search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை: பழனி-கொடைக்கானல் சாலையில் மீண்டும் மண் சரிவு
    X

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி காம்பவுண்ட் சுவர் இடிந்து கிடக்கும் காட்சி. (பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது)

    திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை: பழனி-கொடைக்கானல் சாலையில் மீண்டும் மண் சரிவு

    • திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
    • கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல்-பழனி ரோட்டில் சவரிக்காடு பகுதியில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த கனமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாலையில் சீரமைப்பு பணிக்கு பிறகு இலகுரக வாகனங்கள், பஸ், லாரிகள் இயக்கப்பட்டன. தற்போது கடந்த 2 நாட்களாக பழனி மற்றும் கொடைக்கானலில் பெய்த கன மழை காரணமாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மீண்டும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி செங்குத்தாக உள்ளது. இதில் மண் மூட்டைகள் சரிந்துள்ளன. இவை 2 நாட்களுக்குள் சரிசெய்யப்படும். பணிகள் எச்சரிக்கையாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் சுவர் அமைத்தால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டாது. இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருச்சி ரோடு, மெயின்ரோடு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தீபாவளி பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    திண்டுக்கல் 56.2, பழனி 46, சத்திரப்பட்டி 10.4, நத்தம் 30, நிலக்கோட்டை 8, வேடசந்தூர் 44.5, காமாட்சிபுரம் 51, கொடைக்கானல் போட் கிளப் 31.2, ரோஸ்காடன் 28 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 349.8 மி.மீ மழை அளவு பதிவானது.

    Next Story
    ×