என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு"

    • திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
    • எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    காஞ்சிபுரம்:

    அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

    பாரத் இன்னோவேட்டிவ் கண்ணாடி டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

    இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் நாட்டிலேயே முதன் முறையாக உயர் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

    இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி வைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பு உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

    * ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.

    * எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 41 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்.

    * எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    * செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    * தொலைநோக்கு சிந்தனையுடன் கொள்கைகளை உருவாக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    * முதலீட்டாளர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை தந்து தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன் பரசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை, கார்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஆன்ட்ரூ பெக், கரர்னிங் நிறுவனத் தின் சர்வதேச துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் கோகன் டோரான், ஆப்டிமஸ் இன் பிராகாம், நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சுதிர் பிள்ளை, கார்னிங் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஜோய் லீ, கார்னிங் கொரில்லா கண்ணாடி ஆசியா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜூம் எஸ்.கிம், பிக்டெக் நிறுவனத்தின் திட்டத் தலைவர் டாக்டர் ரவி கட்டாரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • எந்த அரசியல் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
    • மதுரைக்கு தேவை மெட்ரோ ரெயில், எம்ய்ஸ், புதிய தொழில் வாய்ப்புகள்.

    சென்னை:

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?

    மக்கள் முடிவு செய்வார்கள்.

    மெட்ரோ இரயில்,

    #AIIMS,

    புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

    - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என்று கூறியுள்ளார். 

    • பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப்பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு, உயில், குடும்ப ஏற்பாடு (செட்டில்மென்ட்) உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    பொதுவாக இதுபோன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பதிவு செய்த ஆவணங்களை பெற காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.

    இதனை தவிர்க்க பதிவுத்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி.) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்வதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், இப்போது பதிவுத்துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு சீர்திருத்தமாக 'ஸ்டார் 3.0' என்ற திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கான பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன்மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப்பிரிவுகளை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.

    அதற்கான புதிய மென்பொருள் மூலம் சொத்துகளை வாங்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், விற்பவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், சொத்துகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்தால் போதும். மென்பொருளே தானாக பத்திரங்களை உருவாக்கிவிடும்.

    பின்னர் ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், 'ஓ.டி.பி.' எண் கேட்கும். அதனையும் அதில் குறிப்பிட்டால், தொடர்ந்து விரல் ரேகைப்பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரங்கள் இப்போது கடைகளில் ரூ.1,500-க்கு கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் விரல் ரேகையை பதிவு செய்தால்போதும். அனைத்து பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடித்துவிடலாம்.

    இதற்காக செலவிடும் மொத்த நேரம் அதிகபட்சமாக 10 நிமிடம்தான். அதற்குள் நம்முடைய கையில் பத்திரப் பதிவு செய்ததற்கான ஆவணங்களும் கிடைத்துவிடும். இதன் மூலம் இனி அலைய வேண்டிய நிலையும், காத்திருக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கு நிச்சயம் இருக்காது.

    இதுமட்டுமா? ஆவணங்களின் நகல் பெறுவதற்கு இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் நிலைமை இனி இல்லாத சூழ்நிலையை பதிவுத்துறை மேற்கொள்ள இருக்கிறது.

    தற்போது ஆன்லைன் மூலமாக ஆவணங்களின் நகல் பெற பதிவு செய்யும்போது, சார் பதிவாளர் 'லாக்கினு'க்கு அந்த அனுமதிப்பதிவு சென்று, அதனை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

    அவ்வாறான நகலை பெறுவதற்கு குறைந்தது 2 நாட்களோ அல்லது ஒரு வாரமோ காலம் எடுக்கும். அதனையும் தவிர்க்கும் நோக்கில், ''சிஸ்டம் ஜெனரேட்டர் சிக்னேச்சர்'' என்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது. இந்த சங்கங்களை பதிவு செய்ய இப்போது நேரடியாக அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கும் தீர்வு காணப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு, ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலேயே பதிவுசெய்து கையில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதுபோன்ற பல்வேறு சேவைகளை பதிவுத் துறை 'ஸ்டார் 3.0' என்ற திட்டத்தின் கீழ் இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க இருக்கிறார்.

    • கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது.
    • சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    கரூரில் த.வெ.க கட்சியின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இவ்விவகாரம் தொடர்பாக த.வெ.க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில்தான் சென்று கொண்டிருந்தது. எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை என்பது நடத்தப்பட்டு வந்தது. சென்னை ஐகோர்ட்டுதான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. அதுவும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது.

    மேலும் அந்த விசாரணையை கோர்ட்டு கண்காணிப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேவேளையில் மாநில அரசானது தன்னுடைய சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்திருந்தது. அந்த ஆணைய விசாரணை முழு சுதந்திரமாகவும் தொடங்கி நடைபெற்று வந்திருந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது. சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.

    எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் நடுநிலையான ஒரு உத்தரவை கோர்ட்டு இந்த விவகாரத்தில் பிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் சி.பி.ஐ விசாரணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
    • அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சையில் எப்போதெல்லாம் மழையால் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக ஓடிவந்து ஆய்வு செய்து நிவாரணம் அளிப்பதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழை காலத்தில் துணை முதலமைச்சர் விரைந்து வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தினால் தான் கொள்முதல் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.

    அந்தக் குழுவினரும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால் ஈரப்பதம் தளர்வு செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது. இதிலிருந்தே மத்திய பா.ஜ.க அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது தெளிவாக தெரிகிறது.

    தற்போது பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை சேதம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும். அதன் அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பிறகு அவர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்றார்.

    • இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.

    இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.

    மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.

    தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.

    எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
    • மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கியது.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ்.

    சாலை வரி பிரச்சனை தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெற்றுள்ளதாக ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.  

    • தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
    • 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன்.

    * தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை.

    * தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.

    * ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு.

    * டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    * ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும்.

    * ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    * கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

    * புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும்.

    * சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்ழுடும்.

    * ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும்.

    * தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

    * பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார். 

    • தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    * அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    * சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதாவது, 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வந்துள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

    • வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
    • நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,

    * கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.

    * 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.

    * வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.

    * நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    * நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.

    * கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.

    * அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    * நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    * திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×