search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanjiram"

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×