search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Houses destroyed"

    • உளுந்து, பாசிப்பயிறு, சோளம் போன்ற விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின.
    • பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் முப்பிலிபட்டி ராஜாங்குளத்தின் தென்பக்ககரை உடைந்ததால் அந்த நீர் புதியம்புத்தூர் திருச்சிற்றம்பலபேரி குளத்திற்கு வந்தது. ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருந்த இந்த குளம் இந்த நீர்வரத்தால் உடைப்பு ஏற்பட்டு அதிகமான நீர் செல்ல ஆரம்பித்தது.

    இந்த மழை நீர் கரைப்பகுதியில் இருக்கும் நீராவிமேடு, மேலமடம் நடுவக்குறிச்சி, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது. அதிகளவு மழைநீர் இந்த ஓடையில் சென்றதால் புதியம்புத்தூர் ஆர்.சி. தெரு, பேட்டை தெரு, பவுண்டு தெரு, தெற்கு காலனி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 35 மண்சுவர் வீடுகள் முழுமையாக இடிந்தது.

    புதியம்புத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் ரோட்டை விட 3 அடி தாழ்வாக இருந்தது. சமீபத்தில் பெய்த கன மழை நீர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தேங்கி நின்றது. அதனை கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், கிராம உதவியாளர் தங்கமாராசா ஆகியோர் மின் மோட்டாரை வைத்து அகற்றினர்.

    சந்தன மாரியம்மன் கோவில் அருகில் பழமை வாய்ந்த அத்திமரம் வேருடன் அருகிலுள்ள வீடுகள் மீதுசாய்ந்து வீடுகள் இடிந்து விழுந்தது. சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதால் ரோட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன.

    மழையால் பூக்கும் தருவாயில் இருந்தகம்பு, உளுந்து, பாசிப்பயிறு, சோளம் போன்ற விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின. எனவே இப்பகுதிகளை வெள்ளம் சேதம் அடைந்த பகுதி என அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல் வீடு இடிந்தவர்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    ×