search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja cyclone"

    கந்தவர்கோட்டை அருகே கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தவர்கோட்டை அடுத்து உள்ள வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசின் புயல் நிவாரணநிதி முறையாக கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரமடைந்த வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை அடுத்த வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை  மரக்கட்டைகளை போட்டு  மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்து தகவல்  அறிந்ததும் கந்தவர்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். ஆனால் பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து சாலை மறியல் செய்து வருவதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் பஸ் பயணிகள் அவதி அடைந்தனர். 
    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #MaduraiHCBench
    மதுரை:

    தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் விவசாய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் துண்டு துண்டானது. தென்னை விவசாயத்தில் வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம் வரும்.



    ஆனால் சேதமடைந்த தென்னை ஒன்றுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ. 1,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது போதுமானதாக இல்லை. எனவே தென்னை ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் மரங்கள் விழுந்துள்ளதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றவும், தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர், விவசாயத் துறை செயலாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #GajaCyclone #MaduraiHCBench
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார். #GajaCyclone #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை செய்தனர்.

    ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுக்க இருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.


    இதை டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்தார். நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். #GajaCyclone #Rajinikanth
    மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு மதிமுக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ பேசினார். #pmmodi #vaiko #gajacyclone

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம்.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. மேலும் ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை.

    தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

    மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.


    கஜா புயலால் பாதித்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் சேதமான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் என்பது எனது வியூகம்.

    டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்கு ம.தி.மு.க. என்றென்றும் துணை நின்று போராட்டம் நடத்தும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறுஅவர் கூறினார். #pmmodi #vaiko #gajacyclone

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசித்து வருகிறார். #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அடுத்த கொண்டி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்லதுரை (வயது 50). இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் விவசாய வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த கஜா புயலில் தங்களின் வீட்டை முற்றிலுமாக இழந்து விட்டனர். வீடுகட்ட பொருளாதார வசதியின்றி தவித்து வந்தனர்.

    தங்குவதற்கு வேறு வழி இன்றி அருகில் உள்ள சுடுகாட்டில் உள்ள சமாதியில் 60 நாட்களாக குடியிருந்து வருகின்றனர்.

    பொங்கல் அன்று வீட்டை இழந்த அந்த பழைய இடத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

    இதுபற்றி விவசாயி செல்லத்துரை கூறியதாவது:-

    கஜா புயல் எங்களது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. வீட்டை இழந்த நாங்கள் சுடுகாட்டில் உள்ள சமாதியில் டெண்ட் போட்டு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசோ அல்லது தனியார் அமைப்புகளோ வீடு கட்ட உதவி கரம் நீட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்று சொல்வது சரியல்ல என தமிழிசை தெரிவித்துள்ளார். #tamilisai #pmmodi #gajacyclone

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சமீப காலமாக மட்டுமல்ல எப்போதுமே தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இதை இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், தற்போதைய பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.

    பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க வந்து படகுகளை கொடுத்தார். அதேபோன்று சென்னை ஆவடியில் ஆயுத தொழிற்சாலை கண்காட்சி நடந்ததை தொடங்கி வைத்தார்.

    ஆனால் அப்போது அவர் வந்தபோது எதிர்கட்சியினர் கருப்பு கொடி காட்டினார்கள். தமிழகம் ராணுவ ஆயுத தொழிற்சாலை உற்பத்தியில் சிறந்த இடம் என்பதனால் தான் 5 மாவட்டங்களில் அதை ஏற்படுத்த பிரதமர்மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிதாக 2 ½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    பிரதமர் மோடி ஆட்சியில் இதுவரை ரூ.5 ½ லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்று யாரும் செய்ததில்லை. தற்போது வருகிற 27-ந்தேதி மதுரையில் ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கி வைக்கப்படுகிறது.

    எனவே பிரதமர் மோடி தமிழகத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டவர் தான். கஜா புயல் பாதிப்பின்போது ஏன் அவர் வரவில்லை என மீண்டும் மீண்டும் தவறாக பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உடனே முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.


