search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oil spill"

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர்.
    • ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது.

    திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த பாக்கியம் கூறியதாவது:-

    எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு மற்றும் அமோனியா வாயுவால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை போராட்டங்கள் நடத்தும் அவர்கள் அதற்கு நிரந்தர தீர்வு காணாமல் அடுத்தடுத்து மறந்து சென்று விடுகின்றனர். நாட்டின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது தான். குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை இருப்பதையும் தடுக்க முடியாது. ஆனால் தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.
    • தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    அலையாத்தி காடுகள் கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்களிலும், நதி முகத்துவாரங்களிலும், உவர் நீரிலும் வளரும் தாவரங்கள் ஆகும். இவை காடுகளை மட்டுமல்லாமல் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

    சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.

    இதற்கு முன்பு மெரினா-பெசன்ட் நகர் இடையே அடையாறு ஆற்று கரையோரத்தில் அலையாத்தி காடுகள் இருந்து உள்ளன. தற்போது இல்லை. கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதிகளில் அலையாத்தி தாவரங்கள் சுமார் 9 அடி வரை உள்ளன. எண்ணெய் கசிவால் இந்த அலையாத்தி மரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படர்ந்து இருந்தது.

    இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, எண்ணெய் கசிவு காரணமாக கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் உள்ள அலையாத்தி காடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 3 அடி உயரத்திற்கு இந்த தாவரங்களில் எண்ணெய் படந்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இந்த மரங்கள் எப்படி மீளும் என்று தெரியவில்லை. அங்குள்ள விலங்குகளும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிச்சாரவத்தில் உள்ள அலையாத்தி காடுகளை போல் இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

    இங்கு தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பிச்சாவரத்தை போல் அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால் தான் அடுத்துவரும் பாதிப்பு களில் இருந்து தற்காத்து கொள்ளமுடியும். இதனை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.

    • மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.
    • பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவார பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் . எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள மீனவ கிராமங்களுக்குள்ளும் மழை வெள்ளத்தின்போது எண்ணெய் பரவி வீடுகளில் படிந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் பாழாகின. எண்ணெய் கழிவால் மீனவர்களும்,திருவொற்றியூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும் எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் சிலரும், திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்துகோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை பரவி உள்ளது. இதனால் அங்குள்ள மீனவ கிராமத்தினரும் நிவாரண உதவி கேட்டு போராட்டங்கள் அறிவித்து உள்ளனர்.

    கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை பெரும்பாலும் படகில் சென்று மீனவர்கள் மக்கு மூலம் எடுத்து அகற்றினர். அதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இதற்குள் எண்ணெய் கழிவுகள் தரையில் 3 அடி வரை சென்றுவிட்டது, எண்ணெய் கழிவுகளை அகற்ற எந்த வித நவீன எந்திரமோ, மாற்று ஏற்பாடோ செய்யப்படவில்லை. இதுவும் தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி எண்ணூர் துறைமுகத்தில் கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்டபோது பல டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து திரு வான்மியூர் வரை பரவியது.

    உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்தது. அதனை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் கடல் நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் நவீன எந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக வாளிமூலம் எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் தற்போதும் எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தவும் நவீன எந்திரம் எதுவும் இல்லாததால் எப்போதும் போல் மீனவர்களே படகில் சென்று மக்கு மூலம் எடுத்து பீப்பாய்களில் நிரப்பினர். இது பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மீண்டும் கேள்வியை எழுப்பி உள்ளது.

    2017-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் கசிவை படிப்பினையாக வைத்து கடலில் எண்ணெய் கலந்தால் அதனை எளிதில் பிரித்து எடுக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நவீன எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2017-ம் ஆண்டின் சம்பவத்திற்கு பிறகும் பாடம் கற்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல் அடுத்தடுத்து மழை வெள்ளம், எண்ணெய் கசிவு பாதிப்பில் இருந்து எண்ணூர் மற்றும் சுற்றி உள்ள மீனவ கிராமமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மொத்தத்தில் எண்ணூர் எண்ணெய் கசிவால் அப்பகுதியில் சுற்றுச்சூழல், கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இதுபோன்று எண்ணெய் கசிவு மற்றும் தொழிற்சாலை விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராத தொகை கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மூடப்படும் நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்று தெரிகிறது. மேலும் இழப்பீடுகளும் வெளிநாடுகளைப் போல் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவததை தடுக்க எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்? விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம், எண்ணெய் கசிவு அமோனியா வாயு கசிவு என அடுத்தடுத்து ஏற்பட்ட இன்னல்களால் எண்ணூர் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.கடலில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் இறந்து உள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித்து உள்ளது. ஆனால் இது எத்தனை பேருக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. . கடந்த 2017-ம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் கடலில் கலந்த போது அதனை அகற்ற பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கலந்து உள்ளது. 2017-ம்ஆண்டுக்கு பிறகு அந்த எண்ணெய் விபத்தில் இருந்து எந்த பாடமும் படிக்காமல் அதே நிலையில் தான் நாம் உள்ளோம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும், எண்ணெய் தண்ணீரில் கலந்தால் அதனை அகற்ற தொழில் நுட்ப எந்திரங்களும் இதுவரை இல்லை. இது தொடர்பாக எந்த தெளிவான யோசனையும் இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் எங்கும் இல்லை என்றே தெரிகிறது. மீண்டும் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மீட்பு பணிகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளன. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், நடந்தால் அடுத்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஏற்கனவே பாதிப்பில் இருந்த எண்ணூர் பகுதி மக்கள் இப்போது உரத்தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால்மீண்டும் நிலைகுலைந்து உள்ளனர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. தொழிற்சா லைகள் சரியான முறைப்படி பாதுகாப்புடன் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இங்கு தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது எதற்காக என்று தெரியவில்லை. இங்கு இது போன்ற தொழிற்சாலைகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசு நடத்துவதால் நடவடிக்கை இல்லையா? என்று புரியவில்லை. நமது நாட்டில் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துக்களில் எவ்வளவு பேருக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    எண்ணெய் கசிவால் கடலில் உள்ள மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை எப்படி மீட்டெடுப்பார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய எந்த தெளிவான விளக்கமும் இதுவரை இல்லை.

    மேலும் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இங்குள்ள தாவரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம். இதனால் சுற்றுச்சூழலின் சமநிலையே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த அலையாத்தி காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் சுனாமியின் போது பாதுகாப்பு அரணாக இருக்கும். அங்குள்ள விலங்குகள் மிகவும் முக்கியமானது.


    இதேபோல் பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத அளவில் இருந்தன.

    இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் அஜாக்கிரதையாக இருப்பதாகவே தெரிகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. அபராத தொகையும் கூடுதலாக விதிக்க வேண்டும். அப்படியானால் தான் இது போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யோசித்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள். வெளிநாடுகளைப் போல் விபத்து ஏற்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 2017-ம் ஆண்டு முதல் இதுவரை என்ன முயற்சி எடுத்து உள்ளோம்? இப்போதைய எண்ணெய் கசிவு பற்றி 2017-ம் ஆண்டு போல் பேசப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன.
    • மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது எண்ணூரில் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறி எண்ணெய் கழிவு கடல் மற்றும் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் அடைந்தன. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை த்தெடர்ந்து எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கிடையே கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் ஜனவரிமாதத்தில் கரைக்கு கூடுகட்ட வரும் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? ஆமைகள் கூடுகட்ட வரும் கரையில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வனத்துறையினர் கடந்த 12-ந்தேதி சிறப்பு குழுவை நியமித்தது.

    இந்த குழுவினர் எண்ணெய் கழிவு படர்ந்த எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் எண்ணெய் கழிவுகளால் ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,

    எண்ணூர் கடல்பகுதியில் பரவிய எண்ணெய் கழிவால் ஆமைகளுக்கு பாதிப்பு இல்லை. அவை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கூடு கட்டி முட்டையிட கடற்கரைக்கு வரும். எண்ணூர் முகத்துவாரத்தில் கசிவு ஏற்பட்டதாலும், எண்ணெய் கழிவு கடலில் அதிகம் பரவாததாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், எண்ணூர் அருகே உள்ள கடற்கரையில் கற்கள்தான் அதிகஅளவில் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும். இதனால் ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருதில் எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணெய் கழிவால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றார்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்த எண்ணெய் படலம் கடலில் பழவேற்காடு வரை படர்ந்தது. இதனால் பழவேற்காடை சுற்றி உள்ள மீனவ கிராமமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ஏற்கனவே புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் எண்ணெய் படலத்தால் சுமார் 40 கிராம மீனவர்கள் மீன்பி டிக்க கடலுக்கு செல்லாமல் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பழவேற்காடு பகுதி மீனவ கிராமமக்கள் தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் 40 மீனவ கிராமமக்கள் நிவாரணம் கேட்டு நாளை சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்து போராட்டம் அறிவித்து உள்ளனர்.இதற்கான ஆயத்த பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திலும் மனு அளித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுதாகர், திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகுமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மாவட்ட மீன் வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் மீனவ கிராம மக்களை அழைத்து பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்ட பத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மாவட்ட கலெக்டர் தலைைமயில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க திட்டும் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 40 கிராமமீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மீன் பிடிக்க செல்லவில்லை. எண்ணை கழிவால் ஆயிர த்திற்கும் மேற்பட்டமீன்பிடி வலைகள் படகுகள் சேதமடைந்துள்ளன. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே மீனவ கிராம மக்கள் முடிவெடுத்து பேரணியில் குடும்பமாக பழவேற்காடு, பொன்னேரி ,மீஞ்சூர், திருவெற்றியூர் சாலை வழியாக சென்னை கோட்டை வரை நடந்தே சென்று கோரிக்கை மனு வழங்க உள்ளோம் என்றார்.

