search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை-நொய்யல் ஆற்றில் நீர் வர தொடங்கியது
    X

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை-நொய்யல் ஆற்றில் நீர் வர தொடங்கியது

    • அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.
    • வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்த விவசாயிகள் தண்ணீரை வணங்கி வரவேற்றனர்.

    வடவள்ளி,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். இந்த கால கட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    சில நாட்கள் பெய்த மழை, அதன் பின்னர் பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். பயிர்களை பயிரிடுவதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    கோவை நொய்யல் ஆற்றில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி வறண்டே காணப்பட்டது.

    அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.

    தண்ணீர் பாய்ந்தோடிய ஆற்றில் இப்படி ஷவர் வைத்து, அதில், கை, கால்களை நனைத்து சென்ற பக்தர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்ட பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சிறுவாணி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

    மேலும் தொடர் மழையால் கோவை குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி அணைக்கு நேற்று மதியம் முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதுவரை வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்ததும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சந்தோஷம் அடைந்தனர்.

    விவசாயிகள் ஓடி சென்று அணைக்கு வந்த நீரை தொட்டு, கைகூப்பி வணங்கி வரவேற்றனர். சிலர் தடுப்பணையில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    தற்போது கீழ்சித்தரை சாவடி கிளை வாய்க்காலில் இருந்து சுண்டப்பாளையம், வேடபட்டி வழியே வாய்க்காலில் பாசனத்திற்கான நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வெங்காயம், தாக்காளி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×