search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து தடை"

    • பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.
    • பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லை செல்லும் போக்குவரத்து பாதை மிகவும் முக்கியமான போக்குவரத்து நிறைந்த பாதையாகும்.

    இந்தப் பாதையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது. உடன்குடியில் இருந்து தினசரி 20 முறை நெல்லைக்கு பஸ் சென்றது. தற்போது ஏற்பட்டு கனமழை காரணமாக செட்டியாபத்து, லட்சுமிபுரம், மருதூர் கரை, நாசரேத் மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி- நெல்லை இடையே போக்குவரத்து இன்று 10-வது நாளாக தொடங்கவில்லை.

    இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.

    இந்தப் பாதையை உடனடியாக சரி செய்து உடன்குடி -நெல்லைக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
    • வருகிற 8-ந்தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் அடுத்த இரு வாரங்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 10-ந்தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்றைய கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.65 அடியாக இருந்தது. இந்த நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாசனத்திற்காக வைகை அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. 

    ஏ.வி. மேம்பாலத்தின் அடியில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்

    ஏ.வி. மேம்பாலத்தின் அடியில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்

    இதனால் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. வருகிற 8-ந்தேதி வரை சுமார் 2 ஆயிரத்து 466 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. தற்போது இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் வைகை ஆற்றில் வருகிறது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் கரைகளை தாண்டி தண்ணீர் சாலைகளில் ஓடியது.

    இதையடுத்து வைகை ஆற்றங்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீருக்குள் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர்.

    மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரை சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வருகிற 8-ந்தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் அடுத்த இரு வாரங்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் அந்த பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ×