search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panju Mittai"

    • தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது.
    • 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    தாம்பரம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தொடங்கியது. அப்போது நடைபயண பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே அண்ணாமலை பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட திட்டத்தால் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பா.ஜனதாவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2024-2028-ம் ஆண்டுகளில் இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜனதா. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

    தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே இந்த பட்ஜெட்டில் உள்ளது.

    உள்ளூர் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், புற்றுநோய் ஏற்படுவதால் வண்ண பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளார். அதைபோல தமிழக அரசு டாஸ்மாக் கடையில் சத்து டானிக் விற்கிறார்களா? இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை, மதுவுக்கு தடை விதிப்பார்களா?.

    60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரத்து 600 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலந்து கொண்ட ஏராளமான பா.ஜ.க.வினர் அண்ணாமலையை மலர் தூவி வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து அண்ணாமலை கையசைத்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    இதையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் வந்தனர்.

    • புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
    • திரையரங்குகள், பூங்காக்கள், பள்ளிகள், கடற்கரைகள், கோவில் விழாக்களை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

    பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் 'ரோடமைன்-பி' எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) &(v) ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 ன்படி 'ரோடமைன்-பி' எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    மேலும், இதுகுறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தொடர் சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளது.

    திரையரங்குகள், பூங்காக்கள், பள்ளிகள், கடற்கரைகள், கோவில் விழாக்களை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சட்டத்திற்கு புறம்பாக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை யாரும் வாங்கி உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தியது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    * உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

    * முதல்வருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    * விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுதி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.

    புதுவை:

    புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் பல்வேறு நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வந்தனர்.

    இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

    இந்நிலையில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * புதுச்சேரியில் அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    * பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    * உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.

    * மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

    • பஞ்சு மிட்டாய் விற்றவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
    • ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமின் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என்பதும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

    பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சதாசிவம், செல்வம், அழகுபாண்டி, கண்ணன் உள்ளடங்கிய அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

    இதன் மாதிரிகள் கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் வாங்கிய பஞ்சு மிட்டாய்களை உடனடியாக விற்பனையாளரிடமே கொடுத்து காசு வாங்கி சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இந்த ஆய்வு மெரினாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:-

    புதுச்சேரி விவகாரத்தை தொடர்ந்து மெரினாவில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இதில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி என்ற உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பது தெரியவந்தால், அதை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை சப்ளை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் வெளிவரும்.

    இந்த ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயமும் இருக்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இயற்கைக்கு மாறான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×