search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollution control board"

    • 4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அப்பகுதியில் உள்ள எண்ணை நிறுவனங்களில் தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது.

    மீனவர்களின் 700-க்கும் மேற்பட்ட படகுகள், வலைகள் ஆகியவை எண்ணெய் கழிவுகளில் சிக்கி சேதமடைந்தன. இதன் காரணமாகவும் எண்ணை படலங்கள் தேங்கி நிற்பதாலும் அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடை பெற்று வருகிறது.

    தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கடல் பகுதி மற்றும் முகத்து வாரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.

    சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி பேரல்களில் அள்ளி வெளியேற்றி வருகிறார்கள்.

    எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு 'ஆயில் சக்கார்' எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 எந்திரங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களை படகுகளில் கட்டி எண்ணெய் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகளுக்கு இழுத்துச் சென்று பேரல் பேரலாக கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 15 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

    இதன்மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீரில் மிதந்த படியே கழிவுகளை சேகரித்து டிரம்களுக்கு அனுப்பும் 2 எந்திரங்கள் மூலமாக பணிகள் நடை பெற்று வருவதால் எண்ணெய் கழிவுகள் ஓரளவுக்கு வேகமாக அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் 17-ந்தேதிக்குள் (நாளை) எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதனால் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எண்ணெய் கழிவுகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை வர உள்ளது.

    அன்றைய தினம் இதுவரை அகற்றப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் எத்தனை டன்? என்பது பற்றிய முழு விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு மும்பை மற்றும் ஒடிசாவில் இருந்து நவீன எந்திரங்கள் இன்று வரவழைக்கப்பட இருப்பதாக மாசுகட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த எந்திரங்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்றும், இதன் மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    • இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
    • குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

    • இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும்.
    • சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    திருப்பூர்:

    பி.ஏ.பி., கால்வாயில் குப்பை, கழிவுகள் மற்றும் இறந்த கோழிகள் வீசப்படுவதால் கால்வாயில் வரும் தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதில் பெரும் சங்கடத்தை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கால்வாய் மாசு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் வழங்கிய அறிக்கை அடிப்படையில் ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:-

    கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க, நமக்கு நாமே திட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் வேலி அமைத்து தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதற்காகும் செலவினத்தில் 3ல் ஒரு பகுதியை வழங்க விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.

    பொங்கலூர் பகுதியில் உள்ள கால்வாயில் பயன்பாடற்ற ஜீப் சாலை வழியாக கோழிக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு கால்வாயில் கொட்டப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அச்சாலையை மூட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கால்வாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும். இதை உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

    அதிக அளவு குப்பை, கழிவு கொட்டப்படும் இடத்தையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள், கோழிப்பண்ணை, ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். கால்வாயில் குப்பை மற்றும் கோழிக்கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அபராத தொகை குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

    இவையெல்லாம், சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.  

    • .ஏ.பி., வாய்க்காலை பல ஊராட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன.
    • இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., வாய்க்காலை பல ஊரா ட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன. சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் செயல்படும் கோழிப்ப ண்ணையாளர்கள் பலர் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படு த்துகின்றனர். தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவி ட்டதால் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன.

    கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரமேஷ் பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
    • கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருகாலூர் ஊராட்சி, செல்லப்பம்பட்டி கிராமம் கல்லேரியில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மூலம் மீன்பிடிக்க குத்தகை ஏலம் விடப்பட்டது.

    மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன்களுக்கு இரையாக கழிவுகளை ஏரியில் கொட்டி மீன் பிடித்து வந்ததாகவும், இதனால் ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இதனையடுத்து, சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மீன்பிடிதாரரர்கள் கழிவுகளை ஏரியில் கொட்ட கூடாது எனவும், மேலும், விவசாய கிணறு, ஏரி தண்ணீரை எடுத்து பரிசோதனை செய்து அதில் தண்ணீர் மாசு அடைந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என கூறினர்.

    அதன்படி, நேற்று சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜய்கோகுல் தலைமையிலான குழுவினர் கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    இந்த ஆய்வின் போது, சங்ககிரி பி.டி.ஓ. முத்து, சேலம் மாவட்ட மீன்வள ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி, ஆர்.ஐ. குணசீலன், வி.ஏ.ஓ சித்ரா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    • தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது.
    • கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது.

