search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொற்றுநோய்"

    • கொரோனா தொற்றுநோயை விட பறவைக் காய்ச்சல் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அன்டார்டிகாவில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பென்குயின்களின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு சில ஆண்டாகவே இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிய அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் மிக தீவிரமானது. இது கொரோனா தொற்று நோயை விட 100 மடங்கு மோசமாக பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    2003 முதல் பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளில் 52 பேர் இறந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மனிதர் ஒருவர் இந்தத் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.
    • பாதுகாக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததையும், அந்த மழைநீருடன் கழிவு நீர் கலந்ததையும், அந்த நீரில் மக்கள் நடமாடியதையும், இந்தத் தருணங்களில் பாது காக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. இதன் காரணமாக, பொதுமக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளை மேற் கொள்ளவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.
    • மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிச்சாங் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    உடுமலை,

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக எரிசினம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, குருமலை ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் சுகாதார முகாம் நடைபெற்றது.

    டாக்டர்.பூபதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு 109 நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
    • துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படுகிறது. இவைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 3 இடங்களில் தரம் பிரிக்கின்றனர். கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் இவைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால்் ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகி்றது. இதனை நாய், பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இவைகளை அகற்றி அப்பகுதி மக்களின் நலன்காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • பிடித்து அகற்ற மாநகராட்சிக்கு கோரிக்கை
    • சில நாய்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டு புழுக்கள் வந்த நிலையிலும் சுற்றி திரிகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் திரிகின்றன.

    அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணா பஸ் நிலையம், வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன் கோவில், வடசேரி, ஒழுகினசேரி, கோட்டார், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். இதில் சில நாய்கள் நோய்வாய்ப்பட்டு, அருவருக்கத்தக்க வகையில் சுற்றி வருகின்றன.

    இதேபோல் இடலாக்குடி, கரியபாணிக்கபுரம், இளங்கடை, இருளப்பபுரம், என்.ஜி.ஓ. காலனி, செட்டிகுளம் சந்திப்பு, ராமன் புதூர், மேல ராமன் புதூர், கோணம், ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நாய்களின் உடல்களில் ஒருவிதமான அருவருப்பு தன்மையும், இன்னும் சில நாய்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டு புழுக்கள் வந்த நிலையிலும் சுற்றி திரிகிறது.

    இதனால் பொதுமக்கள் இந்த நாய்களை கடந்து செல்வதற்கு அச்சம் அடைகின்றனர். எனவே நோயுற்ற நாய்களை அப்புறப்படுத்த நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையாளருக்கு மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

    • மதுரை மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
    • இதனால் தொற்றுநோய் பரவுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் கடந்த 2009-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல் மற்றும் மலர் வணிக வளாகம் உருவாக்கப்பட்டது.

    இந்த வணிக வளாகத்தில் 104 பூக்கடைகள், 127 நெல் கடைகள், 60 உரகடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு சொந்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 9.85 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை நிர்வகிக்க தனியாக கமிட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பூ மார்க்கெட்டை பொருத்தவரை தினமும் 100 டன்களுக்கு மேல் பூக்கள் வியாபாரம் நடைபெறும். தற்போதும் வழக்கமாக வியாபாரம் களை கட்டி உள்ளது. இதன் காரணமாக தினமும் வியாபாரிகள் குப்பைகளை மார்க்கெட்டின் பின்பகு தியில் எடுத்து சென்று கொட்டுகிறார்கள்.

    இந்த குப்பைகள் சில வாரங்களாக அகற்றப்படாததால் அந்த பகுதியில் குப்பைகள் லைபோல தேங்கி கிடக்கிறது. இதனால் பூக்கள் மற்றும் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.

    துர்நாற்றத்துடன் குப்பை குவியல் காட்சி அளிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அங்குள்ள சில வியாபாரிகள் கூறியதாவது:-

    கடைகளின் சார்பில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகிறோம். மேலும் மதுரை மாநகராட்சிக்கு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் சொத்து வரியை செலுத்துகிறோம்.

    ஆனால் மார்க்கெட் கமிட்டியோ, மாநகராட்சியோ வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து வருகிறது.

    கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்படாததால் குப்பைகள் மலை போல குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது மதுரையில் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோய் பரவிவரும் நிலையில் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகள் காரணமாக இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவி விடுமோ என்ற அச்சம் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

    எனவே மார்க்கெட் கமிட்டி மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்றுவதுடன் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
    • வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.

    இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.

    இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .

    இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .

    வெங்கடேஸ்வரா நகரில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் - தாந்தோணிமலை செல்லும் வழியில் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து டெக்டைல்ஸ், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றனர்.

    ராயனூர் முதல் தாந்தோணிமலை வரை வெங்கடேஸ்வர நகர் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் மாத கணக்கில் சுத்தம் செய்யாததால், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் அதிக அளவு தேங்கி கழிவுநீர் வெளியேற முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லையுடன், குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் அதிகமாக வருவதுடன், தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    மாணவ, மாணவிகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு முன்பு, பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும், கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை கால்வாயை தொடர்ந்து சுத்தம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கடேஸ்வரா நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×