search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை"

    • பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
    • மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

    மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்குதல் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெரும்பாலான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கனமழையால் 11 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    அண்மையில் பெய்த கனமழையால் உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
    • விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

    ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.

    கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

    விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

    கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

    துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
    • 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது.

    கோவை:

    குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்தது. ஆறுகள், நீரோடைகள், சிறு ஆறுகள் உள்ளிட்டவையும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் 2-வது நாளாக மழை நீடித்தது.

    குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் தேங்கியும் நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை இன்று காலை ஊழியர்கள் அகற்றினர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இந்த கோடைமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது.

    கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பில்லூர் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்துவிட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வர தொடங்கியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் 2 மாதங்களுக்கு பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு.

    தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    13-ந் தேதி (இன்று) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழைபெய்யக்கூடும்.

    தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கேவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • விபத்து காரணமாக கவுகாத்தி விமான நிலையத்தில் சேவை பாதிப்பு.

    அசாம் மாநிலத்தில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை, விமான மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியுற்றனர். கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 



    • சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.

    தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.

    நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.

    • கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்தன.
    • வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை கட்ட ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமடைந்தன.

    மழை வெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2 லட்சம் வரையும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுதுநீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலையில் சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.
    • காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் தொடர்ந்து மழை பெய்தது.

    இந்நிலையில், விகாஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் திடீரென ராசத பள்ளம் ஏற்பட்டது.

    இதில், அந்த வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன.
    • வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 16, 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக உடன்குடி அருகே உள்ள சடையநேரிகுளத்தில் கீழ்புறம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டிவிளை என்ற சிதம்பரபுரம், மருதூர் கரை, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சீயோன்நகர், லட்சுமிபுரம், செட்டியாபத்துபோன்ற பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.

    பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டது. தற்போது தண்ணீர் வடிந்து போக்குவரத்து சீரானாலும் வெள்ளாளன்விளை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை நயினார்புரம் வட்டன்விளை, சிதம்பரபுரம் என்ற செட்டிவிளை ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளநீருடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


    வெள்ளாளன்விளையில் பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. 60 நாட்களை கடந்தும் தண்ணீரில் மூழ்கி விட்டது. இந்த வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள கோவில்களிலும், உறவினர்கள் வீட்டிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தண்ணீரை இன்னும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதனால் வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    பனைமரத் தொழிலாளர்கள், தென்னை, வாழை விவசாயம் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு எப்படி போவது? தோட்டத்தில் உள்ள நீர் இறைக்கும் பம்பு செட் மோட்டார் பயன்படுமா? என வருத்தத்தில் உள்ளனர்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆலோசனையின் படி உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் வெள்ளாளன்விளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் நீர் இறைக்கும் பம்புசெட் மோட்டார் மூலமாக கடந்த 5 நாட்களாக இரவு பகலாக 2 மின் மோட்டார் முலம் தண்ணீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தண்ணீர் குறைந்தபாடு இல்லை.

    மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் 2 மாதங்களை கடந்து தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

    • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

    118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ×