search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10-15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
    • மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரெயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே மெயில் ரெயில் (எண். 12623/12624) தினமும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரெயில் ஜூலை 15 முதல் சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு (15 நிமிடங்கள் முன்பு) புறப்பட்டு மறுநாள் காலை 11.30 பதிலாக காலை 11.20 மணிக்கு (10 நிமிடங்கள் முன்பு) திருவனந்தபுரம் சென்றடையும்.

    இந்த ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10-15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரெயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் கேரளா அதிவிரைவு ரெயில் (எண்.12623) ஜூலை 15 முதல் வழக்கமாக பிற்பகல் 12.30 மணிக்கு பதிலாக (15 நிமிடங்கள் முன்பு) பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.

    திருச்சூர் வரையுள்ள நிறுத்தங்களில் 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் இந்த ரெயில் அங்கிருந்து டெல்லி வரை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

    சென்னை சென்ட்ரல்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே இயங்கும் அந்தமான் விரைவு ரெயிலில் (எண்.16031/16032) மார்ச் 21 முதலும், சென்ட்ரல்-லக்னோ விரைவு ரெயில்கள் (எண்.16093/16094) மார்ச் 23 முதலும் தலா ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,080-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,135-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர்.

    திருச்சுழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலன் உத்தரவின் பேரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊராட்சி பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதி ளிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொது மக்களை சந்தித்து வரும் தேர்தல் அலுவலர்கள், மேற்பார்வையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் நேரில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட மைலி கிராமத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் திருச்சுழி உதவி வாக்குப்பதிவு அலுவலரான ராஜேஸ் மற்றும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா மற்றும் சரவணக் குமார் ஆகியோரும் பொது மக்களை நேரில் சந்தித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விளக்கமாக எடுத்து ரைத்தனர்.

    கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர். அந்த பகுதியில் 300 வாக்குகள் இருந்த நிலையில் மதியம் வரை 4 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பிறகும் கூட மிக மிக குறைவான இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வாக்குகளே பதிவானது.

    இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறை வேற்றி 100 சதவீத வாக்குப் பதிவை பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    • அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக்கொண்டிருப்பவர்.
    • பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பற்றி கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ம.க.வை கொண்டுவர தமிழக பா.ஜனதா கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக்கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.

    ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார் என்று கூறினார்.

    • இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பது பாலிமெலியா எனப்படுகிறது.
    • 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள தென்னந்திரையான்பட்டி (முள்ளூர்) கிராமத்தை சேர்ந்த ஞானசேகரந்ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகின்றனர். இவர்களது பசு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு வழக்கத்தை விட 2 கால்கள் அதிகமாக மொத்தம் 6 கால்கள் காணப்பட்டன. இதை அந்த பகுதி பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுபற்றி கால்நடை துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் வந்து பசுவையும், கன்றினையும் பார்வையிட்டார். பின்பு அவர் கன்றுகுட்டியை ஆய்வு செய்தார். அதன் இதய துடிப்பு, மூச்சுக்காற்று, வெப்ப ஓட்டம் சீராக உள்ளதை அறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

    இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பது பாலிமெலியா எனப்படுகிறது. இவை மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்படும் மாற்றத்தினாலும், கதிர்வீச்சு, வேதியியல், விட்டமின் மாற்றத்தினாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக தெரிவித்தார். எனினும் கன்றுகுட்டிக்கு குடற்புழு நீக்கம் மருந்து, கால்சியம் கலவை கொடுத்து நல்லமுறையில் வளர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
    • குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

    கிரி வீதி வரை நடந்து பின்னர் பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தங்க ரதம் இழுக்க பெயர் பதிவு செய்தார். அதில் வரிசை எண் 102ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்க ரதம் இழுக்க பணம் கட்டினார்.

    தங்க ரத நிலை 1-ல் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தார். அதன் பின்பு மூலவர் தண்டாயுதபாணியை மனமுருகி வழிபட்டார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் தனது குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மதியம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது.
    • தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,

    10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. பாராளுமன்ற தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். பாஜக உடன் இணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். தமிழக மக்கள் வலிமையான கூட்டணிக்கு ஆதரவு தருவார்கள். பாமக போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

    • நெல்லை பாராளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
    • 2019-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 3 முறையும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1952, 1957, 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தாணுபிள்ளை பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 2004-ம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டு வெற்றி கண்டார். இதேபோல் 2009-ம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார்.

     

    நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்த படம்.

    நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்த படம்.

    2019-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது.

    2014-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியிடுகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    • அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பா.ஜனதா உடன் பாமக கூட்டணி.
    • இன்று காலை நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    தமிழகத்தில் மக்களை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.

    அதிமுக, பா.ஜனதா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்று வரை அதிமுக கூட்டணியில்தான் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என பாமக திடீரென அறிவித்தது. அதன்படி நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

     அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்றனர். அண்ணாமலையை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.

    பின்னர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் சில சந்தேகங்களை அண்ணாலையிடம் எழுப்பினார். இது தொடர்பாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவிக்க அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் உடன் தனிஅறையில் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • கரூரில் அண்ணாலை போட்டி, தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் என செய்தி வெளியானது.
    • மொத்தம் 14 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது செய்தி என வெளியிடப்பட்டிருந்தது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அண்ணாமலை மற்றும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவில் தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது போல் செய்தி வெளியானது. அந்த செய்தியில் தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் விஜயதாரணி போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மொத்த 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த செய்தி போலியானது. தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என தமிழக பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.

    ×