search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நொய்யல் ஆறு"

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    காங்கயம்:

    மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 172 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணை அருகே கத்தாங்கண்ணி, வயக்காட்டுப்புதூர், கணபதிபாளையம், வெங்கலப்பாளையம உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமமக்கள் போதிய சாலை வசதி இல்லாததால் பரிசல் மூலம் நொய்யல் ஆற்றை கடந்து சென்னிமலை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாகியும் சாலை வசதி மற்றும் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் ஆற்றின் இரு கரையிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டியுள்ளனர். பரிசலில் ஏறியபின் அந்த கம்பிகளை பிடித்து கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    சாலை வழியாக சென்றால் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் வெங்கலப்பாளையம் பகுதியில் பரிசலில் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு குறையும் என்பதால் இவ்வாறு பரிசலை பயன்படுத்தி ஆற்றை கடப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் 2 ஆயிரம் கன அடி வரை சென்று கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் நொய்யல் ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, பரிசலில் செல்ல முடியாத நிலையில் இன்றும் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ஊத்துக்குளி, சென்னிமலை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு பாலம் அமைக்க கோரி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

    • நொய்யல் ஆற்றில் நுரை சூழ்ந்து வெண்மையாக பனிமலை போல காணப்படுகிறது.
    • சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    நொய்யல் ஆறு கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 165 கி.மீ., தூரம் பயணித்து காவிரியில் கலக்கக் கூடிய ஆறு ஆகும். இந்த ஆறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாக்கடை நீர் கழிவுகளாலும், திருப்பூரின் சாய க்கழிவு நீராலும் மாசடைந்து வந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புது வெள்ளம் பெருகி நொய்யல் ஆற்றில் வழிந்தோடுகிறது. திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை பகுதியில் இந்த மழை வெள்ளமானது ஆர்ப்பரித்து பொங்குகிறது. இதனால் நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கி வருகிறது. கோவிலுக்கு செல்லக் கூடிய சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நொய்யல் ஆற்றில் நுரை சூழ்ந்து வெண்மையாக பனிமலை போல காணப்படுகிறது. அந்த பகுதி முழுக்க நுரையால் சூழ்ந்து உள்ள நிலையில், ஆற்றங்கரையில் உள்ள சாய, சலவை பட்டறைகள் சுத்திகரிக்காத சாய நீரை ஆற்று வெள்ளத்தில் கலப்பதால் தான் இது போல பெருமளவு நுரை உருவாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக மங்கலம், வெள்ளஞ்செட்டி பாளையம், ஆண்டிபாளையம், பாரப்பாளையம் மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக குழாய்களை அமைத்து ஆற்றில் கழிவு நீரை கலப்பதாகவும், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் துளிகூட சுத்தி கரிக்காத சாயக்கழிவு நீரை அப்படியே திறந்து விடுவதால் தான் ஆள் உயரத்துக்கு நுரை ஏற்படுவதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக ஆற்றுக்கு தண்ணீர் செல்வதற்கு அமைத்துள்ள குழாய்களை அகற்ற வேண்டும் எனவும், தொடர்ச்சியாக சாயக்கழிவு நீர் கலப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5மணி நேரம் போராடி கயிறு மூலம் 4 வாலிபர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எதற்காக நொய்யல் ஆற்றுக்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது.
    • சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    திருப்பூர்:

    ஜம்முகாஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் இந்திய அளவிலான மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிற ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த பணிகள் மற்றும் ஆறுகளை பராமரிக்கும் பணிகள் குறித்த கலந்தாய்வுகூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகள் குறித்தும், நொய்யல் ஆறு பராமரிப்பு பணிகள் குறித்தும், அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகாரிகள் குழுவினர் பாராட்டு தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    இது குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது. கோவையில் இருந்து தொடங்கும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொழில்கள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது.

    குறிப்பாக திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருப்பதால் நொய்யல் ஆற்றில் பனியன் நிறுவன கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுபோல் நொய்யல் ஆற்றை சீரமைக்கவும், தூர்வாரவும் செய்துள்ளோம். இந்த பணிகள் காரணமாக நொய்யல் ஆறு தற்போது சுத்தமாக உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.110 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூரை விவரிக்கும் ஓவியங்களும் கரைகளில் வரையப்பட்டுள்ளன. நொய்யல் ஆறு பகுதியில் பார்க் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் மீதமுள்ள 25 சதவீத பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அப்போது திருப்பூர் நொய்யல் ஆறு புதுப்பொலிவுடனும், அழகாகவும் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் நடந்த கருத்தரங்கில் இது குறித்து தெரிவித்த போது பலரும்பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    இது நமது திருப்பூர் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். திருப்பூர் மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு பராமரிப்பு மட்டுமின்றி பல பணிகளுக்கும் திருப்பூர் மாநகராட்சி அனைத்து மாநகராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளாட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் ஆற்றின் இருகரைகளும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நொய்யல் ஆறு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்றின் இருபுறமும் கரைகளை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை பொறியாளர் வாசுகுமார் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    நொய்யல் ஆற்றின் கரையோரம் சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்கள், சைக்கிள் பாதை உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டப்பணிகளை தனியார் நிறுவனம் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தன்னார்வலர்களுடன் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    • புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன
    • புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன

     வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள குளங்கள் நிரம்பின.

    நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை. எனவே ஆறு வறண்டு காணப்பட்டது. இங்கு தற்போது வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நொய்யல் ஆற்றின் சித்திரைசாவடி தடுப்ப ணையில் தண்ணீர் பெரு க்கெடுத்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இதனால் தொண்டாமுத்தூரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    எனவே தொண்டா முத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆற்றுக்கு வந்து நீரில் குளித்து மகிழ்கின்றனர்.

    ஒரு சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். இதில் தற்போது பெரிய அளவில் மீன்கள் கிடைத்து வருகின்றன. எனவே பலரும் ஆர்வமிகுதியில் கூட்டம் கூட்டமாக வந்திருந்து போட்டி போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    தொண்டாமுத்தூரின் கிளை ஆறுகளில் இருந்தும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

    • அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.
    • வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்த விவசாயிகள் தண்ணீரை வணங்கி வரவேற்றனர்.

    வடவள்ளி,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். இந்த கால கட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    சில நாட்கள் பெய்த மழை, அதன் பின்னர் பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். பயிர்களை பயிரிடுவதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    கோவை நொய்யல் ஆற்றில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி வறண்டே காணப்பட்டது.

    அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.

    தண்ணீர் பாய்ந்தோடிய ஆற்றில் இப்படி ஷவர் வைத்து, அதில், கை, கால்களை நனைத்து சென்ற பக்தர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்ட பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சிறுவாணி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

    மேலும் தொடர் மழையால் கோவை குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி அணைக்கு நேற்று மதியம் முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதுவரை வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்ததும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சந்தோஷம் அடைந்தனர்.

    விவசாயிகள் ஓடி சென்று அணைக்கு வந்த நீரை தொட்டு, கைகூப்பி வணங்கி வரவேற்றனர். சிலர் தடுப்பணையில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    தற்போது கீழ்சித்தரை சாவடி கிளை வாய்க்காலில் இருந்து சுண்டப்பாளையம், வேடபட்டி வழியே வாய்க்காலில் பாசனத்திற்கான நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வெங்காயம், தாக்காளி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    • இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர்.

    சூலூர்

    கோவை மாவட்டத்தின் முக்கிய நதிகளில் நொய்யல் ஆறு குறிப்பிடத்தக்கது. இது கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் வழியாக செல்கிறது. அதற்கு கோவையில் உள்ள சூலூர் பட்டணம், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் 2 தடுப்பணைகள் உள்ளன. நொய்யல் ஆற்றில் கழிவு நீர் அதிகம் கலக்கிறது. ஆகாயத்தாமரைகளும் நிறைந்து உள்ளது. எனவே நொய்யல் ஆற்றின் மேற்கண்ட 2 தடுப்பணைகளில் இருந்தும் வெளியேறும் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி பெருகி பறந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் கோவையில் உள்ள சூலூர், ராவத்தூர் தடுப்பணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக நுரை அதிகமாக செல்கிறது. இதனால் ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும், நுரை கலந்த நீர் உடம்பில் பட்டால், அலர்ஜி- அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது.
    • நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இதில் ஜம்மனை ஓடை மங்கலம் ரோட்டிலும், சபரி ஓடை காங்கயம் ரோட்டிலும், சங்கிலிப்பள்ளம் தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோட்டிலும் கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேர்கிறது.

    தற்போது தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஓடைகள் வாயிலாக நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தற்போது மண் மேடுகளும், முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓடைகளை தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சங்கிலிப் பள்ளம் ஓடையில் நிரம்பியுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் எந்திர வாகனம் மூலம் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    • 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    திருப்பூர் :

    திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூா்பேட்டையைச் சோ்ந்த சகுந்தலா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்து விடுகின்றனா். இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சாா்க்காா் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.
    • நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக நொய்யல் ஆறு விளங்கி வந்தது. இந்தநிலையில் சில ஆண்டுகளாக பனியன் கம்பெனிகள் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.

    இதையடுத்து நொற்றல் ஆற்றை பாதுகாக்க கோரி சமூக ஆர்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர். மேலும் தமிழக அரசு, சுற்றுப்புற சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர். தமிழக அரசு சாய ஆலைகளில் இருந்து கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் தரைப்பாலம் அருகே இரண்டு புறத்திலும் இருந்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் கழிவு நீர் அருவி போல ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. இது நகரின் முக்கிய பகுதியாகும். மழைநீர் வெளியேறுவதற்காக தெருக்கள் மற்றும் வீதிகளில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சாயக்கழிவுகளை திறந்து விடுகின்றனர். பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் வீடுகள், ஓட்டல்களில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு கழிவு நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் கழிவுகளை வெளியேற்றாமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றுவது எந்த வகையில் சரியானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலை நீடித்தால் நொய்யல் ஆறு மிகவும் பாழடைய வாய்ப்புள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    ×