search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்
    X

    தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

    • சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார்.
    • ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள தால் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் நேற்று இரவு தஞ்சைக்கு வந்தார். முன்னதாக அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரவு தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொள்வதற்காக ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்திற்கு சென்றார் . காரை விட்டு இறங்கியவுடன் நடைபயிற்சி, விளையாடும் மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கைத்தட்டி முதலமைச்சரை வரவேற்றனர். இந்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு அதே உற்சாகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்கள், பெண்களிடம் தஞ்சை பாராளுமன்ற தொகுதி

    தி.மு.க. வேட்பாளர் முரசொலிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது கூடியிருந்த சிறுமிகளிடம் நீங்கள் தினமும் இங்கு வந்து தான் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வீர்களா? எந்த வகையான விளையாட்டு பயிற்சியை மேற்கொள்வீர்கள்? என ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு நாங்கள் பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோம் என சிறுமிகள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர். அவர்களை முதலமைச்சர் வாழ்த்தினார். மேலும், சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார். மேலும், சிறிது நேரம் கைப்பந்து விளையாடினர்.

    தொடர்ந்து, மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்களிடம் தி.மு.க.வுக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது பயிற்சி மேற்கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். முதலமைச்சரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் வியாபாரிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர். அவர்கள் முதலமைச்சருக்கு வாழைப்பழம், எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்தனர். மேலும், வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். சிலர் மனுவும் அளித்தனர். அதற்கு முதலமைச்சர் உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இதையடுத்து மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டு ஒரு கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தங்கியுள்ள சங்கம் ஹோட்டலுக்கு சென்றார்.

    Next Story
    ×