search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறிமுதல்"

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    இதேபோல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 லட்சம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்து உள்ளது. காங்கிரஸ் பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு கரீம் நகர் உதவி போலீஸ் கமிஷனர் நரேந்தர் தலைமையிலான போலீசார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அங்குள்ள அறை ஒன்றில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ரூபாய் நோட்டுகள் எண்ணும் எந்திரம் மூலம் பணத்தை எண்ணினர்.

    அப்போது ரூ.6.65 கோடி இருந்தது தெரியவந்தது. மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் நரேந்தர் கூறுகையில்:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த பணத்தை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
    • கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    குந்துகால் கடல் பகுதி வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள அண்டை நாடான இலங்கைக்கு இங்கிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து வரி ஏய்ப்பு செய்து தமிழகத்திற்கு தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கடத்தலும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    இதனை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படை, கடற்படை போலீசார், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகுகள், சுங்கத்துறை உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தபோதிலும் அதனையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    சமீபத்தில் இரண்டு முறை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலும், அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல் கும்பல் தங்க கட்டிகளை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் ரவி அற்புதராஜ் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவில் பாம்பன் முந்தல்முனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்களை வருவதை பார்த்ததும் அந்த படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    இதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றியதோடு, தங்கம் கடத்தி வந்த நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து பாம்பன் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    தங்கம் கடத்தி வந்த மர்மநபர்கள் யார், எங்கு தங்கியிருக்கிறார்கள், யாருக்காக இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    60 பேர் கொண்ட படையினர் 4 குழுக்களாக பிரிந்து 180 கிலோ மீட்டர் கடல் பரப்பில் நேற்று சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில் மறுநாளான இன்று இலங்கையில் இருந்து துணிச்சலாக தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது கடலோர காவல் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

    ×