என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

    • மினி டெம்போ மோதியது
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு விபத்துகள் நடந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் நடந்த விபத்துகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வழியாக வந்த மினி டெம்போவை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மினி டெம்போவின் டிரைவர் டோரை திறந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் மினி டெம்போ மீது மோதியதுடன் முன்னால் சென்ற மற்றொரு மொபட் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஓடையில் விழுந்தனர். அவர்களுக்கு உடல், தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்கள் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர்.

    விசாரணையில் பலியானதில் ஒருவர் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்த சகாயபெர்வின் (வயது 21) என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய மினி டெம்போவையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×