search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive inspection"

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    ×