search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அரசு டாஸ்மாக் மதுவுக்கு தடைவிதிக்குமா?
    X

    பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அரசு டாஸ்மாக் மதுவுக்கு தடைவிதிக்குமா?

    • தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது.
    • 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    தாம்பரம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தொடங்கியது. அப்போது நடைபயண பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே அண்ணாமலை பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட திட்டத்தால் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பா.ஜனதாவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2024-2028-ம் ஆண்டுகளில் இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜனதா. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

    தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே இந்த பட்ஜெட்டில் உள்ளது.

    உள்ளூர் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், புற்றுநோய் ஏற்படுவதால் வண்ண பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளார். அதைபோல தமிழக அரசு டாஸ்மாக் கடையில் சத்து டானிக் விற்கிறார்களா? இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை, மதுவுக்கு தடை விதிப்பார்களா?.

    60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரத்து 600 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலந்து கொண்ட ஏராளமான பா.ஜ.க.வினர் அண்ணாமலையை மலர் தூவி வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து அண்ணாமலை கையசைத்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    இதையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் வந்தனர்.

    Next Story
    ×