    தொடர்ந்து டுவிட்டரில் தனது வருத்தத்தினை பதிவு செய்தார். தமிழக பிரதிநிதிகளாக என்னையும், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் என எங்களை அனுப்பி வைத்து தங்கி பணியாற்ற வைத்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் இது போன்று செய்தாரா?. எதிர் மறை பிரச்சாரம் எடுபடாது.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும் வகையில் தமிழகத்திலும் மிகப்பெரிய அடித்தளம் ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். டெல்லி பொதுக்குழுவில் பேசிய பிரதமர் மோடி, நிலையான ஊழலற்ற ஆட்சி குறித்தும், நிலையற்ற ஆட்சி குறித்தும் தெளிவு படுத்தியுள்ளார். நிலையான ஊழலற்ற ஆட்சி மீண்டும் கொடுக்க பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவேண்டும்.

    இதற்காக பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்து வருகிறது. ஜனவரி 26-ந்தேதி ஒரு வாக்குச்சாவடி ஒரு நிர்வாகி என சுற்றுப்பயணம் செய்து தமிழகம் முழுவதும் உள்ள 66 வாக்குச்சாவடிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறோம். பிப்ரவரி 1 முதல் 10-ந் தேதி வரை 5 வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகி என்ற அளவில் சுற்றுப்பயணம் செய்து பணி செய்கிறோம்.

    தாமரை ஜோதி என்ற திட்டத்தில் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டி வீட்டு முன்பு தாமரைக்கோலம், விளக்கு அமைத்து ஏற்றி வைக்கிறோம். தமிழகத்தில் பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது. பிரதமர்மோடி மதுரைக்கு வருவதையொட்டி 18-ந்தேதி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து 20-ந்தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி வருகிறார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்பது சரியல்ல.

    கொடநாடு சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும். பொய் குற்றச்சாட்டு சுமத்தி ஒரு ஆட்சியை கலங்கப்படுத்த முடியாது. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின் உண்மை என்கிறார். அது அவர் தரப்பு. அ.தி.மு.க.வினர் பொய் என்கின்றனர். இருவருமே இது தொடர்பாக தமிழக கவர்னரை சந்தித்துள்ளனர். அது அவர்கள் உரிமை. எது உண்மை என சட்ட ரீதியாக தீர்வு ஏற்படுத்தப்படும்.

    கஜா புயலுக்கு நிவாரண உதவி சரியாக வழங்கப்பபடாத நிலையில் பொங்கலுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடி வரை ஒதுக்கி ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு கொடுத்ததை தவறு என கூற முடியாது. உதவி செய்வது நல்ல திட்டம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜையன் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilisai #pmmodi #gajacyclone

    வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

    புயலால் சாய்ந்த மின்கம் பங்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் நகர்ப் புறங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்னும் 20 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியது உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கத்தரிப்புலத்தில் வள்ளுவர் சாலை பகுதியில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு தற்போது மின் வினியோகம் அளிப்பதற்கு மின் கம்பங்கள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மின்கம்பங்கள் சாலையோரம் நடாமல் வயல் பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் சாலை வழியே மின்கம்பங்களை நட்டு மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர்.

    ஆனால் வயல்பகுதிகளில் மட்டுமே மின்கம்பங்கள் நடப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கத்தரிப்புலம் -பனையடி குத்தகை சாலையில் , புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் மற்றும் மரங்களை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து கரியாப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபறறி அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும். மக்களுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்கட்சி. மற்ற எந்த கட்சியையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. அரசியல் களத்தில் அவர்களை எதிர்த்தே எங்கள் பிரசாரம் இருக்கும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் அளிக்கவில்லை. அதற்காகத்தான் நாங்கள் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம்.

    உரிய நிவாரணத்தை பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க. அரசு உறுதியாக செய்து தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். #BJP #HRaja #SC #SterlitePlant
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருவாரூர் தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பயம் ஏற்பட்டு இருப்பது தெளிவாகி உள்ளது.

    கலைஞருக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி கூட தெரிவிக்கவில்லை. தி.மு.க. தற்போது சுய சிந்தனையோடு செயல்படவில்லை. உடல்நலம் குன்றி இருந்த கலைஞரை சோனியா காந்தி சந்திக்க வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து கலைஞர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார்.

    சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாரபட்சமாக நடந்து வருகிறார். கேரளாவில் தேவாலயம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊடகங்களில் விவாதம் செய்பவர்கள் அறிவின்மையமாக பேசுகின்றனர்.

