search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜம்மு-காஷ்மீரில் நடந்த கருத்தரங்கில் நொய்யல் ஆற்றை சிறப்பாக பராமரிக்கும் திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு
    X

    கருத்தரங்கில் பங்கேற்ற திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் பலரை படத்தில் காணலாம்.  

    ஜம்மு-காஷ்மீரில் நடந்த கருத்தரங்கில் நொய்யல் ஆற்றை சிறப்பாக பராமரிக்கும் திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு

    • திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது.
    • சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    திருப்பூர்:

    ஜம்முகாஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் இந்திய அளவிலான மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிற ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த பணிகள் மற்றும் ஆறுகளை பராமரிக்கும் பணிகள் குறித்த கலந்தாய்வுகூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகள் குறித்தும், நொய்யல் ஆறு பராமரிப்பு பணிகள் குறித்தும், அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகாரிகள் குழுவினர் பாராட்டு தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    இது குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது. கோவையில் இருந்து தொடங்கும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொழில்கள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது.

    குறிப்பாக திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருப்பதால் நொய்யல் ஆற்றில் பனியன் நிறுவன கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுபோல் நொய்யல் ஆற்றை சீரமைக்கவும், தூர்வாரவும் செய்துள்ளோம். இந்த பணிகள் காரணமாக நொய்யல் ஆறு தற்போது சுத்தமாக உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.110 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூரை விவரிக்கும் ஓவியங்களும் கரைகளில் வரையப்பட்டுள்ளன. நொய்யல் ஆறு பகுதியில் பார்க் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் மீதமுள்ள 25 சதவீத பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அப்போது திருப்பூர் நொய்யல் ஆறு புதுப்பொலிவுடனும், அழகாகவும் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் நடந்த கருத்தரங்கில் இது குறித்து தெரிவித்த போது பலரும்பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    இது நமது திருப்பூர் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். திருப்பூர் மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு பராமரிப்பு மட்டுமின்றி பல பணிகளுக்கும் திருப்பூர் மாநகராட்சி அனைத்து மாநகராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×