search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி"

    • கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை கனிமொழி பார்வையிட்டார்.
    • நிரந்தர சீரமைப்பு பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களை கனிமொழி அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில், கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர், வசவப்பபுரம் - கருங்குளம் கிராமத்தில் உள்ள குட்டைக்கல் கண்மாயில் ரூ.75 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர், மதகு அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும், கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து, காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உப்பாற்று ஓடையின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14 கோடியே 88 லட்சம் மதிப்பில் நடந்து வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளையும், ஓடையின் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நிரந்தர சீரமைப்பு பணிகளையும் உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி. பெண் பஞ்சாயத்து தலைவர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று பஞ்சாயத்து துணை தலைவருக்கு அறிவுரை வழங்கினார்.

    • பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.
    • ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மாவடிப் பண்ணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு சத்துணவு முட்டை வந்துள்ளது. எனவே பணியாளர் முட்டையை இறக்குவதற்காக வருகை தந்துள்ளார். அப்போது ஏற்கனவே பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டும் போடப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பணியாளர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர் ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையில் காலையில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தர ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருந்ததால் பள்ளிக்குள் போக முடியாமல் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருந்தனர்.

    அதன்பின்னர் பள்ளி ஆசிரியர்கள் வந்து அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பூட்டை உடைத்து மாணவ, மாணவிகள் உள்ளே சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பள்ளியின் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பூட்டிச் சென்றது தெரியவந்தது.

    பள்ளி கதவுகளுக்கு பூட்டுபோட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் வெளியே காத்திருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணபட்டது.

    • பிரேத பரிசோதனைக்காக ஆபிரகாம் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 60-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது60) பேண்ட் வாத்திய கலைஞரான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    ஆபிரகாமுக்கும், அவரது வீட்டுக்கு எதிரே தனியாக வசித்து வரும் முகமது ஜின்னா (55) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு குடிபோதையில் இருந்த ஆபிரகாம் அவதூறாக பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    இதனால் அவருக்கும் முகமது ஜின்னாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமதுஜின்னா வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து ஆபிரகாம் தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு தனது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவலைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர போலீஸ் ஏ.எஸ்.பி. மதன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதுடன் முகமது ஜின்னாவை கைது செய்தனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆபிரகாம் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
    • கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்காய்ஸ் எனப்படும் அந்த மையம் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.
    • ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள்.

    தூத்துக்குடி:

    நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி தூத்துக்குடி பாகம்பிரியாள்-சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் சிவன் கோவில் சன்னதியில் உள்ள மூலவர், சண்முகர், பிள்ளையார், நடராஜர் தளங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.

    இதேபோல் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பள்ளி வாசல் ஆகியவைகளுக்கு சென்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயபால், கண்ணன், ரமேஸ் கார்த்திகேயன், மாரிமுத்து, புதிய துறைமுகம் லெட்சுமணன், வெலிங்டன், உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். 

    • திடீரென கனமழை பெய்தது.
    • ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

    தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

    கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    • வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
    • கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரை வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு வந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார்.
    • பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெண் உள்பட 2 பேர் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானை சந்தித்த அந்த பெண், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், உத்தரபிரதேசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

    அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் போலி ஐ.ஏ.எஸ். என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 44) என்பதும், உடந்தையாக வந்தவர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்(42) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிப்காட் போலீசார் மங்கையர்கரசி, ரூபிநாத் ஆகிய 2 பேர் மீதும் அரசு ஊழியர் போல் நடித்து அரசு ஊழியரை ஏமாற்றி பணி செய்ய வைத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ரூபிநாத்தை தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

    இதனிடையே கைதான மங்கையர்கரசி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. மங்கையர்கரசியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்துள்ளார்.

    இங்கு சிறிதுகாலம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தாழையூத்து பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வரும் ரூபிநாத், பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு மங்கையர்கரசி சென்றுள்ளார். அப்போது நான் உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டிருந்தேன்.

    துப்பாக்கி உரிமம் தொடர்பாக அளித்த மனுவை தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் நான் ஐ.ஏ.எஸ். என்று சொல்லியும் துப்பாக்கி உரிமத்திற்கு ஒவ்வொரு ஆவணங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், உளவுப்பிரிவு போலீசாரிடம் மங்கையர்கரசி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதில் அவர் போலி ஐ.ஏ.எஸ். என தெரியவந்த நிலையில், நேற்று அவர் தூத்துக்குடியில் சிக்கிவிட்டார்.

    இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த சம்பவம் தொடர்பாக மங்கையர்கரசி மற்றும் ரூபிநாத் மீது ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார். ஒப்பந்தங்கள் எடுத்தல், பள்ளிக்கு சலுகைகள் பெற்றுக்கொள்ளுதல் என பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
    • இது இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விக்சித் பாரத யாத்திரையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.

    இந்த புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். இந்த புதிய முனையத்தின் மூலம், வ.உ.சிரதம்பரனார் துறைமுகத்தின் திறன் விரிவடையும்.

    இது வ.உ.சி துறைமுகத்தில் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் அன்னிய செலாவணியை காப்பாற்றும்.

    இவ்வாறு அவர் குறி்பபிட்டுள்ளார்.

    • மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (வயது 76), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிச்சி விளையில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நெல்லை மாநகர பகுதியில் பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் கடைகளை அடைத்திருந்தனர்.

    இதில் தலைவர் சால மோன், பொதுச்செயலாளர் பெரிய பெருமாள், பொருளாளர் இசக்கி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் வெள்ளையன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதேநேரத்தில் மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.


    டவுனில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வாகையடி முனையில் வெள்ளையன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் டவுன் வாகையடி முனையில் தொடங்கி டவுன், சேரன் மகாதேவி ரோடு, டவுன் வியாபாரிகள் நலச்சங்க அலுவலகம் வரை வியாபாரிகள் மவுன ஊர்வலம் சென்றனர். முன்னதாக அவர்கள், வெள்ளையன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 90 சதவீதம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் தாளமுத்துநகர், புதுக்கோட்டை, முத்தையாபுரம், முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி சாலைகள் வெறிச்சோடியது. மாவட்டத்தில் ஆறுமுகநேரி, பழைய காயல், ஏரல், சாயர்புரம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

    • வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நேற்று மரணம் அடைந்தார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை(12-ந்தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா, பிச்சுவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மறைந்த வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி தெற்கு-வடக்கு மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு நடத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • லாரியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் சிப்காட் போலீசார் இணைந்து தூத்துக்குடி மாநகரில் 3-வது மைல் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் பின்புறம் இருந்த சரக்கை சோதனை செய்தனர். அதில் பேரல்களில் பயோ டீசல் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த டீசலுடன் லாரியை தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    லாரியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் லாரியை ஓட்டிய டிரைவர், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கணக்க நாடார்பட்டி மேல அரியபுரத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகன் சங்கர் (வயது 25) என்பதும், கிளீனர் கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் தவமணி (24) என்பதும் தெரியவந்தது.

    மேலும் தவமணி டிப்ளமோ படித்துவிட்டு லேப்டாப் சர்வீஸ் செய்யும் பணி செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் லாரியில் சுமார் 48 பேரல்களில் 9 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கடத்தி கொண்டு வந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

    ×