    தற்போது ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழக அறநிலையத்துறையில் ஊழல் மலிந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அந்த துறையால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

    சிலை கடத்தல் வழக்கில் கடும் முயற்சியுடன் செயல்பட்டு வரும் பொன் மாணிக்கவேலுக்கு வேண்டிய உதவிகளை இந்த அரசு செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ. 1500 கோடி முன் பணம் கேட்டது. மத்திய அரசு ரூ. 8 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளது.


    ஜெயலலிதா மரண விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா வெற்றி பெறும். சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் வேறுபாடின்றி மக்கள் வாக்களிப்பார்கள்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. மக்களை பாதிக்கும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்துக்கு வராது.

    மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க.-காங்கிரஸ். தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். ஆனால் தமிழகத்தை பாதுகாப்பது மத்திய அரசுதான். மக்களுக்கு இது தெரியும்.

    மின்சாரத்தை பூமிக்கடியில் கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார்.  #BJP #HRaja  #SC #SterlitePlant
    எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறாரோ? என்று நினைத்ததற்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் பாராட்டியுள்ளார். #SVShekher #TNGovt #Edappadipalaniswami
    கரூர்:

    கரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகனை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக்கு ஒருவர் அனுப்பிய தகவலை வேறொருவருக்கு நான் அனுப்பினேன். அது எனது கருத்தோ, எழுத்தோ இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இந்த பிரச்சனை தொடர்பாக என் மீது 7,8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை ஒரே இடத்தில் நடத்தும் வகையில் வக்கீல்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

    திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. தேர்தல் மூலம் கஜா புயலால் பாதித்த அத்தொகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காமல் போகலாம். பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கு தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்த வரை பா.ஜ.க. தலைமை விரும்பினால் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவேன்.


    தமிழக அரசு நன்றாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறாரோ? என்று நினைத்தோம். நாம் நினைத்ததற்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மத்திய அரசின் நிழலாக தமிழக அரசு செயல்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மத்திய அரசின் கீழ்தான் மாநில அரசுகள் என்பது உண்மை. தமிழ்நாடு என்று பெயர் வைத்ததால் மட்டுமே தனிநாடாகி விடாது. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில அரசுக்கு தேவையான நல்லது கிடைக்கும்.

    மதசார்பற்றவராக காட்டி கொள்ளும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத வெறி பிடித்தவராக உள்ளார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்று சொல்லும் அவர், முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை. மதவெறி பிடித்த அரசாக கேரள அரசு செயல்படுகிறது.


    இவ்வாறு அவர் கூறினார். #SVShekher #TNGovt #Edappadipalaniswami
    கொடைக்கானல் கீழ்மலையில் கஜா புயலை காரணம் காட்டி மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தமிழகத்தை சுருட்டி வாரிய கஜாபுயல் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.

    மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக இருளில் தவித்தனர். தற்போது குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக வனத்துறையினரிடம் அனுமதிபெற தாமதமாவதால் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவுப்படி தனி தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ கையொப்பமிட்ட அனுமதிசீட்டுடன் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் சாய்ந்த மரங்களுடன் நன்றாக இருக்கும் மரங்களையும் வெட்டி கடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    புயலால் சாய்ந்த மரங்களை வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தபோதும் லாரிகளில் அதிகளவு மரங்கள் கொண்டு செல்வது வாடிக்கையாகி உள்ளது. சித்தரேவு சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அவ்வழியே வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மணலூர், கே.சி.பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்து புயலால் சாய்ந்த மரங்களை ஏற்றி வருவதாக கூறினர்.

    ஆனால் அந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விலை உயர்ந்த சில்வர்ஓக், தீக்குச்சி செய்ய பயன்படுத்தும் மலைமுருங்கை மரங்கள் இருந்ததால் லாரிகளை சோதனைச்சாவடியில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற உரிய அனுமதிவாங்கி மரங்களை வெட்டினார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். உரிய அனுமதி சீட்டு இருந்தால் லாரிகள் அனுமதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 7-ம் தேதி விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது #SC #ThiruvarurByElection
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    ஆனால், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா மற்றும் மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.



    இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை 7-ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #SC #ThiruvarurByElection
    ×