search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை"

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.

    200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 'பாரத் அரிசி' என்ற பெயரில் சில்லரை சந்தையில் ரூ.29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

    இந்த அரிசி அடுத்த வாரம் முதல் கடைகளில் கிடைக்கும். இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். 'பாரத்' அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

    ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் ரூ.27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், 'பாரத்' பருப்பு என்ற பெயரில் ரூ.60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லரை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
    • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

    அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

    இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

    ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

    விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

    பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இ்ன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு சந்தைகளை கட்டி உள்ளது.

    மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், வெற்றிலைவள்ளிகிழங்கு, பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தார், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.

    இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்துகளும், கும்பகோணம் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

    15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.500வரை விற்கப்படுகிறது, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600, 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.60 முதல் ரூ.80-க்கும், 8 முதல் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில்,

    இன்று அதிகாலை முதல் கரும்பு விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது. மாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நள்ளிரவு முதல் மேலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய உள்ளது. இதனால் கரும்பு கட்டுகளின் விலை குறையவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.

    பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

    ×