search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு- ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அமைக்கிறது
    X

    சசிகலாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு- ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அமைக்கிறது

    • ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
    • ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

    75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா உயிரிழந்து விட்டதை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்தஅறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தீவிரப்படுத்தினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 159 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஆறுமுகசாமி அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றார். இது தவிர அரசு துறை அதிகாரிகளிடமும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலாவின் உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி 611 பக்க அறிக்கையை தயாரித்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நீதிபதி ஆறுமுகசாமி 5 ஆண்டுகள் வரை விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினார். இதில் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் இடம்பெற செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் சென்னையிலேயே சிகிச்சை அளித்தால் போதும் என்றும் சசிகலா கூறியதாகவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா உயிரிழந்த மரண தேதியிலும் குழப்பம் உள்ளது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஒரு டாக்டராக இருந்தும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி, அப்பல்லோ டாக்டர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்கள் எஸ்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் சுகாதார முதன்மை செயலாளருக்கு ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விரைவில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதன்படி சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் விரைவில் காவல்துறையில் புகார் மனு அளிக்க உள்ளனர். இதனை பின்பற்றியே சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு கீழ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம்பெற உள்ளனர்.

    இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர்.

    ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் அச்சமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதனை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடித்து வரும் மர்மம் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்பது போன்ற தோற்றத்தையே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் உரிய பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×