    • 4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அப்பகுதியில் உள்ள எண்ணை நிறுவனங்களில் தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது.

    மீனவர்களின் 700-க்கும் மேற்பட்ட படகுகள், வலைகள் ஆகியவை எண்ணெய் கழிவுகளில் சிக்கி சேதமடைந்தன. இதன் காரணமாகவும் எண்ணை படலங்கள் தேங்கி நிற்பதாலும் அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடை பெற்று வருகிறது.

    தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கடல் பகுதி மற்றும் முகத்து வாரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.

    சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி பேரல்களில் அள்ளி வெளியேற்றி வருகிறார்கள்.

    எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு 'ஆயில் சக்கார்' எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 எந்திரங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களை படகுகளில் கட்டி எண்ணெய் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகளுக்கு இழுத்துச் சென்று பேரல் பேரலாக கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 15 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

    இதன்மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீரில் மிதந்த படியே கழிவுகளை சேகரித்து டிரம்களுக்கு அனுப்பும் 2 எந்திரங்கள் மூலமாக பணிகள் நடை பெற்று வருவதால் எண்ணெய் கழிவுகள் ஓரளவுக்கு வேகமாக அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் 17-ந்தேதிக்குள் (நாளை) எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதனால் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எண்ணெய் கழிவுகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை வர உள்ளது.

    அன்றைய தினம் இதுவரை அகற்றப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் எத்தனை டன்? என்பது பற்றிய முழு விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு மும்பை மற்றும் ஒடிசாவில் இருந்து நவீன எந்திரங்கள் இன்று வரவழைக்கப்பட இருப்பதாக மாசுகட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த எந்திரங்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்றும், இதன் மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய இரண்டரை டன் கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. #EnnorePort #CoralStars #OilSpill

    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது.

    நேற்று முன்தினம் அதிகாலை கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கிய போது இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 2.5 டன் கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கொட்டியது.

    இதனால் கப்பலை சுற்றிலும், கடலில் எண்ணெய் படலமாக மிதந்தது. உடனடியாக அது பரவாமல் இருக்க மிதவை தடுப்புகள் போடப்பட்டன. துறைமுக அதிகாரிகளும் கடலோர காவல் படையினரும் விரைந்து வந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினர்.

    ஸ்டிரிம்மர் எனப்படும் உறிஞ்சும் கருவி மூலம் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு பேரல்களில் சேகரிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக இந்த பணி வேகமாக நடந்து வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது. குறைந்த அளவில் எண்ணெய் திட்டுக்கள் மிதக்கின்றன. அதனையும் ஊழியர்கள் படகில் சென்று அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

     


    இது தொடர்பாக துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. ஆங்காங்கே மிதக்கும் எஞ்சிய கச்சா எண்ணெய் கருவிகள் மூலம் ஊழியர்கள் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

    கப்பலில் மொத்தம் 16, 500 டன் கச்சா எண்ணெய் இருந்தது. இதில் 5000 டன் இறக்கப்பட்டுள்ளது.

    மீதியுள்ள கச்சா எண்ணெயை இறக்குவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். எண்ணெய் இறக்குவதற்கு பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்த பின்னர் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

    விசாகபட்டினத்திலிருந்து சிறப்பு கப்பல் வந்தடைந்துள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் பேரலில் அடைக்கபட்டுள்ளன. இவை சுமார் 2 டன் அளவுக்கு குறைவாகத்தான் உள்ளது. அதை சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #EnnorePort #CoralStars #OilSpill

    சென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், அதிலிருந்து கடலில் எண்ணெய் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #EnnorePort #CoralStars #OilSpill
    சென்னை:

    சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் இருந்து பைப் மூலமாக் கச்சா எண்ணெய் இறக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது அந்த பைப்பில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதிலிருந்த எண்ணெய் கடலில் கலந்தது. இதுகுறித்து தகவல் பரவியதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து கடலோர காவல் படை கப்பல்கள் விரைந்து சென்று கடலில் படிந்த எண்ணெயை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதுதொடர்பாக துறைமுக அதிகாரிகள் கூறுகையில், கடலில் படிந்த எண்ணெயை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர். #EnnorePort #CoralStars #OilSpill
    ×