search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிட்லபாக்கத்தில் வேகத்தடையால் தொழிலாளி பலி
    X

    சிட்லபாக்கத்தில் வேகத்தடையால் தொழிலாளி பலி

    • ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது36). கூலித்தொழிலாளி. சேலம், கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த இவர் மனைவி சந்தோஷம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சிட்லபாக்கம் சர்வம் மங்கலம் நகர் பகுதியில் சென்றார். அப்போது அங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையில் சென்றபோது நிலை தடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். கோவிந்த ராஜ் மகன்கள் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அளவுக்கு அதிகமான உயரத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டதும், அதில் வேகத்தடை இருப்பது குறித்து எச்சரிக்கை வர்ணம் பூசப்படாததும் விபத்துக்கு காரணமாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்ட 5 வேகத்தடைகள் அவசரமாக அகற்றப்பட்டன. மேலும் தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் விதிமுறை மீறி உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வள்ளி என்பவர் பல்லாவரம் பகுதியில் கட்டிடப் பணி செய்துவிட்டு தனது உடன் பணி செய்யும் கொத்தனார் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அனகாபுத்தூர் நோக்கி சென்ற போது அங்கிருந்த வேகத்தடையால் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வேகத்தடையில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை உள்ளது என தெரிவிக்கும் பலகைகள் மற்றும் வண்ணங்களை தீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, விபத்துக்களை தவிர்க்க தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

    தரமில்லாத, தேவையற்ற, சீரற்ற வேகத்தடைகளை சோதனை செய்ய தென் சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷ்னர் தலைமையிலான கமிட்டி உள்ளது.

    இந்த கமிட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள விபத்து தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசிக்க உள்ளனர்.

    இந்த கமிட்டியினர் அனுமதி அளித்த பிறகே வேகத்தடை அமைக்கப்படும். விதிமுறைகளை மீறி இருந்தால் அந்த வேகத்தடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, போக்குவரத்து போலீசார் அனுமதித்த பிறகே வேகத் தடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வேகத் தடைகளும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விதியின் படி சரி செய்யப்படுகின்றது.

    வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும். இரவில் வேகத்தடை இருப்பது தெளிவாக தெரிவதற்காக வேகப் பட்டை செல்லும். வேகத் தடைக்கு முன்பாக 40 மீட்டர் தொலைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×