என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி
- திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
- தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரும் அரசு வேலைக்காக தலா ரூ.3 லட்சம் வீதம் வரதராஜன் மூலம் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் தொட்டியம் வெங்காயபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 47). இவர் அரசு வேலைக்காக கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சமயபுரத்தை அடுத்த கூத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ சண்முகவேல் (65) என்பவர் வரதராஜனிடம் சமயபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து இவர் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வரதராஜனும் அவரை முழுமையாக நம்பினார். பின்னர் ஆசிரியர் பணிக்காக 2017-ம் ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் பணத்தை ராஜ சண்முகவேரிடம் கொடுத்திருந்தார்.
மேலும் தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரும் அரசு வேலைக்காக தலா ரூ.3 லட்சம் வீதம் வரதராஜன் மூலம் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வெகு காலம் ஆகியும் மேற்கண்ட 3 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் ஒவ்வொரு முறையும் பணத்தை திருப்பி கேட்கும் போது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து தப்பித்து வந்தார். இதனால் நம்பிக்கை இழந்த வரதராஜன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ராஜ சண்முகவேல் பணம் தர மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வரதராஜன் தொட்டியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி முன்னாள் கோவில் அறங்காவலர் ராஜ சண்முகவேல் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






