search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்து பலியாகினர்.
    • விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் முலமாக சாலையில் இருந்து அகற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கல்லடிக்கோடு. இந்த பகுதி பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பாலக்காட்டில் இருந்து ஒரு கார் வந்தது.

    அந்த காரும், எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி முற்றுலுமாக சேதமடைந்தது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்து பலியாகினர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த கேரளா கோங்காடு மண்ணாறு பகுதியை சேர்ந்த விஜேஷ்(வயது35), விண்டபாறையை சேர்ந்த ரமேஷ்(31), விஷ்ணு(30), முகம்மது அப்சல்(17), பாலக்காடு தச்சம்பாறையை சேர்ந்த மகேஷ் ஆகிய 5 பேர் பலியானார்கள்.

    இந்த பயங்கர விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். காருக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

    பின்பு அதனை பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் முலமாக சாலையில் இருந்து அகற்றப்பட்டது.

    கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து பாலக்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாலக்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் இன்று ரத்து செய்தனர்.

    • புதிதாக கட்டப்பட்ட கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது.
    • 21 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோரமாவு அகாரா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென்று முழுமையாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேராக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டவிரோத செயல்கள் நடந்திருக்கிறது. உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் தொடர்புடைய அனைவர்களது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு முழுவதும் இது போன்ற செயல்களுக்கு எதிராக ஒரு முடிவு எடுப்போம்.

    சட்டவிரோதமான அனைத்து கட்டுமான தொழில்களும் உடனடியாக நிறுத்தப்படும். ஒப்பந்தகாரர்கள், என்னுடைய அதிகாரிகள், நிலத்தின் உரிமையாளர்கள் கூட என அனைவரும் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது, நோட்டீஸ் வழங்கிய பின்னர், உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது எங்களுக்கு மிகப்பெரிய பாடம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.
    • கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தலைநகர் பெங்களூருவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி   கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெங்களூருவில் ஹென்னூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாபுசாபல்யா பகுதியில் கனமழைக்கிடையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.

    தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்கு உள்ளிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 17 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே அவர்களை  மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கட்டடம் இடித்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.
    • காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ராஜஸ்தானில் பேருந்தும் டெம்போ வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று இரவு குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.

    இந்த விபத்தில் இர்பான்(38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பஸ் ஓட்டுநர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது52). தொழிலாளியான இவர் சாலமரத்துப்பட்டி பகுதியில் இருந்து சந்தூர் நோக்கி செல்ல அரசு பஸ்சில் கும்மனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கினார்.

    அப்போது ஊத்தங்கரை பகுதியில் இருந்து ஓலைப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் அஜாகரத்தியாகவும் ஓட்டி வந்து கிருஷ்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    உயிரிழந்த நிலையில் இறந்த கிருஷ்ணன் என்பவர் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தை ஓட்டியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊத்தங்கரை-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களிடம் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகன ஓட்டி ராகுல் காந்தி (32) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில அடைத்தனர்.

    இதேபோன்று அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணனின் உறவினர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
    • இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார்.

    சாலையில் கிடந்த தக்காளிகளுக்கு இரவு முழுவதும் உ.பி. போலீஸ் காவல் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே நெடுஞ்சாலையில் குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.

    இதனால் வண்டியிலிருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

    மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விடியும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்கப்படும் நிலையில் தக்காளிகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. எனவே சாலையிலேயே தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீசார் காவலாக நின்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
    • இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக மெதுவாக ஒரு கார் திரும்பியுள்ளது. அப்போது அவ்வழியே வேகமாக ஒரு பைக் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து பைக்கில் வந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் பைக்கில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து அக்டோபர் 11 அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹூக்ளியில் உள்ள போல்பார் ராஜ்காட் சந்திப்பில் நடந்துள்ளது.

    இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையிலான ரேஸ் போட்டியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் காருக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    • கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்லூரி பஸ்சானது இன்று காலை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 20 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.

    அதேவேளையில், கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சானது திருவிடைமருதூர் அடுத்துள்ள கோவிந்தபுரம் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த கும்பகோணம் மூப்பக்கோவில் மேலத்தெருவை சேர்ந்த முகமது சமீர் (வயது 25), சுந்தரபெருமாள் கோவில் மேலவீதியை சேர்ந்த கார்த்தி (31) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கோர விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் தீப்பிடித்தது தெரிந்தவுடன் ஓட்டுநர் ஜிதேந்திர ஜாங்கிட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார்.

    மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இல்லாத கார் முன்னாள் இருந்து பொதுமக்களை நோக்கி சாலையில் தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது.

    உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.
    • கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    எதிர்பாராமல் நடப்பவை விபத்துக்கள். இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு கேரளாவில் கார் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக வாகனங்கள் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து, மற்ற வாகனங்கள், சாலையின் தடுப்பு, சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகளில் மோதுவது தினந்தோரும் எங்கேயும் நடக்கும் சம்பவங்கள் தான்.

    ஆனால், கார் ஒன்று சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவர் ஒருவர் ஓட்டிவந்த கார், சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.

     


    கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்த சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. இதனால், காரில் இருந்து வெளியே வந்த மருத்துவர், உதவி கோரி கூச்சலிட்டார். காரில் மருத்துவருடன் அவரது மனைவியும் இருந்தார்.

    கிணற்றுக்குள் இருவர் கூச்சலிடுவதை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய மருத்துவர் மற்றும் அவரது மனைவி எந்த வித காயமும் இன்றி உயிர்தப்பினர். 

    • கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.
    • டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி நயினார் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் திசையன்விளையில் உள்ள டிம்பர் டிப்போவில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ந்தேதி திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அவர் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.

    இதனையடுத்து அவரது உறவினர்கள் மந்திரமூர்த்தி நயினார் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.

    இதையடுத்து நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி நயினார் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த கட்டடம் 150 வருட பழமையானது.
    • கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று நேற்றைய தினம் இடிந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டடம் இடிந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் நொடியில் உயிர் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

    சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 முதல் 150 வருட பழமையான அந்த கட்டடம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 6-7 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து வந்தனர்.

    அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பும் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×