search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai HC Bench"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2018 ஆகஸ்ட் 14ல் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சி.பி.ஐ. 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இந்த காலக்கெடு 2018 டிசம்பர் 14-ல் முடிந்தது. காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி மீது கூட சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.



    துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நெருங்குகிறது. இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பர நகர் வி.வி.டி. சந்திப்பு அல்லது எஸ்.வி.ஏ. பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ந் தேதி மனு அளிக்கப்பட்டது.

    இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ந் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி பகுதியில் உள்ள உள்கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம்.

    இந்த கூட்டத்தில் அதிகபட்சம் 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டம் நடத்துவோர் போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHCBench
    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #LSPolls #MaduraiHCBench #EC
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அந்த நாளில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் பார்த்தசாரதி நேற்று முறையீடு செய்தார்.

    இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் மிக முக்கிய பாரம்பரிய விழா, சித்திரை திருவிழா. இந்த விழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காண 15 லட்சம் பேர் வரை மதுரையில் கூடுவார்கள். அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். வாக்குப் பதிவு கடுமையாக பாதிக்கப்படும்.

    எனவே அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.


    தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க இயலாது என்றார்.

    அப்போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் குறுக்கிட்டு மதுரை சித்திரை திருவிழா மிக மிக பழமையான முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த விழா ஒருநாள் மட்டும் நடப்பது அல்ல. ஒரு வாரத்திற்கு மேல் நடத்தப்படுகிறது. பல லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரை வந்து விழாவில் கூடுகிறார்கள்.

    இந்த திருவிழா ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது என்பதை தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை.

    இந்த விழாவின் காரணமாக மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வாக்குகள் குறையாதா? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்றனர்.

    மேலும் மாற்றுத்தேதியில் தேர்தல் நடத்தலாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 14-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி விழா, தேனி கண்ணகி கோவில் விழா ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அங்கும் தேர்தல் தேதியை மாற்றலாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #LSPolls #MaduraiHCBench #EC
    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் எப்போது? முழுமையாக மூடப்படும் என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #MaduraiHCBench #Tasmac
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் பஸ் நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது அருந்திவிட்டு வருபவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கின்றனர். இதனால் பெண்கள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே அந்த கடையை மூட வேண்டும் என மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த கடையை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஆளும் கட்சியினர் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.

    அதன்படி இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன? மாவட்ட வாரியாக டாஸ்மாக் வருமானம் எவ்வளவு? முழுமையாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது எப்போது? அடுத்த கட்டமாக எத்தனை கடைகளை மூட உத்தேசிக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் இதுகுறித்து விரிவான அறிக்கையை டாஸ்மாக் விற்பனை மேலாண்மை இயக்குநர் மார்ச் மாதம் 4-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #MaduraiHCBench #Tasmac
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகனை விடுவிக்க கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi
    மதுரை:

    மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித ஆதாரங்களுமின்றி என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முதல் குற்றவாளியான நிர்மலா தேவி என் மீது எத்தகைய குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை.

    அதே போல பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், வழக்கில் தொடர்புடைய விஜய துரை, கலைச்செல்வன் ஆகியோரும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.

    அதோடு, எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடன் சுமையால் தவித்து வரும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    எனவே மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
    கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
    மதுரை:

    அண்மையில் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் பல இடங்களில் கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

    தமிழகத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று (13-ந்தேதி) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



    அப்போது தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும், வெளிப்படையாக தேர்தல் நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனை பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்? என்பது குறித்தும் வருகிற 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் கூட்டுறவு சங்கத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை டிஜிட்டல் முறையாக்கவும், அதனை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHCBench
    திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவரின் கட்சியை சேர்ந்தவருக்கு எம்.எல்.ஏ.பதவி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். #MadrasHCBench
    மதுரை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக இறந்தவரின் கட்சியை சேர்ந்தவரை எம்.எல்.ஏ.வாக ஆக்கலாமே? என்று நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்தனர்.



    மேலும் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களுக்கு தங்களது கருத்து பொருந்தாது என்றும் தெரிவித்த அவர்கள் விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். #MadrasHCBench
    வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் மாற்று வழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. #MadrasHCBench #Tasmac #TNGovt
    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டில் 31,244 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    மதுப்பழக்கத்தால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன.