    திருப்பூர் :

    பொங்கலூா் ஒன்றியம் மாதப்பூா் ஊராட்சி சிங்கனூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரித்துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அரிசி ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது. இந்த ஆலை உரிய உரிமம் இன்றி இயங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

    இதைத் தொடா்ந்து, பல்லடத்தில் உள்ள திருப்பூா் (தெற்கு) மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவி செற்பொறியாளா் வனஜா, சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

    • குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. திருப்பூரில் ஏராளமான விதிமீறல் பட்டன், ஜிப் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் நல்லாற்றில் கலக்கிறது.

    தொடர் மழையால் நல்லாற்றில் உள்ள சாயம், சாக்கடை கழிவுகள், நஞ்சராயன் குளத்தில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதையடுத்து குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வடக்கு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலக்கிறதா,ஆற்றுநீரின் டி.டி.எஸ்., அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக 2 நாட்கள் தொடர் ஆய்வு நடத்தியுள்ளோம். டி.டி.எஸ்., அளவு 900 க்கு கீழ் சீராகவே உள்ளது. நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். குளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடமும், வாரிய உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

    • உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும்.
    • ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும்.

     திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் மாவட்டம் இணைந்து உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஓசோன் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது, ஓசோன் பூமியை காக்கும் காவலன், இவற்றின் முக்கிய பணி சூரிய ஒளியிலிருந்து வரும் அதிக வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுத்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கிறது.

    ஓசோன் படலம் அழிந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். மேலும் நீர் நிலைகள் வறண்டு போய்விடும்.வெப்பம் அதிகமானால் நம்முடைய தோள் சுருங்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும். பல நோய்கள் உயிரனங்களை தாக்கும். உணவு சங்கிலி அறுபட்டு விடும். ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும், ஓசோன் என்பது உலகிற்கும்,உயிரினங்களுக்கும் உற்ற தோழன். தலைமறைவாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக நம்மை காக்கிறது ஓசோன்.

    பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றார். தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா பேசுகையில், மாணவர்கள் ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி குழுக்களாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், ரமேஷ், சர்நித்தா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஓசோன் விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளும், பொது மக்களும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களும் இணைந்து ஓசோன் படலத்தை காக்க பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முரளி, பாரதிராஜா, சத்தியன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யக்கூடிய நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்கக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது.

    மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    • சில சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
    • உடலில் மஞ்சள் நிற தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்,சின்னக்கரை, கரைப்புதூர், கணபதிபாளையம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் நிலை ஓடைகளில் வெளியேற்றுகின்றன.

    அதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பருவ மழை காலங்களில் இது போன்ற விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,பச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு விவசாய தோட்டத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பாலாமணி என்பவர் கூறுகையில் ,மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. உடலில் இந்த தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது. விவசாயத்திற்கு விட்டால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. மகசூல் கிடைப்பதில்லை. தென்னை மரம் நாளுக்கு நாள் காய்ந்து வருகிறது. கால் நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால் அந்த கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களது அன்றாட சொந்த உபயோகத்திற்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுபாட்டு உதவி செயற்பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதுரை:

    நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த. ஐ.ஏ.எஸ். அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகரும் சிறந்த அதிகாரி ஆவார்.

    ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த. சில நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    எனவே, கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி விதிகளை உருவாக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ் என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹென்றி திபேன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து ஆராயும் குழுவில் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நசிமுதீன் உள்ளார்.

    அவருக்கு தான் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான அனைத்து விபரங்களும் தெரிந்து இருக்கும். அவரது பணியிட மாறுதல் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது.

    அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நதிமுதீனும், புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள ‌ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்தது. #PollutionControlBoard #SupremeCourt
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. மேலும் இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசுபட்ட வகையில் உள்ள ஆற்றுநீரை பயன்படுத்தும் உயிரினங்களுக்கும் பயங்கர கேடுகளை விளைவிக்கிறது.

    எனவே, கர்நாடகா மாநிலத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்து பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக பரிசோதனை செய்து இது தொடர்பாக ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

    காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை. கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் வழியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன.

    கடந்த செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை நான்கு மாதங்களில் காவிரி (அஜ்ஜிபோர்-கர்நாடகா), தென்பெண்ணையாறு (சொக்கரசனபல்லி- தமிழ்நாடு), அக்ராவதி (சங்கமா-கர்நாடகா) ஆகிய நதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தென்பெண்ணையாறு, காவிரி, அக்கராவதி ஆகிய நதிகளின் தண்ணீர் பெருமளவில் மாசடைகிறது. தண்ணீரின் தரத்தை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையை இரு மாநிலங்களும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த அறிக்கையின் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #PollutionControlBoard #SupremeCourt #tamilnews
    ×