search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருப்பதால் என்ன பயன்?: எடப்பாடி பழனிசாமி காட்டம்
    X

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருப்பதால் என்ன பயன்?: எடப்பாடி பழனிசாமி காட்டம்

    • தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது.
    • தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் திரைமறைவு நாடகம் நடத்தி வருவதாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

    ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

    தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பா.ஜனதாவை தாக்கி பேசி வருகின்றனர்.

    வடமாநில தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் சேலத்தில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதாவை விமர்சனம் செய்ததுடன் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் கடுமையாக சாடினார்.

    தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது.

    தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப்பெற உதவாத இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருந்து என்ன பயன் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

    அது மட்டுமின்றி மத்தியில் தப்பித்தவறி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு அதனால் என்ன லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    காவிரியில் தமிழகத்தின் பங்கை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்துக்கான உரிமையை கேட்டுப் பெறவும் முடியவில்லை என்று அவர் தொடர்ந்து சாடி வருகிறார்.

    இதே கருத்தை தான் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் தொடர்ந்து பேசி வருகிறார். மத்தியில் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. காவிரி தண்ணீருக்காக போராட வேண்டி உள்ளது.

    எனவே மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து தமிழக பிரச்சனைக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.

    பா.ஜனதா கட்சியை அ.தி.மு.க. தாக்கி பேசுவதால் காங்கிரசை ஆதரிப்பதாக மக்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் இரு கட்சிகளுக்கும் எதிரானவர்கள். இரு தேசிய கட்சிகளிடம் இருந்தும் சமமான இடைவெளியை கடைபிடித்து வருவதாகவும் தமிழக நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

    Next Story
    ×