search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue Mission"

    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதைதொடர்ந்து நள்ளிரவில் மீட்பு குழுவினர் தோண்டிய பள்ளத்தில் நடு நடுவில் பாறைகள் வந்ததால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது.

    இதனையடுத்து இன்று காலை முதல் மீட்புப்பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழுவினர் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

    மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடர்ந்து பணியாற்றி குழந்தையை உயிருடன் மீட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


    • 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
    • மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுக்கு சாத்விக் என்ற 14 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.

    இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்று க்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது. கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை, கால்கள் அசைவதை கேமிரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்தனர். 

    • 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
    • இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மியுபோபா:

    நமது பக்கத்து நாடான வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.

    இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.

    • மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு, குளங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட சில குளங்கள் உடைந்ததால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்தது.

    இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். 6-வது நாளாக இன்றும் வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்து உள்ளதால் குடியிருப்பு வாசிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    எனவே அங்குள்ளவர்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள். வீடுகளை சுற்றி வெள்ளம் உள்ளதால் குடிநீருக்காக அவர்கள் பெரிதும் தவித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர பகுதியான முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து, அவரது தாயார் ஞானம்மாள் மற்றும் உறவினர் குழந்தை என 3 பேரும், அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் உடல்களும் இன்று கண்டெடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மாநகர பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனினும் வெள்ள நீர் வடியாததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்றும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    • நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது.
    • வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதுபோல் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலந்ததால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று மழை சற்று குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறைய தொடங்கியது. இன்று காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார் 80 வயது முதியவர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் உடலை சந்திப்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேட்டை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை டவுண் மாதா பூங்கொடி தெருப்பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது.

    நெல்லையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    • மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 475 பேர் வந்துள்ளனர்.

    ஏற்கனவே 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரு குழுக்கள் வர உள்ளன. மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேர் தங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 9 முகாம்களில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 4,056 பேர் தங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் மழை நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் தாமிரபரணி நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்து உள்ளன. அந்தப் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகரைப் பொருத்தவரையில் மேலப் பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.

    சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக் கூடிய இடங்களில் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறை பொறுப்பு கொண்ட ஆட்சி.
    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைபுபடுத்தினேன்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக மிக கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் அயறாது பணியாற்றிய தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறை, பொறுப்பு கொண்ட ஆட்சி திமுக. விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்கட்சிகள் முனைப்பு காட்டினாலும் மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. புயல் பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிட அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுப்படுத்தினேன். இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.

    பேரிடர்களில் இருந்து மீண்டோம். சேலம் இளைஞரணி மாநாட்டில் சந்திப்போம்.

    இவ்வாறு கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
    • தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிச்சாங் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளநீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

    எனவே, மத்திய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழக அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    திருவனந்தபுரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.

    இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்திரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் சுரக்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாட்டில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் அவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அவர்களை மீட்கும் பணி 6-வது நாளாக நடந்து வருகிறது. சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சுரக்கத்துக்குள் 60 மீட்டர் நீளமும், 900 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்பு குழாய் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது.

    தொழிலாளர்கள் குழாயின் உள் வழியாக ஏறி தப்பி வருவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு குழாயும் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது. அதன் வழியாக சுரங்கத்துக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும், காற்றை சப்ளை செய்யவும், உடல் நலம் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குழாய்கள், தொழிலாளர்கள் இருக்கும் பகுதி வரை செலுத்துவதற்காக குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்து குழாய் செலுத்தப்பட்டதும் அதன் வழியாக தொழிலாளர்கள் தப்பி வரும் வகையில் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பணி வேகமாக நடப்பதால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவிலேயே மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.

    கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×