search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 475 பேர் வந்துள்ளனர்.

    ஏற்கனவே 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரு குழுக்கள் வர உள்ளன. மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேர் தங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 9 முகாம்களில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 4,056 பேர் தங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் மழை நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் தாமிரபரணி நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்து உள்ளன. அந்தப் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகரைப் பொருத்தவரையில் மேலப் பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.

    சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக் கூடிய இடங்களில் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற குளிர்கால தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. மேலும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார். சாலைகளில் நடந்து சென்றும், பேருந்தில் பயணித்தும் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன் உடன் இருந்தார்.


    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்று 80778 80779 தொடர்பு எண்ணையும் கனிமொழி அறிவித்து இருந்தார்.


    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
    • ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பொன்னேரி:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ளம்பாதித்த பகுதிகளை மத்தியகுழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவின் அதிகாரிகள் ஏ.கே. சிவ்ஹரே, விஜயகுமார், பவ்யா பாண்டே உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடன் இருந்தார். புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிவரை பழவேற்காடு பகுதியில் மத்திய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது விவசாயிகள் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகியது குறித்து பயிர்களை பிடுங்கி காண்பித்தனர். தொடர்ந்து தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு குறித்தும் ஆய்வு செய்தனர். பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாலசந்தர், பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றி வேலன் உடன் இருந்தனர்.

    • வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.
    • பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 3 லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை பல வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.

    இந்நிலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்வது என்பது பொதுமக்களுக்கு சவாலான பணியாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி கழுவி வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனார் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். ஏராளமானோர் துப்புரவு நிறுவனங்களை அணுகுவதால் அவர்கள் கெடுபிடி காட்டுகிறார்கள். அத்துடன் வீடுகளை கழுவி சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை 2 மடங்காக அதிகரித்துவிட்டனர்.

    சென்னையில் இதற்கு முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலித்தனர். தற்போது அந்த கட்டணத்தை ரூ.7,500 ஆக அதிகரித்துவிட்டனர். 2 படுக்கை அறை, 3 படுக்கை அறை கொண்ட வீடுகளுக்கு இன்னும் அதிகமாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வட சென்னையில் உள்ள பல் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக மூத்த குடிமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேறு வழியில்லாமல் அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் வீடுகளில் இருந்த பொருட்களை இழந்துள்ள நிலையில் இந்த கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

    இதுகுறித்து தனியார் துப்புரவு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வீடுகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஏராளமான வீடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக எங்களால் அனைத்து அழைப்புகளையும் ஏற்க முடியவில்லை.

    எனவே நாங்கள் தற்காலிக ஊழியர்களையும் பணிக்கு நியமித்துள்ளோம். ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் சுத்தம் செய்து விடுகிறோம். அதை விட பெரிய வீடுகளுக்கு கூடுதல் நேரம் ஆகிறது. தினமும் 16 மணி நேரம் வேலை செய்கிறோம். ஒரு நாளில் 4 முதல் 5 வீடுகளை சுத்தம் செய்கிறோம். எங்களிடம் வீடுகளை சுத்தம் செய்வதற்கான தனித்தனி பேக்கேஜ்கள் உள்ளன.

    தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் சுத்தம் செய்யும் பணிக்கு செல்லும் பல ஊழியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

    இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.

    சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.

    மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.

    வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் மது விருந்து நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செண்பகதோப்பு ஓடையை கடந்து 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மது விருந்து முடிந்து நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு ஓடையில் அதிக அளவு தண்ணீர் வர தொடங்கியது.

    மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றால் ஓடையை கடந்து விடலாம் என எண்ணி ஓடைக்குள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி உள்ளனர்.

    ஆனால் அதிக நீர்வரத்து காரணமாகவும், போதையில் இருந்ததாலும் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து சிக்கிக் கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினார். மற்ற இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் தனி நபராக அவர் நண்பர்களை மீட்க முயன்றார். ஆனால் இயலவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரம் அவர்கள் தண்ணீரிலேயே அங்கிருந்த கோரைப் புல்லை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர்.

    அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.

    விசாரணையில் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ராஜபாளையம் குப்புசாமி ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்குமார் (வயது 25), பி.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (31) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு மது விருந்து நடந்ததா? நடத்தியவர்கள் யார்? அதில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?, ஓடையில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து விட்டு வந்தவர்களா?, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    • அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.
    • பாதுகாக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததையும், அந்த மழைநீருடன் கழிவு நீர் கலந்ததையும், அந்த நீரில் மக்கள் நடமாடியதையும், இந்தத் தருணங்களில் பாது காக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. இதன் காரணமாக, பொதுமக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளை மேற் கொள்ளவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
    • மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). கொத்தனார். இவரது மனைவி தாந்தோணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த கனமழையால் கன்னிகைப்பேர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வந்த போது கன்னிகைப்பேர்-திருக்கண்டலம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் கால்வாயில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த, பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல்(51). இவர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மயில்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது சத்தரை பஸ்நிறுத்தம் எதிரே உள்ள குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.

    திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது மகேஷ் சிறுநீர் கழிப்பதற்காக டீக்கடையின் சுவர் ஓரம் சென்றார். அவர் அருகில் இருந்த மின்இணைப்பு பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது.
    • மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையை ஒட்டியுள்ள நேரு தெரு மிகவும் பள்ளமான தெருவாகும். சென்னை சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இந்த தெருவில்தான் வந்து சேருகிறது. இதனை சுற்றியுள்ள தெருக்கள் சற்று மேடாக காணப்படுவதால் இங்கிருந்து வெள்ளம் வெளியேறவில்லை.

    இந்த பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலும் தூர்ந்து போய்விட்டதால் வெள்ளம் வடியாமல் 4 நாட்களாக தேங்கி கிடந்தது. மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்தனர்.

    மழை ஓய்ந்து 3 நாட்களாக வெள்ளத்தை அப்புறப்படுத்திய நிலையில் நேரு தெருவில் வெள்ளத்தை அகற்ற நேற்று காலை வரை யாரும் வரவில்லை. இதனால் நேற்று காலை வரை ஒரு ஆள் உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது. நேற்று மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை அந்த பகுதியில் வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் 4 நாட்களாக அந்த பகுதி மக்கள் உணவுக்கே வழியில்லாமல் தவித்தனர்.

    • கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து இடங்களும் வெள்ளக்காடானது. கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அப்பகுதியில் மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வெள்ள நிவாரண பணிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பூந்தமல்லி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் எங்கள் பகுதியில் மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார சப்ளையும் கொடுக்கவில்லை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள வார்டில் இந்த நிலைமை என்றால் மற்ற வார்டுகளின் நிலை எப்படி இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மழைநீரை உடனே அகற்றி மின் வினியோகம் வழங்க கோரி லஸ்கார்னர் பகுதியில் பொதுமக்கள் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ×