search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை"

    • வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது.
    • கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நகரின் நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் அடையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் உள்ள 200 நீர் நிலைகளை இணைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் போதுமான சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே நீர்நிலைகளை தூர்வாரி இணைப்பு கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அடையாறு படுகையில் 196 குளங்களில் 134, கோவளம் படுகையில் உள்ள 120 குளங்களில் 66 நீர் நிலைகளை கட்அண்ட் கவர் முறையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரி அதிகப்படியான தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக தரைமட்டத்திற்கு கீழே மூடப்பட்ட கட்டமைப்புடன் வடிகால் கட்டப்படும். இவற்றை ஜப்பான் சர்வ தேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு தற்போது 22 டி.எம்.சி.யாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் துறை விரிவாக்கம் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் 28 டி.எம்.சி.யாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நகரின் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது இன்றியமையாதது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது.

    யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.

    இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறை நடவடிக்கை
    • ஸ்பாக்களின் உரிமையாளர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    சென்னையில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ், பாலியல் தொழில்கள் சட்டவிரோதமாக நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம் பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

    ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • சிறப்பு பஸ்கள் ஜூன் முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதையடுத்து இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்து உள்ளது.

    எனவே இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் சென்று வர வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மண்பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகிறது. பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகிறது' என்றார்.

    • பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
    • தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது.

    குடிநீர் விநியோகம், தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 19 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

    பின்பு மின்னகத்தை ஆய்வு செய்த தலைமை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 4000 மெகா வாட் மின் தேவை உள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது

    கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்திற்கு அணுகி சீரான மின்சாரம் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.

    விழுப்புரம், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    • புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதாக வாக்குவாதம்
    • தாக்குதலில் விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயம்

    சென்னை விருகம்பாக்கத்தில் புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதால் விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மொதல்ல விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    இதனையடுத்து இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
    • ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன

    சென்னை மீஞ்சூரில் கடும் வெயிலில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சச்சின் (25), 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

    • ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
    • விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகளும் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கும், விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    குளிர்சாதன வசதியுடன், குறைந்த மணி நேரத்தில் இடத்தை சென்றடைய ஏதுவாக விமான பயணத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

    இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை-தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 16 விமானங்களும், சென்னை-மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-பெங்களூரு இடையே 16 விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-ஐதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    • வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகித்து வரும் நிலையில், கோடை காலத்தில் வறட்சி நிலவும் என்பதால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில், பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.

    சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.

    இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-

    எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

    காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • நிர்வாக காரணங்களால் இந்த ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    • இந்த அறிவிப்பால் பொதுமக்களும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.

    வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.

    அதனைத்தொடர்ந்து வேலூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை நிர்வாக காரணங்களால் இந்த பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சென்னைகோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்களும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ×