search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flyover"

    • 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி மெதுவாக நடக்கிறது.

    இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

    வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.

    மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகி றது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் சென்னை கலெக்டரால் நியமிக்கப்பட்டு நடக்கிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.

    இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
    • பாலத்தின் பாதி பகுதிகள் கட்டப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதிக்கு செல்லும் தண்டவாளத்தின் குறுக்கே உள்ள லெவல் கிராசிங்கில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இந்த வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்னை- திருவள்ளூர் இடையே செல்கின்றன.

    ஆனால் பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இந்த பாலம் கட்டுமான பணியில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதனால் பாலம் கட்டுமான பணி தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பட்டாபிராம் பாலம் கட்டுமான திட்டம் இன்னும் கனவு திட்டமாகவே உள்ளது. பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது. மேம்பாலத்தின் இருபுறமும் 7.25 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் சர்வீஸ் சாலைக்கு 3.5 மீட்டர் அகலமே விடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இந்த வழியாக ஆவடி மற்றும் திருவள்ளூர் நோக்கி தினமும் லட்சக்கணக்காணவர்கள் பயணிக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 வருடங்கள் ஆகியும் 4 வருடங்களுக்கு முன்புதான் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனாலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலம் கட்டுமான பணிகள் காலதாமதம் ஆனது.

    பின்னர் வருவாய் துறையினர் தலையிட்டு 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தினார்கள். ஆனாலும் இந்த திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. பாலத்தின் பாதி பகுதிகள் கட்டுப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகன போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் சர்வீஸ் சாலையை பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சர்வீஸ் சாலையை பராமரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த வழியாக ஆம்புலன்சு செல்வதில் கூட சிரமமாக உள்ளது. அவசர காலங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்டாபிராம் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையத்தில் யூ வளைவில் திரும்பி தற்போதுள்ள சாலையில் ஏறி திருநின்றவூர் நோக்கி சென்று சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதிகாரிகள் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பாலம் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • இன்று முதல் போக்குவரத்து தொடங்கியது
    • அவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை-நாகப்பட்டி னம் 4 வழி சாலை பணிகள் எம்.என் குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்த 4 வழி சாலையில் 5 பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி திருவண்டார் கோவில் மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல அச்சமடைந்தனர். மேலும் அவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருபுவனை, கண்ட மங்கலம் பகுதியில் ஒரு வழி சாலை அமைக்கப் பட்டு வாகனங்கள் சென்று வந்தது. மேலும் கண்ட மங்கலம் மேம்பாலத்தின் தெற்கு புறமாக செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருவாண்டார்கோயில், திருபுவனை வழியாக ஒரு வழி பாதையில் கடந்த 8 நாட்களாக சென்று வந்த ன. இதனால் அப்பகுதிகளில் காலை, மாலையும் கடுமை யான போக்குவரத்து நெரிச லும் வாகன விபத்துகளும் நடந்தது.

    தற்போது 8 நாட்க ளுக்குப் பிறகு மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கப்பட்டது. இன்று காலை அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் அனைத்து வாக னங்களும் செல்கின்றன.

    • ருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது.
    • 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இணைப்பு சாலைகள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன. வெளி மாநில வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர், மணல் லாரிகள், சரக்கு வேன்கள், ஆம்புலன்சுகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கின்றன.

    கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக பல்லடம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இணையாக விபத்துகள், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி ரிங் ரோடு, கரூர்- கோவை பசுமை வழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. சமீபத்தில் பல்லடம் - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்லடம் வட்டாரத்தில் நடந்த வாகன விபத்துகள், மற்றும் உயிரிழப்புகள் புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

    இதில் 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 110 பேர் வரை வாகன விபத்துகளில் மட்டும் உயிரிழக்கின்றனர். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல்லடத்தை காட்டிலும் குறைந்த அளவு போக்குவரத்து கொண்ட தாராபுரத்தில் கூட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தொகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது கானல் நீராகவே உள்ளது. எனவே சந்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை தவிர்க்கவும் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர்கள் எபனேசர், ஹெப்சிபா ஜோன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒப்பந்த தாரர் சுப்பாரெட்டியார், அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவர் தங்க பாண்டியம்மாள், வெம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒன்றிய பிரதிநிதி சர்க்கரை, கிளை செயலாளர்கள் நாக ராஜ், மணி பிரகாசம், வேல் ராஜ், மாரிச்சாமி, பெரிய சாமி, சுப்பையா, குருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.
    • சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.

