search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு"

    • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
    • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
    • பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.

    கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலாரின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

    அதன்பிறகு, வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

    பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.
    • தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    இந்திய ஜனநாயகக் கூட்டணியில், IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வண்ண பேப்பர்கள் மற்றும் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, ரெங்கநாதபுரத்தில் இருந்து 2 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தில் பட்டதாரிகளாகினர் என தெரிவித்தார். தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடன், இப்பகுதிக்கு ரேசன் கடை கட்டித் தரப்படும் என்றும், நீர்த்தேக்க தொட்டி, அமைக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். விவசாய களம் மற்றும் மயானபாதை சீர்படுத்தி தரப்படும் என்றும், கால்நடை மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும் என்றும் பாரிவேந்தர் உறுதி அளித்தார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளைஞர்களை சீரழிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி விட்டதாக விமர்சித்தார். ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு ஊழல் மட்டும் தெரியும், அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது எனச் சாடிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்களை சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, வேங்கடத்தானூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வன்ண பேப்பர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு செய்த நற்பணிகள் குறித்து புத்தகமாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். வேங்கடத்தானூருக்கு MP நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், மக்கள் தேவைகளை நிறைவேற்றியதில் மன நிறைவாக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சியை நடத்தினார் என்றும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார். ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ஊழல் செய்யும் திராவிட திருவாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.

    துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்காட்டுப் பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த டாக்டர் பாரிவேந்தர், தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதாகவும், இந்தியாவில் எந்த MP-யம் இதுபோல் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பெருமையடைவதாகப் பேசிய டாக்டர் பாரிவேந்தர், திமுக என்றாலே லஞ்சம், ஊழல்தான் என சாடினார். நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.


    இதனைத்தொடர்ந்து, கீரம்பூர் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், பெரம்பலூர் தொகுதியில் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரவித்தார். பிரதமர் மோடியை உலக நாடுகள் Boss என அழைப்பதாக பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புத்தனாம்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து. வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், கடந்த முறை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊழல் கட்சியிலிருந்து வரும் நபரை புறக்கணித்துவிட்டு, மக்கள் சேவையாற்றும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    • ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.3.2022 அன்று சுப்ரீம் போர்ட்டில் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ந்தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.1.2023-ந்தேதி வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தன.
    • மத்திய அரசு நிவாரண நிதி தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

    கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகின. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

    தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    நேற்று வேலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றது தமிழக அரசு.
    • நிவாரணம் வழங்கியது தொடர்பான முழு விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1,455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டது.

    நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சத்து 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை பரீசீலித்து சுமார் 53,000 குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை என மொத்தம் 1,487 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன.
    • குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்- நீதிமன்றம்.

    பாராளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றங்களை வலியுறுத்தியது.

    அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு அளிக்கப்பட்ட விளக்கத்தில் "தமிழக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளன. 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

    • ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
    • வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    சென்னை:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.

    அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.

    அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அந்த சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
    • கர்நாடக அரசு தரப்பில் ஜெ.தீபாவின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவின் தங்க நகைகள் மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் கடந்த 6, 7-ந்தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அந்த சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி முகமது நவாஸ் உத்தரவிட்டார்.

    மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை 26-ந்தேதிக்கு (நேற்று) நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஜெ.தீபாவின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • ராஜகண்ணப்பன் கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறையை கவனித்து வருகிறார்.

    சென்னை:

    பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில் மீண்டும் பொன்முடிக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்போது அந்த துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.
    • சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விபரம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியுடன், கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனுார், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சி மலை, ஏந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து, மாநகராட்சி ஏற்படுத்தப்பட உள்ளது.

    புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம் பண்ணை, வெள்ளனூர், திருவேங்கைவாசல், வாக வாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    நாமக்கல் நகராட்சியுடன், வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன் பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    ×