search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் கனமழைக்கு மின்னல் தாக்கி பெண் பலி
    X

    சாத்தான்குளம் நூலகத்தில் தேங்கி கிடக்கும் மழைநீர்

    தூத்துக்குடியில் கனமழைக்கு மின்னல் தாக்கி பெண் பலி

    • சாத்தான்குளத்தில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 47 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.

    சாத்தான்குளத்தில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையினால் அங்குள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசு கிளை நூலகத்தின் உள்ளே மழை நீர் புகுந்து தேங்கியது.

    இதேபோல் தட்டார்மடம், பன்னம்பாறை, பேய்க்குளம் பகுதியிலும் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 72.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விளாத்திகுளம், தூத்துக்குடி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடம்பூர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. முறப்பநாடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அப்போது நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி(55) என்பவர் முறப்பநாடு அருகே சென்னல்பட்டியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுப்புலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். நேற்று மாலையில் காடல்குடி, கீழ அரசடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கன்னடியன், மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 21.2 மில்லிமீட்டரும், அணை பகுதியில் மணிமுத்தாறில் 10.3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாநகர பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 47 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ஆய்க்குடியில் 10.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டியது.

    Next Story
    ×