search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marine Resources"

    • மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.
    • பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவார பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் . எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள மீனவ கிராமங்களுக்குள்ளும் மழை வெள்ளத்தின்போது எண்ணெய் பரவி வீடுகளில் படிந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் பாழாகின. எண்ணெய் கழிவால் மீனவர்களும்,திருவொற்றியூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும் எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் சிலரும், திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்துகோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை பரவி உள்ளது. இதனால் அங்குள்ள மீனவ கிராமத்தினரும் நிவாரண உதவி கேட்டு போராட்டங்கள் அறிவித்து உள்ளனர்.

    கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை பெரும்பாலும் படகில் சென்று மீனவர்கள் மக்கு மூலம் எடுத்து அகற்றினர். அதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இதற்குள் எண்ணெய் கழிவுகள் தரையில் 3 அடி வரை சென்றுவிட்டது, எண்ணெய் கழிவுகளை அகற்ற எந்த வித நவீன எந்திரமோ, மாற்று ஏற்பாடோ செய்யப்படவில்லை. இதுவும் தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி எண்ணூர் துறைமுகத்தில் கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்டபோது பல டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து திரு வான்மியூர் வரை பரவியது.

    உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்தது. அதனை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் கடல் நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் நவீன எந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக வாளிமூலம் எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் தற்போதும் எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தவும் நவீன எந்திரம் எதுவும் இல்லாததால் எப்போதும் போல் மீனவர்களே படகில் சென்று மக்கு மூலம் எடுத்து பீப்பாய்களில் நிரப்பினர். இது பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மீண்டும் கேள்வியை எழுப்பி உள்ளது.

    2017-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் கசிவை படிப்பினையாக வைத்து கடலில் எண்ணெய் கலந்தால் அதனை எளிதில் பிரித்து எடுக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நவீன எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2017-ம் ஆண்டின் சம்பவத்திற்கு பிறகும் பாடம் கற்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல் அடுத்தடுத்து மழை வெள்ளம், எண்ணெய் கசிவு பாதிப்பில் இருந்து எண்ணூர் மற்றும் சுற்றி உள்ள மீனவ கிராமமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மொத்தத்தில் எண்ணூர் எண்ணெய் கசிவால் அப்பகுதியில் சுற்றுச்சூழல், கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இதுபோன்று எண்ணெய் கசிவு மற்றும் தொழிற்சாலை விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராத தொகை கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மூடப்படும் நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்று தெரிகிறது. மேலும் இழப்பீடுகளும் வெளிநாடுகளைப் போல் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவததை தடுக்க எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்? விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம், எண்ணெய் கசிவு அமோனியா வாயு கசிவு என அடுத்தடுத்து ஏற்பட்ட இன்னல்களால் எண்ணூர் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.கடலில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் இறந்து உள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித்து உள்ளது. ஆனால் இது எத்தனை பேருக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. . கடந்த 2017-ம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் கடலில் கலந்த போது அதனை அகற்ற பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கலந்து உள்ளது. 2017-ம்ஆண்டுக்கு பிறகு அந்த எண்ணெய் விபத்தில் இருந்து எந்த பாடமும் படிக்காமல் அதே நிலையில் தான் நாம் உள்ளோம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும், எண்ணெய் தண்ணீரில் கலந்தால் அதனை அகற்ற தொழில் நுட்ப எந்திரங்களும் இதுவரை இல்லை. இது தொடர்பாக எந்த தெளிவான யோசனையும் இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் எங்கும் இல்லை என்றே தெரிகிறது. மீண்டும் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மீட்பு பணிகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளன. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், நடந்தால் அடுத்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஏற்கனவே பாதிப்பில் இருந்த எண்ணூர் பகுதி மக்கள் இப்போது உரத்தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால்மீண்டும் நிலைகுலைந்து உள்ளனர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. தொழிற்சா லைகள் சரியான முறைப்படி பாதுகாப்புடன் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இங்கு தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது எதற்காக என்று தெரியவில்லை. இங்கு இது போன்ற தொழிற்சாலைகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசு நடத்துவதால் நடவடிக்கை இல்லையா? என்று புரியவில்லை. நமது நாட்டில் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துக்களில் எவ்வளவு பேருக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    எண்ணெய் கசிவால் கடலில் உள்ள மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை எப்படி மீட்டெடுப்பார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய எந்த தெளிவான விளக்கமும் இதுவரை இல்லை.

    மேலும் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இங்குள்ள தாவரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம். இதனால் சுற்றுச்சூழலின் சமநிலையே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த அலையாத்தி காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் சுனாமியின் போது பாதுகாப்பு அரணாக இருக்கும். அங்குள்ள விலங்குகள் மிகவும் முக்கியமானது.


    இதேபோல் பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத அளவில் இருந்தன.

    இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் அஜாக்கிரதையாக இருப்பதாகவே தெரிகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. அபராத தொகையும் கூடுதலாக விதிக்க வேண்டும். அப்படியானால் தான் இது போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யோசித்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள். வெளிநாடுகளைப் போல் விபத்து ஏற்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 2017-ம் ஆண்டு முதல் இதுவரை என்ன முயற்சி எடுத்து உள்ளோம்? இப்போதைய எண்ணெய் கசிவு பற்றி 2017-ம் ஆண்டு போல் பேசப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×