என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்- தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
    X

    அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்- தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

    • குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
    • அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், அந்த விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. அதனை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது செயலில் உள்ள பிற எந்தச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல், சொத்துகள் தொடர்பான ஒரு ஆவணம் பதிவு செய்ய முன்வைக்கப்படும் போது பதிவு அதிகாரி, அந்தச் சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், மேலும் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட அந்தச் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆவணத்தை பதிவு செய்ய மாட்டார்.

    சொத்து குறித்த விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படாதிருந்தால், அந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட செயல்பாடுடன் நிறைவேற்ற வழக்கு தொடரும் காலக்கெடு முடிவடையாத வரை பதிவு அதிகாரி புதிய ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கான சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

    * குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.

    * பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை என்றால், அந்தச் சொத்திற்கான வருவாய்த் துறை வழங்கிய பட்டா வழங்கப்பட வேண்டும்.

    * அசல் ஆவணம் தொலைந்து விட்டால், போலீஸ் துறை வழங்கிய 'கண்டறிய முடியாத சான்றிதழ்' மற்றும் அந்த ஆவணம் இழந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

    * அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    இவ்வாறு புதிய சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    சொத்தின் அடமானம் என்பது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

    Next Story
    ×