணிக்கு எடுக்கவில்லை. அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கையினை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

    • லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அதிக அளவில் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் அலுவலக வாளத்தில் உள்ள கூட்டரங்கில் பெரம்பலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலை போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் உடனிருந்தார். இவர்கள் இருவரும் மேல் தளத்திற்கு செல்வதற்காக அங்கு இருந்த லிப்டில் ஏறி சென்றனர்.

    அப்போது திடீரென லிப்டின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து ஆபத்து மற்றும் அவசர கால கதவின் வழியே, சிக்கிக்கொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    சுமார் 30 நிமிடங்களாக நடந்த போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் 30 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இதுவரை 91,000 பேர் பயணம்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடங்கியுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:

    பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று வழக்கமான பேருந்துகளுடன் 2,100 உடன், 1430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. எனினும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட சில ஆம்னி பேருந்துகள், இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதி கட்டணத்தை பயணியிடம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத திட்டம்.
    • அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

    எழும்பூர்:

    சென்னையிடம் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பெண்களின் பயணம் சென்னையில் 69 சதவீதம் அளவுக்கு பெண்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம் ஆகும்.

    இலவச பேருந்து பயண திட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாக உள்ளது.அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 பேருந்துகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த பேருந்துகளை சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
    • பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை.

    தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. சோதனை முறையில் இந்த மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னை போக்குவரத்துக்கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
    • பேருந்துகளை நவீனமயமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.

    மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது.

    மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×