search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#சோதனை"

    • கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
    • வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கோவை:

    பாராளுமன்றத்திற்கு ஏப்.19 முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தேனி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    • சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த வாகன சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நாளை (புதன் கிழமை ) மாலை 6மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

    இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழக முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முற்றுகையிட்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் இறுதி கட்ட விறுவிறுப்பை எட்டி உள்ளது.

    இந்நிலையில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தேனி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரும் முக்கிய பகுதிகளில் முகாமிட்டு வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்க நகைகள் மற் றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மதுரையிலும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை உசிலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உசிலம்பட்டியில் இருந்து உத்தப்ப நாயக்கனூர் நோக்கி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த தேர்தல் பிறக்கும் படையினர் ஆர்.பி உதய குமார் மற்றும் வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் சென்ற வாகனங்களை வழி மறைத்தனர். இதை தொடர் ந்து சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் மற்றும் வேட்பாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகளின் 10 வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பணம் உள்ளிட்ட எவ்வித பொருள்களும் சிக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த வாகன சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேட்பாளருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    • காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
    • சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

    சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிபாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி.சம்பந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் காரைக்காலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வருமானவரி சோதனை குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பா.ஜனதா வேட்பாளரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீடு, பா.ஜனதா வேட்பாளர் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரம் சோதனை.
    • வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் பரபரப்பு.

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.

    பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.

    வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்," எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அருவங்காடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    • வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் சனிக்கிழமை மாலையில் அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 8 நாட்களாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாலை வரையில் ரூ.11கோடியே 41 லட்சம் பணம் பிடிபட்டு உள்ளது.

    இந்த சோதனையில் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சம் மதிப்பி லான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.13 கோடியே 22 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சென்னையில் நேற்று பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 7½ கிலோ தங்கம் பிடிபட்டு உள்ளது. தி.நகரில் 5½ கிேலா தங்கமும், சைதாப்பேட்டையில் 2 கிலோ தங்கமும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கி உள்ளது. சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    • சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

    திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் பொல்லி காளி பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.93,200ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த கே. சாமிநாதன் என்பவர் ரொக்கப்பணம் ரூ.57 ஆயிரத்து 980ஐ முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பறக்கும் படையினரின் சோதனையில், சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

    என்னதான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்த போதும் சில நேரங்களில் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறாக ரொக்க பரிவர்த்தனை வழக்கமாக நடைபெறும் ஒன்று.ஆவணங்களை வைத்து கொண்டு இது போன்ற பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. தேர்தல் நேரத்தில் நடக்கும் பண பட்டுவாடாவை தடுக்க இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

    மாறாக சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் சிறிய வியாபாரிகளே இது போன்ற சோதனையில் சிக்குகின்றனர். பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏற்படும் தேவையற்ற அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    • கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார்.

    அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக பறக்கும் படையினர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினர் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ரெயில்களில் மட்டும் இந்த சோதனை நடைபெறுவதில்லை அதற்கு மட்டும் தேர்தல் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து கண்டு கொள்வதில்லை. இதனால் பணம் கடத்துவோர் ரெயில்கள் மூலம் எளிதாக பணத்தை கடத்தலாம் எனவும் பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரெயில்களிலும் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருபவர் நாகராஜன்(44). இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் இருந்து முட்டை வியாபாரம் செய்துவிட்டு அருப்புக் கோட்டைக்கு வரும் போது தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு தலைவர் மகாலட்சுமி தலைமையி லான குழுவினர் நாகராஜன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு முன்பு அந்த பணத்தை சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    • ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    இதேபோல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 லட்சம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 123 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1417 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 178 வாக்குச் சாடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 கண்காணிப்பு குழுக்களும், 4 காணொலி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளால் காஞ்சிபுரத்திற்கு பட்டு புடவைகள் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் எடுத்து வருபவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படையினர் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்கள், 10 காணொலி பார்வையாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    ×