    டெல்லியில் மூன்று வழிச்சாலை கொண்ட சராய் காலே கான் மேம்பாலத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த 5 ஆண்டுகளில் 30 மேம்பாலங்கள் கட்டியதில் 557 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், "கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.

    முன்பு, ஆசிரமத்திற்குச் செல்வது என்பது நெரிசலில் சிக்கி மணிக்கணக்கான நேரம் ஆகும். ஆனால் ஆசிரமம் வரையிலான மேம்பாலம் நீட்டிப்பு மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை அந்த சிக்கலைத் தீர்த்துவிட்டன. இந்த மேம்பாலம் திறப்பது சாராய் காலே கானை நெரிசல் இல்லாத பகுதியாக மாற்றும்" என்றார்.

    • ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வைப்பாற்றின் குறுக்கே உருளைகுடி ஊராட்சி பீக்கிலி பட்டி கிராமம் முதல் சங்கராபுரம் கிராமம் வரை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் வகையில் நெல்லை நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் முருகேசன், ராதா கிருஷ்ணன், நவநீத கண்ணன், சின்ன மாரி முத்து, ராம சுப்பு, விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சாத்தூர் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கனமழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பழனியை அடுத்துள்ள பெருமாள் புதூர், பெரியம்மாபட்டி, பச்சையாறு கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பாக பச்சை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி பாதை அமைத்துக் கொடுத்து ள்ளனர். கன மழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால் பச்சையாறு கிராமத்திலிருந்து பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர். உடனடி யாக தற்காலிக பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலம் சீரமைப்பு உடனடியாக நடைபெறாது என்பதால் மேலும் சில நாட்களுக்கு பணியில் தொய்வு ஏற்படும் எனவும் தெரிகிறது.

    • சாலை 21 கி.மீ. தூரத்துக்கு 2 அடுக்குகளுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது.
    • பறக்கும் சாலை பணிகளை 2½ வருடத்தில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைக்க கடந்த 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க. அரசு சுற்றுச்சுழல் பிரச்சினைகளை காட்டி இந்த திட்டத்தை நிறுத்தியது.

    இந்நிலையில் தற்போது தி.மு.க. அரசு அமைந்த பிறகு இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை ரூ.3,570 கோடி செலவில் உருவாகிறது.

    இந்த சாலை 21 கி.மீ. தூரத்துக்கு 2 அடுக்குகளுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளும் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

    இந்த பறக்கும் சாலையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மும்பையை சேர்ந்த ஜெ.குமார் இன்ப்ரா நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த பறக்கும் சாலை பணிகளை 2½ வருடத்தில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பறக்கும் சாலை நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை 2 அடுக்கு கொண்டதாக இருக்கும். இதில் முதல் அடுக்கு பறக்கும் சாலை கோயம்பேடு- துறைமுகம் இடையே உள்ளூர் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும்.

    இதில் 7 இடங்களில் நுழைவு பாதையும், 6 இடங்களில் வெளியேறும் பாதையும் அமைக்கப்படுகிறது. 2-வது அடுக்கு மூலம் துறை முகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் எளிதாக செல்லலாம். இந்த பறக்கும் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் ஆறு வழியாகவும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையிலும் அமைகிறது.

    துறைமுகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சரக்குகளை விரைவில் கொண்டு செல்ல இந்த பறக்கும் சாலை திட்டம் உதவும்.

    • தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேம்பாலங்களுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர். சாலை) 4 மேம்பாலங்கள் கட்டுவதற்கு மாநில அரசு ரூ.331 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான முதல் தவணையாக ரூ.50 கோடியை வழங்கியுள்ளது.

    தரமணி-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர். சாலை-பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலங்களுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனம் ரூ.331 கோடியும், மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெடுஞ்சாலைத்துறையினர் இப்பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.
    • ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் புறவழிச் சாலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. முக்கிய மான ஊர்களுக்கு செல்ல வேண்டிய மேம்பாலமாக உள்ளதால் இதில் ஏராளமான கனரக வாகனங்களும், பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சா லைத்துறையினர் இப்பா லத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் திடீரென ஒரு அடி வட்டத்தில் குழி ஏற்பட்டது.

    மேலும் அந்த குழியை சுற்றி இரண்டு அடி தூரத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் செல்வதும் வருவதும் என உள்ளது. ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து உள்ள பாலம் என்ற நிலையில், ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து வருகின்றனர்.

    -உடனடியாக இந்த பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×