search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி அம்பிகா சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்பிகாசமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராம பிரானும், அகத்திய மாமுனிவரும் வழிபட்ட கோவிலாகும். இக்கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்ய வந்தார்.

    கோவில் நிர்வாகி வி.ஆர்.சிவராமன் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக திரண்டு பூரண கும்பம் மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை கவர்னர் தொடங்கி வைத்து அந்த இணையதளம் மூலம் கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். 3 மணி நேரம் இந்த கோவிலில் கவர்னர் இருந்தார். அர்ச்சனையும் செய்தார்.

    விவேகானந்தா பள்ளி மாணவிகள் 108 பேர் சிவனின் பெருமையை விளக்கும் நாட்டிய நடனம் ஆடினார்கள். தொடர்ந்து ருத்ர தாண்டவ நிகழ்ச்சியும் நடந்தது.

    • சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
    • சங்கு நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்று வதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெப்பக்குளத்தில் சங்கு தோன்றியது. அதன்பின்னர் நேற்று காலை அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி வெளியே வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக தோன்றிய சங்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறிய பல்லக்கில் மேள தாளத்துடன் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் பார்வைக்காக அங்கு சங்கு வைக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிவரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கை பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று சிவராத்திரி என்பதால் காலை முதலே கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தோன்றிய சங்கை பார்க்க ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் சங்கை பார்த்து வழிபட்டு சென்றனர்.

    உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் சங்கை பார்க்க வருவதால் வருகிற 13-ந் தேதி வரை சங்கு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சங்கை சுற்றி பூ அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு தாழக்கோவில் கிழக்கு கோபுரம் மின்வி ளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சங்கு தரிச னம் நடைபெறும் நாட்கள் வரை கோபுர மின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
    • 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.

    இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.

    இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.

    இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     

    பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது
    • குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கம் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வண்டலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் மகேந்திரா சிட்டி தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வரை சாலையோரத்தில் எந்த பஸ் நிறுத்த நிழற்குடையும் இல்லை.

    இதனால் பயணிகள் சாலையோரத்தில் வெட்ட வெளியில் பஸ்களுக்கு காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சாலையில் காத்திருக்கிறார்கள்.

    மகேந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளும், மறைமலைநகர், பொத்தேரியை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. தினந்தோறும் மாணவ, மாணவிகள் பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பஸ்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    இதேபோல் ஊரப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வழித் தடங்களிலும் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி வரை சாலையோரத்தில் பஸ்நிறுத்த நிழற்குடை இல்லை.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது, சாலை விரிவாக்கம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பஸ்பயணிகளுக்கு நிழற்குடை, பஸ்நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. சாலையோரத்தில் எது பஸ் நிறுத்தம் என்று தெரியாமல் பயணிகள் கூட்டமாக நிற்கும் போது சிறிது தூரம் தாண்டி பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

    பின்னர் பயணிகள் முண்டியடித்து ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது. மதியம் வெயிலில் வெட்டவெளியில் நிற்கமுடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விரைவில் இந்த பகுதியில் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    • நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி கல்பாக்கம் வருவதை ஒட்டி, "மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக" மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது36). கூலித்தொழிலாளி. சேலம், கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த இவர் மனைவி சந்தோஷம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சிட்லபாக்கம் சர்வம் மங்கலம் நகர் பகுதியில் சென்றார். அப்போது அங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையில் சென்றபோது நிலை தடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். கோவிந்த ராஜ் மகன்கள் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அளவுக்கு அதிகமான உயரத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டதும், அதில் வேகத்தடை இருப்பது குறித்து எச்சரிக்கை வர்ணம் பூசப்படாததும் விபத்துக்கு காரணமாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்ட 5 வேகத்தடைகள் அவசரமாக அகற்றப்பட்டன. மேலும் தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் விதிமுறை மீறி உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வள்ளி என்பவர் பல்லாவரம் பகுதியில் கட்டிடப் பணி செய்துவிட்டு தனது உடன் பணி செய்யும் கொத்தனார் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அனகாபுத்தூர் நோக்கி சென்ற போது அங்கிருந்த வேகத்தடையால் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வேகத்தடையில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை உள்ளது என தெரிவிக்கும் பலகைகள் மற்றும் வண்ணங்களை தீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, விபத்துக்களை தவிர்க்க தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

    தரமில்லாத, தேவையற்ற, சீரற்ற வேகத்தடைகளை சோதனை செய்ய தென் சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷ்னர் தலைமையிலான கமிட்டி உள்ளது.

