search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிமேடு"

    • வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
    • இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.

    இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பெரிய வகை மீன்களும் அதிக அளவில் கிடைத்து இருந்தது.
    • மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    ராயபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு 25 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பின. மேலும் மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 200 விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். மேலும் பெரிய வகை மீன்களும் அதிக அளவில் கிடைத்து இருந்தது.

    புயல், மழைக்கு பின்னர் இன்று அதிக அளவில் பெரிய மீன்கள் விற்பனைக்கு வந்ததால் மீன் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலை மோதியது. மீன்விலையும் கடந்த வாரத்தை விட இன்று 300 முதல் 350 வரை விலை அதிகமாக விற்கப்பட்டது.

    வஞ்சிரம் ரூ.1200, வெள்ளை வவ்வால் ரூ.1000 -வரைக்கு விலைபோனது. சங்கரா, சீலா, பெரிய இறால், நண்டு போன்ற மீன்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை விலை அதிகமாக இருந்தது.

    எனினும் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் காசி மேட்டில் மீன்விற்பனை நீண்ட நாட்களுக்கு பின்னர் களை கட்டியது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது.

    ராயபுரம்:

    சென்னையில் உள்ள காசிமேடு மீன்மார்க்கெட் மிகப்பெரிய மீன்சந்தையாக உள்ளது. சுமார் 1500 விசைப்படகுகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தடைகாலத்தை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காசிமேடு மீன்மார்க்கெட் களை கட்டி காணப்படும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நள்ளிரவில் தொடங்கும் மீன்வியாபாரம் காலை 7 மணி வரை விறுவிறுப்பாக இருக்கும்.

    கடலுக்குள் சென்று படகுகளில் ஆண்கள் மீன் பிடித்து வந்தாலும் அதனை கரையில் இறக்கி மீன் ஏலக் கூடத்திற்கு எடுத்து செல்வது, மீன்களை தரம் பிரிப்பது, ஏலம் விடுவது, விற்பனை செய்வது, மீன்களை சுத்தம் செய்து கொடுப்பது என அனைத்திலும் பெண்கள் கொடி கட்டி பறக்கிறார்கள். இதனால் காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரும்பாலும் காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக இந்த மீன்விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். இதுதொடர்பாக மீன்களை சுத்தப்படுத்தி கொடுக்கும் பெண் ஒருவர் கூறியதாவது:-

    காசிமேட்டில் மீன் விற்பனையில் பெரும்பாலும் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப சிறிய துண்டுகளாக வெட்டி கொடுப்போம். சில நிமிடத்திலேயே மீன்களை சுத்தப்படுத்தி கொடுத்து விடுவோம். ஒரு மீனை 65 துண்களாகவும் வெட்டி கொடுத்து உள்ளேன். ஒரு கிலோ சூறை மீனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்வோம். இறால் மீன்களை 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சுத்தம் செய்து கொடுத்து விடுவோம்.

    பல தலைமுறைகளாக பலர் இங்கு மீன் விற்பனை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களது வாழ்வாதாரமே இந்த காசிமேடு சந்தைதான்.

    குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது. காசிேமடு மீன்விற்பனை கூடத்தை நவீனமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீன்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து விற்கப்பட்டது.
    • வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300 முதல் ரூ.1400 வரை விற்பனை ஆனது.

    ராயபுரம்:

    காசிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விடுமுறை நாளான இன்று கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பவில்லை. இன்று காலை காசிமேடு துறைமுகத்துக்கு 150 முதல் 180 விசை படகுகள் மட்டுமே கரை திரும்பின.

    இதனால் பெரிய மீன்கள் வரத்து குறைந்தது. மேலும் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து விற்கப்பட்டது. குறிப்பாக வஞ்சிரம், சங்கரா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலை அதிகமாக காணப்பட்டது.

    வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300 முதல் ரூ.1400 வரை விற்பனை ஆனது. விலை அதிகம் என்றாலும் மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச் சென்றனர். பாறை, கொடுவா, சீலா போன்ற மீன்கள் வரத்து இல்லை.