    மது விற்பனைக்கு எதிராகவும், மதுகடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, மதுக்கடையின் நேரத்தை மாற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் 24 மணி நேரமும் மது கிடைக்கும் போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர்.

    அரசுத்தரப்பில் மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகளும், அரசாணைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், விதிகள் உள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணம் மதுவே. சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.

    வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் அரசு வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகள் வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றலாம்.

    தொடர்ந்து மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலை முறைகளையாவது காக்க வேண்டும் என தெரிவித்து இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #MadrasHCBench #Tasmac #TNGovt

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
    மதுரை:

    தூத்துக்குடியை சேர்ந்த மோகன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசார் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பொது மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

    ஒரு மனிதன் தனது உரிமையை பெற போராடலாம் என சட்ட உரிமை கூறுகிறது. ஆனால் தூத்துக்குடி வட்டாரத்தில் கடந்த 3 மாதங்களாக பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட எவற்றிற்குமே போலீசார் அனுமதி தருவதில்லை.

    போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி அழைக்கழிக்கபடுவதுடன் போலீசார் தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல பொய் வழக்குகளை பதிந்துள்ளனர். தூத்துக்குடி போலீசார் சட்டபடி முறையாக நடக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வக்கீல் குழு பணியில் இருக்க சட்ட உதவிமையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

    15.8.2018 முதல் 15.1.2019 வரை தூத்துக்குடியில் கைது செய்யபட்டவர்களுக்காக மூத்த வக்கீல் அடங்கிய குழுவினை தாலுகா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 3 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு? எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை (30-ந்தேதி) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை நாளை (30-ந் தேதிக்கு) ஒத்திவைத்தினர். #ThoothukudiFiring #MaduraiHCBench
    மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench #Tasmac
    மதுரை:

    கன்னியாகுமரியை சேர்ந்த ரசீத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளன.

    டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் போதையில் தகராறு செய்கிறார்கள். இதனால் அந்த பகுதி பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் எதிர்மனுதாரராக மதுவிலக்கு ஆயப்பிரிவு உள்துறை செயலாளரை சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    விளவங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் நாளை (30-ந்தேதி) மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHCBench #Tasmac
    அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #JactoGeo #MaduraiHCBench
    மதுரை:

    ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே ‘‘21 மாத நிலுவைத்தொகை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ ஜாக்டோ- ஜியோ சார்பில் புதிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


    அப்போது ‘‘அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ரீதியாக அணுகாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள். நீங்கள் தற்போது குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக புதிதாக உத்தரவு ஏதும் பிறக்க முடியாது’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து வழக்கை பிப்ரவரி 18-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #JactoGeo #MaduraiHCBench
    ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயணப்படி வழங்குவது தொடர்பாக 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench
    மதுரை:

    ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என வந்த தகவலை, மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அதற்காக அவர்கள் இரு சக்கர அல்லது 4 சக்கர வாகனங்களில் செல்வர்.

    அவ்வாறு பணி காரணமாக செல்லும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான பெட்ரோல் படி வழங்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

    இதற்காக அவர்கள் தங்களின் ஊதியத்தை செலவிடும் நிலை உள்ளது. காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுவது அடிக்கடி நிகழும் சூழலில் இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் ரோந்து பணிகளில் ஈடுபடுவதை காவல்துறையினர் தவிர்க்கும் சூழலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

    எனவே, ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான படியை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கிராமப்புற, நகர்புறங்களுக்கு ரோந்து பணிகளுக்குச் செல்லும் காவலர்களுக்கு அவர்கள் ரோந்துப்பணி செல்லும் பகுதிகள், வாகனங்களின் எண்ணிக்கை, செலவாகும் எரிபொருள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயணப் படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை பயணப்படியாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு, 2 மாதத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடுவதாக கூறி, வழக்கை முடித்து வைத்தனர். #MaduraiHCBench
    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #MaduraiHCBench
    மதுரை:

    தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் விவசாய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் துண்டு துண்டானது. தென்னை விவசாயத்தில் வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம் வரும்.



    ஆனால் சேதமடைந்த தென்னை ஒன்றுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ. 1,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது போதுமானதாக இல்லை. எனவே தென்னை ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் மரங்கள் விழுந்துள்ளதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றவும், தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர், விவசாயத் துறை செயலாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #GajaCyclone #MaduraiHCBench
    ×