    இந்த கமிட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள விபத்து தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசிக்க உள்ளனர்.

    இந்த கமிட்டியினர் அனுமதி அளித்த பிறகே வேகத்தடை அமைக்கப்படும். விதிமுறைகளை மீறி இருந்தால் அந்த வேகத்தடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, போக்குவரத்து போலீசார் அனுமதித்த பிறகே வேகத் தடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வேகத் தடைகளும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விதியின் படி சரி செய்யப்படுகின்றது.

    வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும். இரவில் வேகத்தடை இருப்பது தெளிவாக தெரிவதற்காக வேகப் பட்டை செல்லும். வேகத் தடைக்கு முன்பாக 40 மீட்டர் தொலைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது.
    • மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் புகழ்பெற்றவை. கடந்த 1984-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக புகழ் வாய்ந்த புராதன சின்னங்கள் அடங்கிய சுற்றுலா நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.

    தினந்தோறும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து புராதன சின்னங்களை ரசித்து செல்கிறார்கள். புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது. இது கடந்த 50 ஆண்டு காலமாக அப்பகுதியில் பெரும் குறையாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் தற்போது நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 27-ந் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.

    இந்த புதிய பஸ் நிலையம் மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோவில் எதிரில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடி கட்டிடமாக ரூ.90.5 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட உள்ளது. இது மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைப்பட்டு உள்ளது.

    தரைத்தளம் இ.சி.ஆர் புறவழி சாலையுடன் இணைக்கப்பட்டு அதில் 100 கார்கள், 300 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நிறுத்தும் இடமாகவும், முதல் தளம் இ.சி.ஆர் புதிய பாலத்துடன் இணைக்கப்பட்டு சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தட பஸ்கள் 50-க்கும் மேற்பட்டவை நின்று செல்லும் வசதியுடனும் அமைகிறது. மேலும் நேரக்காப்பாளர் அறை, சில்லரை கடைகள், கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பகம், டிக்கெட் கவுண்டர், சுற்றுலாத்துறை அறை, உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. இரண்டாவது தளத்தில் உணவகம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைகிறது.

    அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 25-ந்தேதிக்குள் பணிகளை முடித்து புதிய பஸ் நிலையத்தை திறக்க சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த பஸ் நிலையம் கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய போக்குவரத்து மையமாக அமையும். தொடர்ந்து மாமல்லபுரம் நகரத்திற்கான 100 சதுர கி.மீ., பசுமை மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி களை அதற்கான நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோ சித்து வருவதாக தெரிகிறது.

    • அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
    • அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

    சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.
    • சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 95 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1,802 கோடி மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

    * எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

    * அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக பிரமாண்டமாக செய்யக்கூடியவர்.

    * நாம் செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போட்டால், இன்று ஒரு நாள் போதாது.

    * நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * நிதி நெருக்கடியிலும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் வடசென்னை மக்கள் பயன்பெறுகின்றனர்.

    * நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.

    * கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் தென் சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

    * சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

    * சென்னையில் மேம்பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவானது.

    * சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது என்று கூறினார்.

    • வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.
    • புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.

    வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது.

    புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று ஆண் புலி உயிரிழந்துள்ளது.

    • விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
    • மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 21 வயது உடைய விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அது உணவு உண்பதை குறைத்து சோர்வாக காணப்படுகிறது.

    இதை த்தொடர்ந்து வங்கப்பு புலியின் உடல்நிலையை பூங்காவில் உள்ள மருத்துவ குழு வினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பூங்காவில் பராமரிக்கப் பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளு தலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும் வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது.
    • 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    தாம்பரம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தொடங்கியது. அப்போது நடைபயண பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே அண்ணாமலை பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட திட்டத்தால் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பா.ஜனதாவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2024-2028-ம் ஆண்டுகளில் இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜனதா. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

    தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே இந்த பட்ஜெட்டில் உள்ளது.

    உள்ளூர் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், புற்றுநோய் ஏற்படுவதால் வண்ண பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளார். அதைபோல தமிழக அரசு டாஸ்மாக் கடையில் சத்து டானிக் விற்கிறார்களா? இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை, மதுவுக்கு தடை விதிப்பார்களா?.

    60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரத்து 600 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலந்து கொண்ட ஏராளமான பா.ஜ.க.வினர் அண்ணாமலையை மலர் தூவி வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து அண்ணாமலை கையசைத்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    இதையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் வந்தனர்.

    ×