என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்வு"

    • ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இம்மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

    புதுடெல்லி:

    அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். மதிய உணவு இடைவேளையில் நண்பர்களுடன் உட்கார்ந்து விஷ்ணுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    விஷ்ணுவும் அவனது நண்பர்களும் சாப்பிடும் போதுதான் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசித் தெரிந்து கொள்வார்கள்.

    விஷ்ணுவின் நெருங்கிய நண்பனான பத்ரி ஓரளவு நாட்டு நடப்புகளைத் தெரிந்து வைத்திருந்தான். எனவே எந்த சந்தேகம் என்றாலும் விஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் பத்ரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். பத்ரியும், தனக்கு தெரியவில்லை என்றாலும் அது பற்றி விசாரித்து சொல்லி விடுவான்.

    அன்றும் அப்படிதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு, என்னடா பத்ரி புதிய தேசிய கல்விக் கொள்கைனு ஒண்ணு கொண்டு வராங்களாமே, என்னடா அது? என கேட்டான்.

    அதுவா, ஏற்கனவே உள்ளதுதாண்டா, அத இன்னும் கொஞ்சம் விளக்கமா இருக்கும். அதாவது, நாம் படிக்கிற படிப்பு வெரும் தியரியா இல்லாம, பிராக்டிக்கலாவும் நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும். நம்ம படிப்பு சார்ந்த வேலையும் உடனே கிடைக்கும் அல்லது நாமே பிசினசும் தொடங்க முடியும். இதுக்குதான் மத்திய அரசு தற்போதைய பாடத்திட்டங்கள்ல மாற்றம் கொண்டு வந்துருக்கு என்றான் பத்ரி.

    ஆமா, நான் கூட கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் எல்லாம் மாற்றம் செய்யப் போறாங்களாமே அப்படியா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டான் விஷ்ணு.

    அது கரெக்ட் தான். சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை இரு முறை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றான் பத்ரி.

    அப்படியா, அதுபத்தி சொல்லு கேட்போம் என்றான் விஷ்ணு.

    பொதுத் தேர்வை இரு முறை எழுதுவது தொடர்பாக பத்ரி கூறியதன் சாராம்சம் இதுதான்:


    மத்திய கல்வி மந்திரி தலைமையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.

    உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.

    இந்நிலையில், பொதுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது.

    அனைத்து மாணவர்களும் எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவார்கள். ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால் மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும் எழுதிக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

    இதன்படி, பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்கட்டமாக பிப்ரவரியிலும், இரண்டாம் கட்டமாக மே மாதத்திலும் பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.


    பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு வரவிருக்கும் 10-ம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்த மாணவர்கள், தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கு 9,10-ம் வகுப்புகளின் அனைத்துப் பாடங்களையும் இரு ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். வழக்கமான பள்ளியில் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவை அவர்கள் பராமரித்திருக்க வேண்டும் எனவும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது என்றான் பத்ரி.

    பரவாயில்லையே, இப்படி இரு தடவை வாய்ப்பு கிடைச்சா நாம் முதல் கட்ட தேர்வில் மார்க் குறைஞ்சாலும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதிக்கலாம் இல்லையா என்ற விஷ்ணு, ஆனா மறுபடியும் முதல்ல இருந்தே படிக்கணும் இல்ல, அதான் யோசனையா இருக்கு என்றான் விஷணு.

    யாருக்கு தேவையோ அவர்கள் 2வது முறை பொதுத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது நல்ல ஐடியாதான் எனக்கூறிய படியே மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.

    • கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
    • அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அரசு தேர்வுத் துறை தயாரிக்க இருக்கிறது. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு ('எமிஸ்') தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்கவும், அதில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதிக்குள் விவரங்களை சரிபார்க்கவும், திருத்தங்கள் இருந்தால் அதனை மேற்கொள்ளவும், விவரங்களை பின்னர் பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
    • 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று வெளியிட்டார். அதன்படி,

    * பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும்.

    * 8.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

    * பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    * பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

    * 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.

    * 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படும்.

    * 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந்தேதி வெளியிடப்படும்.

    • பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
    • தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சிபிஎஸ்இ 10  ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.

    பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்தவகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் வெளியாகலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பொதுத்தேர்வை நடத்த இருக்கும் அரசு தேர்வுத்துறை, பொதுத்தேர்வு தொடர்பான அட்டணைகளை தயாரித்து, அதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்திருப்பதாக சொல்லப்படுகின்றன. அதன்படி, தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு 2026-ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தேர்தல் அனேகமாக ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என சொல்லப்படும் சூழலில், அதற்கேற்ப பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த அட்டவணை உறுதிசெய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை வசம் வந்துசேரும் எனவும், அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார் எனவும், அதன்படி, நவம்பர் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது உத்தேச அட்டவணை என்றும், பள்ளிகள் மாணவர்களின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.

    இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

    • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
    • 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி உறுதி செய்யப்படும். நடப்பு கல்வியாண்டே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதால் மாணவர்களின் அழுத்தம் குறையும். மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வாய்ப்பாக இருக்கும் என்ற கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
    • வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

    சென்னை:

    மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக்கூடிய சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    * சி.பி.எஸ்.இ. தேர்வு துணை சட்ட விதி 13 மற்றும் 14-ன்படி, மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.

    * வருகைப் பதிவு 75 சதவீதம் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.

    * சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

    * வருகைப்பதிவு தினமும் புதுப்பிக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கிடைக்க செய்யவேண்டும்.

    * மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதையும், வருகைப்பதிவு விவரத்தையும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு பதிவு செய்யப்பட்ட விரைவு தபால், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகள் தெரிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
    • எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.

    ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.

    திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

    எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.

    அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
    • பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்று முடிந்த மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி எழுதி, விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் Notification என்ற பகுதியில் 30.06.2025 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் முதல் வெளியிடப்படவுள்ளது.

    இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.
    • விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட பரிசளிப்பு அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது.

    மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் 3 கட்டங்களாக பரிசளிப்பு விழாவை நடத்த கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் தகுந்த பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளும் த.வெ.க. சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவுபடி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    ×