என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோசடி"
- பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
- போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி கோகிலாவும், பங்கு சந்தையில் முதலீடு செய்ய மர்ம நபர் அனுப்பிய படிவத்தை நிரப்பி அனுப்பியுள்ளார். பின்னர் பெங்களூருவில் உள்ள குளோபல் சாப்டவேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கோகிலாவை தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் ஆட்டோ மெட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் டிரேடிங் செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளது.
இதை நம்பி கோகிலா கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கோகிலா, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர் தலைமையின் கீழ் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக பல்வேறு இணைய வழி தொழில் நுட்ப உதவியுடன் பணம் பரிவர்த்தனை, வாடஸ்-அப் மற்றும் இணையதளத்தில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெங்களூரு மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை பெங்களூரு விரைந்தது. இந்நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த தூபைல் அகமது, பிரவீன், முகமது அன்சார், நெய்வேலியை சேர்ந்த ஜெகதீஷ், ராமச்சந்திரன். பிரேம் ஆனந்த், விமல் ராஜ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களை, புதுச்சேரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், துபாயை தலைமை இடமாக கொண்டு குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தெரியவந்தது.
இந்தியா. ஹாங்காங், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கால் சென்டர்கள் அமைத்து, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் பணிபுரிந்த அனைவரும் பொது மக்களை ஏமாற்றுவது தெரிந்தே வேலை செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு நெய்வேவியை சேர்ந்த நவ்ஷத் கான் அகமது என்பவர் தலைவராக இருந்துள்ளார். அவருடைய மனைவி சவுமியா, நாமக்கல்லில் உள்ள கால் சென்டருக்கு உரிமையாளராக இருந்துள்ளார். இதில் தொடர்புடைய மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேர் தற்போது துபாயில் உள்ளனர்.
பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால் சென்டர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தில் இயங்கவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு இன்டர்நெட்டை (வி.பி.என்.) பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களூருவில் சொகுசு பங்களா, ஏற்காடு, புதுச்சேரி மற்றும் ஆரோவில், கொடைக்கானலில் ரிசார்ட் வாங்கி உள்ளனர். இந்தியாவில் மட்டும் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்த சொத்துக்களை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 4 சொகுசு கார், 1 பைக், வேன், 100-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 3 வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் ரூ.56 கோடி மோசடி செய்யப்பட்ட பணம் வந்துள்ளது. இதில் ரூ.27 கோடி உள்ள ஒரு வங்கி கணக்கை மட்டும், இந்தியா முழுவதும் உள்ள இணையவழி போலீசார் முடக்கி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவர்கள் இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 1,57,346 நபர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளனர். அதில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து, அங்கு பணி புரிந்த ஊழியர்களையும் இவ்வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். விரைவில் அவர்கள் உதவியுடன் துபாயில் பதுங்கியுள்ள நவ்ஷத் கான் அகமது மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடியில் ஈடுபட்டு, பணம் பறிக்க முயற்சித்த நபர்.
- இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
கைலாஷ் மேக்வால் என்ற நபருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து 500 ரூபாய் பணம் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், " நான்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நான் அவசரமாக கொலீஜிய ஆலோசனைக்கு செல்ல டாக்சி புக் செய்ய ரூ.500 பணம் வேண்டும். நான் நீதிமன்றத்தை சென்றதும் உங்களது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்க இதனை எனது ஐபாட்-ல் இருந்து அனுப்புகிறேன் என்று இன்னொரு குறுஞ்செய்தியை அவர் அனுப்பியுள்ளார். இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
Guys what should I do? pic.twitter.com/gUP6ZXpEGa
— Kailash Meghwal ?️? (@kailawshh) August 25, 2024
- கும்பலின் தலைவன் அசாம்கானை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து பெற்று ஏமாற்றியது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த கும்பலை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் மாறு வேடத்தில் சென்று சுற்றி வளைத்து 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபம் ஷர்மா (வயது 29), நிரஜ்சூர்ஜார்(29), உத்தர காண்டை சேர்ந்த ராஜ் கவுண்ட்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசாம்கான் தலைவனாக கொண்டு புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து 3,400 பேரிடம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒரு மாதத்திற்கு ரூ.6 கோடி என இலக்கு வைத்து அவர்கள் வேலை தேடும் இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளனர்.
இந்த நிலையில் கைதானவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த போது இதில் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
ஏற்கனவே 3,400 பேரிடம் மோசடி செய்த அந்த கும்பல் மேலும் 360 பேரை தங்கள் வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் மாநில வாரியாக ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அந்த பட்டியலை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த போலீசாருக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த பெரும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பலின் தலைவன் அசாம்கானை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த மோசடி கும்பல் தலைவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி கொள்வதால் அவனை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எனினும் ஓரிரு நாளில் அவன் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கி கொள்வான் என்று சைபர் கிரைம் போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.
- ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
- கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
சென்னை:
பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டி ஐ.டி. ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகப் போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் என்பது போன்ற பொய்களை அள்ளி வீசியும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் பொது மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சுருட்டுகிறார்கள்.
