search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில்..,

    * நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம்.

    * மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், மையங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    *பொதுமக்கள் விண்ணப்பிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • உளுந்து, பாசிப்பயிறு, சோளம் போன்ற விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின.
    • பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் முப்பிலிபட்டி ராஜாங்குளத்தின் தென்பக்ககரை உடைந்ததால் அந்த நீர் புதியம்புத்தூர் திருச்சிற்றம்பலபேரி குளத்திற்கு வந்தது. ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருந்த இந்த குளம் இந்த நீர்வரத்தால் உடைப்பு ஏற்பட்டு அதிகமான நீர் செல்ல ஆரம்பித்தது.

    இந்த மழை நீர் கரைப்பகுதியில் இருக்கும் நீராவிமேடு, மேலமடம் நடுவக்குறிச்சி, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது. அதிகளவு மழைநீர் இந்த ஓடையில் சென்றதால் புதியம்புத்தூர் ஆர்.சி. தெரு, பேட்டை தெரு, பவுண்டு தெரு, தெற்கு காலனி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 35 மண்சுவர் வீடுகள் முழுமையாக இடிந்தது.

    புதியம்புத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் ரோட்டை விட 3 அடி தாழ்வாக இருந்தது. சமீபத்தில் பெய்த கன மழை நீர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தேங்கி நின்றது. அதனை கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், கிராம உதவியாளர் தங்கமாராசா ஆகியோர் மின் மோட்டாரை வைத்து அகற்றினர்.

    சந்தன மாரியம்மன் கோவில் அருகில் பழமை வாய்ந்த அத்திமரம் வேருடன் அருகிலுள்ள வீடுகள் மீதுசாய்ந்து வீடுகள் இடிந்து விழுந்தது. சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதால் ரோட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன.

    மழையால் பூக்கும் தருவாயில் இருந்தகம்பு, உளுந்து, பாசிப்பயிறு, சோளம் போன்ற விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின. எனவே இப்பகுதிகளை வெள்ளம் சேதம் அடைந்த பகுதி என அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல் வீடு இடிந்தவர்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அங்கு போங்கள்... இங்கு போங்கள் என்றுதான் அலைக்கழிக்கிறார்கள். எனக்கு உதவி செய்ய யாருமில்லை.
    • ஆபத்தில் தவிப்பவர்களை அலைக்கழிக்க வைக்கலாமா?

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை தவிக்க விட்டுள்ளது.

    உதவிகள் தேவைப்படுபவர்கள் வாட்ஸ்அப், வலைத்தளம் மூலமாகவும் உதவிகள் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் புளியங்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவரை காப்பாற்றும்படி கதறி அழுது வருவது வைரலாகி உள்ளது.

    கண்ணீர் மல்க அந்த பெண் கூறியதாவது:-

    எனது கணவர் அவரது நண்பர் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்றார். அப்போது காரை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. கார் மீது ஏறி நின்றபடி என்னுடன் பேசினார். மாலை வரை தொடர்பில் இருந்தார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.

    யாரும் உதவிக்கு வரவில்லை. கடவுளே... என் கணவரை யாராவது காப்பாற்றி கொடுங்களேன். ஒவ்வொரு அலுவலகமாக சென்று உதவி கேட்டேன். அங்கு போங்கள்... இங்கு போங்கள் என்றுதான் அலைக்கழிக்கிறார்கள். எனக்கு உதவி செய்ய யாருமில்லை.

    எனக்கு யாருமில்லை. எப்படியாவது என் கணவரை காப்பாற்றி கொடுங்கள் என்று அந்த பெண் கண்ணீர் விட்டு கதறுவது கல் நெஞ்சையும் கரைய வைக்கிறது.

    இயற்கை பேரிடர்களும், பேரழிவுகளும் யாருக்கு எப்போது வரும் என்று தெரியாத நெருக்கடியான சூழலில் வாழ்கிறோம்.

    உதவி செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் உதவி கேட்டு செல்பவர்களிடம் இது எங்கள் சம்பந்தப்பட்டது அல்ல என்று சொல்ல எப்படி மனம் வருகிறது? எல்லோரும் அரசு ஊழியர்கள்தான்.

    இந்த மக்கள் பணத்தில் வாழ்பவர்கள் தான் என்பதை உணர வேண்டும். எந்த துறையை, யாரை தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களை நீங்களே தொடர்பு கொண்டு உதவி செய்யலாமே. ஆபத்தில் தவிப்பவர்களை அலைக்கழிக்க வைக்கலாமா?

    • பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.
    • திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன.

    தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிக கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ள பெருக்காலும், பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.

    கேம்பலாபாத், நாணல் காடு மற்றும் ஆறாாம் பண்ணையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

    பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அந்த அமைப்பு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன. வெள்ள பெருக்கால் அந்த பகுதியை விட்டு செல்ல முடியவில்லை.

    இதனால் ஆம்னி பஸ்சில் இருந்து பயணிகள் தவித்தனர். அங்குள்ள நகராட்சி சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழக அமைப்பினர் சார்பில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வெள்ளம் வடிந்த பிறகு ஆம்னி பஸ்கள் அங்கிருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த 2 நாட்களாக நிவாரணம் வழங்கப்பட்டன.

    வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மேலப்பாளையம், பர்கிட் மாநகரம், ஆறாம் பண்ணை, பேட்டை, கொங்கராயக்குறிச்சி,தூத்துக்குடி, நெல்லை ஜங்ஷன், பாட்ட பத்து ஜங்ஷன், செய்துங்க நல்லூர், கோயில்பத்து, மெலசெவல்,கொழுமாடை, பத்தமடை, கணேஷ்புரம், புளியங்குடி, சுசீந்தரம், ஆகிய பகுதிகளில், சுமார் 10000-க்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருதல், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பது, மருத்துவமனைகளில் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கான பிரட், பால் வழங்குவது என பல பணிகளை செய்தது.

    • நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது.
    • வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதுபோல் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலந்ததால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று மழை சற்று குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறைய தொடங்கியது. இன்று காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார் 80 வயது முதியவர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் உடலை சந்திப்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேட்டை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை டவுண் மாதா பூங்கொடி தெருப்பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது.

    நெல்லையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    • சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
    • சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 30 பக்தர்கள் ஒரு பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக திருச்செந்தூர் வந்து விட்டு திரும்பும் வழியில் கருங்குளம் கோவிலுக்கு சென்றனர்.

    அந்த நேரத்தில் கருங்குளம் பகுதியில் கனமழை காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கருங்குளம் சத்திரம் பகுதியில் சிக்கி கொண்டனர்.

    இதனால் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர்கள் சத்தம் போட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பக்தர்களை மீட்பதற்காக அங்கு சென்றனர்.

    ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அனைவருமே வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

    இதனால் அவர்களாலும் உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களை மீட்க முடியவில்லை.

    நேற்று மதியம் வரை வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் அங்கேயே 2-வது நாளாக வெள்ளத்தில் தவித்தனர். தகவல் அறிந்து உவரி, திசையன்விளை, கன்னியாகுமரி பகுதியில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் அங்கு படகுகளுடன் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றி சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒவ்வொருவராக மீட்கும் பணி நேற்றிரவு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வெள்ளத்தில் சிக்கிய 70 பேரும், இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    • மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 475 பேர் வந்துள்ளனர்.

    ஏற்கனவே 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரு குழுக்கள் வர உள்ளன. மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேர் தங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 9 முகாம்களில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 4,056 பேர் தங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் மழை நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் தாமிரபரணி நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்து உள்ளன. அந்தப் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகரைப் பொருத்தவரையில் மேலப் பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.

    சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக் கூடிய இடங்களில் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற குளிர்கால தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. மேலும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார். சாலைகளில் நடந்து சென்றும், பேருந்தில் பயணித்தும் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன் உடன் இருந்தார்.


    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்று 80778 80779 தொடர்பு எண்ணையும் கனிமொழி அறிவித்து இருந்தார்.


    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
    • ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பொன்னேரி:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ளம்பாதித்த பகுதிகளை மத்தியகுழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவின் அதிகாரிகள் ஏ.கே. சிவ்ஹரே, விஜயகுமார், பவ்யா பாண்டே உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடன் இருந்தார். புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிவரை பழவேற்காடு பகுதியில் மத்திய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது விவசாயிகள் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகியது குறித்து பயிர்களை பிடுங்கி காண்பித்தனர். தொடர்ந்து தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு குறித்தும் ஆய்வு செய்தனர். பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாலசந்தர், பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றி வேலன் உடன் இருந்தனர்.

    • வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.
    • பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 3 லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை பல வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.

    இந்நிலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்வது என்பது பொதுமக்களுக்கு சவாலான பணியாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி கழுவி வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனார் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். ஏராளமானோர் துப்புரவு நிறுவனங்களை அணுகுவதால் அவர்கள் கெடுபிடி காட்டுகிறார்கள். அத்துடன் வீடுகளை கழுவி சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை 2 மடங்காக அதிகரித்துவிட்டனர்.

    சென்னையில் இதற்கு முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலித்தனர். தற்போது அந்த கட்டணத்தை ரூ.7,500 ஆக அதிகரித்துவிட்டனர். 2 படுக்கை அறை, 3 படுக்கை அறை கொண்ட வீடுகளுக்கு இன்னும் அதிகமாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வட சென்னையில் உள்ள பல் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக மூத்த குடிமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேறு வழியில்லாமல் அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் வீடுகளில் இருந்த பொருட்களை இழந்துள்ள நிலையில் இந்த கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

    இதுகுறித்து தனியார் துப்புரவு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வீடுகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஏராளமான வீடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக எங்களால் அனைத்து அழைப்புகளையும் ஏற்க முடியவில்லை.

    எனவே நாங்கள் தற்காலிக ஊழியர்களையும் பணிக்கு நியமித்துள்ளோம். ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் சுத்தம் செய்து விடுகிறோம். அதை விட பெரிய வீடுகளுக்கு கூடுதல் நேரம் ஆகிறது. தினமும் 16 மணி நேரம் வேலை செய்கிறோம். ஒரு நாளில் 4 முதல் 5 வீடுகளை சுத்தம் செய்கிறோம். எங்களிடம் வீடுகளை சுத்தம் செய்வதற்கான தனித்தனி பேக்கேஜ்கள் உள்ளன.

    தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் சுத்தம் செய்யும் பணிக்கு செல்லும் பல ஊழியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×