    இன்று விடுமுறை நாள் என்பதால் காசிமேட்டுக்கு அதிகாலை 2 மணி முதலே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஆனால் மீன் வரத்து குறைந்து விலை அதிகமாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    • இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
    • தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின் போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதிநவீன தொலைத்தொடர்பு டிரான்ஸ்மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை மீனவர்களின் படகுகளில் பொருத்தும்போது அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.

    தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஜிசாட்-6 செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்பு அளிக்கும்.

    இதனைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 600 மீனவர்களின் படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பா ண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஜிசாட்-6 செயற்கைகோள் வழியாக இயங்கும்.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரோ இந்த தொழில்நுட்பத்தை வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 1,400 படகுகளில் இவை இணைக்கப்படும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் இதுவரை 900 டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

    நாட்டிலேயே ஜிசாட்-6 மூலம் தகவல் தொடர்பு சாதனங்களைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட வேண்டும் என்றால் அதனை இந்த சாதனம் மூலம் செய்யலாம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இயங்கக்கூடிய செலவு குறைந்ததாகும் என்றார்.

    • வட சென்னை பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் உள்ளதை போன்று இனி காசிமேடு கடற்கரையில் பொழுதை கழிக்கலாம்.
    • புதிய கடற்கரையை உருவாக்குவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக உள்ளன. அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட 2 மடங்கு கூட்டம் இருக்கும்.

    இதற்கிடையே காசிமேடு- எர்ணாவூர் பாரதி நகர் இடையேயான ஒரு பகுதியை அழகுபடுத்தி சென்னை நகர மக்களின் பொழுதுபோக்கும் மற்றொரு கடற்கரையாக மாற்ற அரசு திட்டமிட்டு உள்ளது. இது வட சென்னை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். இதனால் வரும் சில மாதங்களில் வட சென்னை பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் உள்ளதை போன்று இனி காசிமேடு கடற்கரையில் பொழுதை கழிக்கலாம். இதனால் சென்னை நகருக்கு மேலும் ஒரு கடற்கரை வசதி கிடைக்க உள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையின் 3-வது மாஸ்டர் பிளானுக்காக சி.எம்.டி.ஏ.ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் காசிமேடு- எர்ணாவூர் பாரதி நகர் இடையே புதிய கடற்கரையை உருவாக்குவதற்கான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதிய கடற்கரையை உருவாக்குவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) மூத்த அதிகாரிகள் காசிமேடு பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இதில் புதிய கடற்கரை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து காசிமேடு பகுதி மக்கள் கூறும்போது, காசிமேட்டில் புதிய கடற்கரை திட்டத்தால் வடசென்னையின் முகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். எனினும் முழு பகுதியையும் கடற்கரையாக உருவாக்க முடியாத நிலை உள்ளது. எனவே அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வடசென்னையில் மெரினா கடற்கரை போன்று கடற்கரையை உருவாக்க திட்டமிடப்பட்ட உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி செய்ய வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை.

    கடற்கரை பகுதியில் நடைபாதை, அமர வசதியாக பெஞ்சுகள் கொண்ட ஓய்வு இடம், யோகா வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், மெரினா கடற்கரையில் உள்ளதைப் போன்ற உணவுக் கடைகள் போன்றவை அமைக்கப்படும்.குழந்தைகளின் நலனுக்காக ஸ்கேட்டிங் மைதானமும் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது என்றனர். வடசென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, காசிமேட்டில் புதிய கடற்கரை உருவாக்குவதற்கான சி.எம்.டி.ஏ.வின் திட்டம் வரவேற்கதக்கது. அதிகாரிகளின் முதல் கட்ட ஆய்வுக்குப் பிறகு சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பிரபலமான மற்ற நிறுவனங்களின் நிபுணர்களும் விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.

    இந்த பகுதியில் கடல் ஆழமாக உள்ளது. கடல் அரிப்பை தடுக்க கல் போடப்பட்டு உள்ளது.மேலும் திருவொற்றியூர் டோல்கேட் முதல் எர்ணாவூர் பாரதியார் நகர் வரை கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவும் உள்ளது. எனவே முழுவதையும் கடற்கரையாக கொண்டு வர முடியாது.

    இதேபோல் திருவொற்றியூர் மஸ்தான்கோவில் அருகே சூறை மீன்பிடி துறைமுகமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

    ×