இந்த நிலையில் கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் வியாபாரம் மூலமாகவும் உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் எனக் கூறி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆன்லைனில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை சுருட்டி விடுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, `ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றார்.
- விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
- பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பெருட்களை கெள்ளையடித்த 43 வயது நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2015 முதல் 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக கடந்தாண்டு பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரோஸ் நியாஸ் ஷேக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் மேட்ரிமோனி இணையதளத்தில் புகார் கொடுத்த பெண்ணிடம் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் இருந்துரோ.6.5 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம், மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க சில பொருட்களை அவர் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மடிக்கணினி, மொபைல் போன்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர்.
2015 முதல் விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்து அவர்களின் பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் விதவிதமாக நடந்து வருகிறது. மோசடி குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்கள் வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அப்படி ஒரு மோசடி சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் தெரியவந்துள்ளது. ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 106 பேரிடம் தலா ரூ.29 ஆயிரம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது.
அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் வந்தவர்களிடம், டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ரூ.26 லட்சத்திற்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகள் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
- இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் தொடர்பு டைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசை அமலாக்கத்துறை குறைந்த பட்சம் 5 முறை விசாரித்து இருந்தது. குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
சுதேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் விலை உயர்ந்த பரிசுகள், நகைகளை பெற்றதாகவும், அவர் குற்றவாளி என தெரிந்தே பழகினார் என்றும், இதற்கு பணத்தின் மீதான மோகமே காரணம் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.
இதை ஜாக்குலின் மறுத்து தான் நிரபராதி என்றும், சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்ட சுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தி இருந்தும் தற்போது மீண்டும் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடன் வாங்கிய பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், குண்டூர் கே.வி.பி காலனியை சேர்ந்தவர் மது பாபு ஆட்டோ டிரைவர். இவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல லட்சங்களை கடனாக வாங்கினார்.
கடன் வாங்கிய பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இந்த நிலையில் பேஸ்புக் ஒன்றில் சிறுநீரகத்தை தானம் செய்தால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என பதிவிடப்பட்டு இருந்தது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த விஜயவாடாவை சேர்ந்த பாஷா என்ற நபரை மது பாபு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பாஷா தானும் சிறுநீரகம் தானம் செய்து ரூ.30 லட்சம் பெற்றதாக தெரிவித்தார்.
தனது கடனை அடைக்கவும், குடும்ப வருமையை ஒழிக்கவும் சிறுநீரகத்தை தானமாக வழங்க மது பாபு ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த மாதம் 15-ந் தேதி விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு மதுபாபுவின் ஆதார் அட்டை, பிற அடையாள அட்டைகளில் அவரது விலாசத்தை மாற்றி நோயாளியின் உறவினராக மாற்றி சிறுநீரகத்தை தானமாக வழங்கியதாக எழுதிக் வாங்கிக் கொண்டனர்.
பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மது பாபுவின் சிறுநீரகம் அகற்றப்பட்டு வேறு ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பாஷா ரூ.50 ஆயிரத்தை மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை கேட்ட போது உனது நண்பருக்கு உடல் உறுப்பு தானம் செய்ததாக கையெழுத்து போட்டு இருக்கிறாய். அதனால் மீதி பணத்தை தர முடியாது என மதுபாபுவை பாஷா மிரட்டி அனுப்பினார்.
தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மதுபாபு இது குறித்து குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் ஆஸ்பத்திரி நிர்வாகம் பல பேரிடம் சிறுநீரகம் பெற்று மோசடி செய்து வருவதாகவும், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
- டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.
தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.
கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.
இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.
செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.
வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.
வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.
ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.
மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
- ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
- பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு மந்தனா என்ற பெயரில் ஜவுளி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அதிபர் மற்றும் செயல் இயக்குனர்கள் அங்குள்ள பரோடா வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடன் பெற்றனர். ஆனால் இந்த கணக்கு 2016-ம் ஆண்டு செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில் அந்த நிறுவனம் ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் புருஷோத்தம் சகன்லால் மந்தனா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மணீஷ் பிஹாரிலால் மந்தனா உள்ளிட்டோர் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யில் புகார் செய்தது.
புகாரின் பேரில் மந்தனா நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்தனா நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 140-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், 5 லாக்கர்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் லெக்சஸ் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 3 உயர்ரக கார்களும் ரோலக்ஸ், ஹூப்லாட் போன் பிரபல பிராண்டுகளின் கைக்கடிகா ரங்கள் மற்றும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
- முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள முகவரியும் இருந்தது. அந்த 'லிங்க்'கை கிளிக் செய்த குமார், தன் விவரங்களை பதிந்து தனக்கான பக்கத்தை உருவாக்கினார்.
மேலும் அதில், சிறிதளவு முதலீடு செய்த குமாருக்கு அதிகளவு லாபமும் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 20 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பினார்.
இவரது முதலீடு, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஓரிரு நாளில் குறிப்பிட்ட அந்த இணையதள பக்கமும் முடங்கியது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
- பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.
வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்