என் மலர்
நீங்கள் தேடியது "T Nagar Bridge"
- ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னையின் மையப் பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மிகப் பெரிய ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு உஸ்மான் சாலையையும், சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையை இணைக்கும் வகையிலும் 1¼ கிலோ மீட்டர் நீளத்துக்கு தி.நகர் பாலத்தை நீட்டித்து புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
அதாவது ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் ஆகும்.
இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்தில் இருந்து தியா கராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.
சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக்சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், ஆணையர் குமரகுருபரன், வினய், தமிழ்நாடு வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு,
தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.சு.மணி, எம்.எஸ்.பழனி, ஜெ.ஜானகிராமன், ராஜா அன்பழகன், தியாகராய நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பாண்டிபஜார் பாபா சுரேஷ், தி.நகர் கிழக்கு பகுதி பொருளாளர் ஜி.மோகன் ராஜ், வட்டச் செயலாளர் பி.மாரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வனிதாபுரம் துரை, இ.சஞ்சீவ் குமார்(எ) கார்த்தி, 133-வது வட்ட துணை செயலாளர் ஆர்.கலா ராஜா, என்.வெங்கடேசன், கனிமொழி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 20 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
- மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பாலம் 55 தூண்களுடன் 7.5 மீட்டர் அகலத்தில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலமாக உருவாகி வருகிறது.
இந்த பாலப் பணிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன. அண்ணா சாலையில் இருந்தே தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்துடன் இணையும் வகையில் போடப்பட்டு உள்ள இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி.நகர் ரங்கநாதன் தெருவை ஒட்டியுள்ள பாலத்தின் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ரங்கநாதன் தெரு சந்திப்பில் பாலம் சாய்வாக இறங்கும் இடத்தை இடித்து விட்டு அப்பகுதியில் உயரமான பாலம் அமைக்கப்பட உள்ளது. 120 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதற்காக தி.நகர் உஸ்மான் ரோடு பாலம் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உஸ்மான் ரோடு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. மேம்பாலம் வழியாக சென்ற வானங்கள் தற்போது பிரகாசம் சாலை, பர்கிட் சாலை வழியாக பஸ் நிலையத்தை சென்றடைகின்றன. சி.ஐ.டி. பிரதான சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் தென்மேற்கு போக் சாலை வழியாக கண்ணம்மா பேட்டை சந்திப்புக்கு சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக வடக்கு உஸ்மான் ரோட்டை சென்றடையலாம்.
தி.நகர் பகுதிக்கு செல்பவர்கள் தற்போது மூடப்பட்டுள்ள பாலம் வழியாகவே செல்வார்கள். வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பாலம் மூடப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.






