search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து"

    • லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
    • விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

    ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

    இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரிப்பது போன்று இருந்து வந்துள்ளனர்.
    • மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை. இவரது மனைவி ஜெயம் (வயது 65). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ஜெயம் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் உள்ள சொத்துகளும், வேறு இடங்களில் சில நிலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

    கணவரும் இறந்து விட்டார் வாரிசுகளும் இல்லாமல் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரிப்பது போன்று இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை பராமரித்து வந்த அவரது உறவினர் ஒருவர் ஜெயத்தை வீட்டில் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளார்.

    தொடர்ந்து, அவருக்கு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். இப்படியே நாட்கள் செல்ல செல்ல பூட்டிய வீட்டில் ஜன்னல் வெளிச்சத்தில் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல், உடம்பில் உடை கூட இல்லாமல், உடல் மெலிந்த நிலையில் தனிமையில் மூதாட்டி தவித்து வந்துள்ளார்.

    மேலும், அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்தும், அதே இடத்தில் உறங்கியும் பரிதவித்து வந்துள்ளார்.

    நாளடைவில் அந்த பகுதியை கடந்தாலே துர்நாற்றம் கடுமையாக வீசுவதாலும், ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டியை காப்பாற்றுவதற்காகவும் சிலர் அந்த மூதாட்டியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்:-

    தனியாக இருந்த மூதாட்டியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக, பராமரிப்பது போன்று நடித்து சுமார் 6 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து தினமும் ஒரு வேலை உணவு மட்டுமே கொடுக்கின்றனர்.

    அதிலும் தற்போது எப்போதாவது தான் உணவு கொடுக்கின்றனர். மூதாட்டியின் இந்த நிலையை பார்த்து நாங்கள் மனவேதனையில் உள்ளோம் என்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    வாழ்க்கையின் இறுதி காலத்தில் துணை யாரும் இல்லாமல் வேதனையின் உச்சத்தில் தவித்த இந்த மூதாட்டிக்கு வந்த நிலைமை அக்கம் பக்கத்தினர் மட்டுமின்றி வீடியோவை காணும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை ததும்ப வைத்தது.

    • நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
    • சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று தெளிவுப்படுத்தி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவரது மகன் மோசஸ். இவருக்கும், அக்னஸ் என்கிற கற்பக தேவிக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. கற்பக தேவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மோசசை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மோசஸ் இறந்துவிட்டார். அவர், தனது சொத்து குறித்து எந்த உயிலையும் எழுதிவைக்கவில்லை.

    இதையடுத்து, மோசசின் சொத்துகளில் பங்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அக்னஸ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.முனுசாமி, ''இந்திய வாரிசுரிமை சட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கான சட்டம் பிரிவு 33 மற்றும் 33-ஏயில் மகன் தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரது சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும். தாய்க்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    மோசசின் தாய் பவுலின் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக வக்கீல் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அவர், ''கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. மனைவியோ, குழந்தைகளோ இல்லாதபட்சத்தில் தந்தைதான் மகனின் சொத்துக்கு வாரிசு ஆவார். தந்தையும் இல்லையென்றால் தாய், சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில், ''இந்த வழக்கில் மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும், தாய் பங்கு கேட்க முடியாது என்றும் ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு (ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன்) 2021-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாகை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டு தீர்ப்பையும், வாரிசுரிமை சட்டத்தையும் கவனிக்காமல் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த ஐகோர்ட்டுக்கு உதவிய வக்கீல் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதியில் வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பெருமளவு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஏராளமான கட்டிடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. இரு வார்டுகளில் நடத்திய ஆய்வில் 309 சதவீதம் அளவு வரி விதிப்பில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தங்கள் பகுதியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து இதனை சரி செய்து, முறையான வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கால அவகாசம் இம்மாத இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து அதற்கு முன்னதாக உரிய வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்புகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக மற்றும் வணிகரீதியான மின் இணைப்புகள் பெற்ற கட்டிடங்கள் குறித்த விவரங்கள் மின் வாரியம் மூலம் பெறப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என்றார்.

    • அரியலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது தம்பி மகன் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
    • சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்தனர் என விசாரணையில் தெரிய வந்தது


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மகன்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.கீழப்பழுவூரை அடுத்த வாரணவாசி அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரா. மணி (63). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மணியின் தம்பி கணேசன் மகன்களான அருண்குமார்(29), மோகன்ராஜ்(27) ஆகிய இருவரும் மணியை கொலை செய்தது தெரியவந்தது.மேலும் விசாரணையில், மணியின் இரண்டாவது மனைவியான பிரேமாவும், மணியின் தம்பி கணேசனின் மனைவியான மோகனவள்ளியும் அக்கா, தங்கை என்பதும், திருச்சி புள்ளம்பாடி அடுத்த விரகாலூர் கிராமத்தில் உள்ள அவர்களது பெயரிலுள்ள கூட்டுப் பட்டாவை பிரித்துத்தர மணி மறுத்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மோகனவள்ளியின் மகன் அருண்குமார், மணியை கொலை செய்ததும், இக்கொலைக்கு மோகன்ராஜ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



    • பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    ஈரோடு, திருப்பூர், கோவையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தினர் நிதி மோசடியில் ஈடுபட்டதால் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் மற்றும் காங்கேயம் கண்டியன் கோவில் கிராமத்தில் உள்ள அசையா சொத்துக்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று பகல் 12 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்:202) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் தந்தைக்கு தீவிர சிகிச்சை
    • நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை பெருங் கடையை சேர்ந்தவர் பவுல் (வயது 73). இவரது மனைவி அமலோற்பவம் (70). இவர்களுக்கு மோகன்தாஸ் (52) என்ற மகனும் 2 மகள் களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    மோகன்தாஸ் தொழி லாளியாக வேலை செய்ததுடன் ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மோகன்தாஸ் தாய்-தந்தையுடன் வசித்து வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக மோகன்தாசுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு மோகன் தாஸ் குடிபோதையில் தாய்-தந்தை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவம் சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவுலை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்தாஸ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதனால் எனக்கும், எனது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அவரது சொத்துக்களை எனக்கு தரவில்லை.

    எனது சகோதரிகளுக்கு மட்டும் கொடுத்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முக்கடல் அணை பகுதியில் கிடந்த நிலம் ஒன்றை விற்பனை செய்தார். அதன் மூலமாக ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தில் ரூ.15 லட்சத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத் தார். மீதமுள்ள பணத்தை அவர் வைத்திருந்தார்.

    நான் அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தை பவுல், தாயார் அமலோற்பவத்தை வெட்டினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட மோகன்தாஸை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார்.
    • 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர்

    திருப்பூர் :

    திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் இன்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்குவயது 85. எனது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார். எனது பிள்ளைகள் ஆசைவார்த்தைகள் கூறி எனக்கு சொந்தமான வீடு, 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர். எனக்கு எந்த ஜீவனாம்சமும் தரவில்லை.

    எனவே முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார். 

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து கேட்டு தாய், தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமான்தேவன்பட்டியை சேர்ந்தவர் முத்து(75). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு மணிமாறன் என்ற மகனும், 2மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சொத்துகளை தனது பேரில் எழுதி வைக்குமாறு மணிமாறன் தந்தையிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் 2மகள்கள் இருப்பதால் 3பேருக்கும் சரிசமமாக சொத்தை பங்கீடு செய்துதான் தரமுடியும் என முத்து கூறியுள்ளார்.இந்த நிலையில் சம்பவத்தன்று சொத்துக்களை எழுதி வைக்க கேட்டு மணிமாறன் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமாறன் பெற்றோரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023 - 24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை செலுத்துவதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    மேலும் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரிகளில் தங்களது இல்லம் தேடிவரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகம் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆகையால் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
    • மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.

    கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    அதன்படி மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வி.ஏ.ஓ சங்கீதா முன்னிலையில் கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கனக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீட்கப்பட்ட இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

    ×